கற்பிதங்களை கட்டுடைத்த ‘அவ்வை’ மயிலை பாலு

டிசம்பர் இரண்டாம் தேதி சென்னை பெசன்ட் நகரின் கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்பேசஸ் அரங்க வளாகம் நிரம்பி வழிந்தது. எப்பொழுது நாடகம் தொடங்கும் என்ற ஆர்வம் மேலிட நின்றவர்களுக்கு வழி திறக்கப் பட்டாலும் உட்கார இடமில்லை. கவிஞர் இன்குலாப் மீதான பிணைப் போடும் அவரது படைப்பின் மீதுள்ள ஈர்ப்பாலும் தான் இந்தப் பெருந்திரள் கூட்டம். இன்குலாபின் எண்ணத்திலும் எழுத்திலும் வடிவம் பெற்ற ‘அவ்வை’ நாடகம் அன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

‘உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது’ என்று தமது மரணம் குறித்த கடிதத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதியிருக்கிறார். இறப்போடு உடலியக்கத்தின் வாழ்க்கை முடிந்து போகலாம். ஆனால் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், மக்களின் மனஎழுச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தவர்கள், அழுகிப் போய் அழிக்கப்பட வேண்டிய முதலாளித்துவ சமுதாயத்திற்கான மாற்றினை அடையாளம் காட்டியவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் சாவதில்லை. மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த உண்மையை மெய்யாக்குவதாகத்தான் தோழர் இன்குலாபின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நாடகம் மரப்பாச்சிக் குழுவின் வழியே, அ.மங்கை நெறியாள்கையில் இன்குலாப் வாழும் போதே இரண்டு முறை நடத்தப்பட்டது. இப்போது அவரின் மரணத்திற்குப்பின் நடத்தப்பட்டது.

அவ்வையார் என்ற முதுமைத் தோற்றம் மக்கள் மனங்களில் எவ்வாறு பதிய வைக்கப்பட்டது? அறிவுரைப் பாடல்கள்தான். ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நன்னெறி போன்ற நூல்களிலுள்ள நீதி நெறிகளால் வயது மூத்த அவ்வையார் உருவகிக்கப்பட்டார்.  அவ்வையார் திரைப்படத்தில் இளம் பெண்ணாகத் துவக்கக் காட்சியில் காட்டப் பட்டாலும் பின்னர் பிள்ளையாரின் ‘அருளால்’ அவர் முதிய வடிவம் பெறுகிறார். இந்தக் கருத்தோட்டம் பின்னர் கல்விக் கூடங்கள் வழியாக மேலும் வலுப்படுத்தப்பட்டது. தமிழ் அகர வரிசையில் ‘அவ்’ என்ற எழுத்திற்கு ‘அவ்டதம்’ என்ற வடமொழிச் சொல்லை அறிமுகம் செய்வதைவிட அவ்வையார் என்ற தமிழ்ப் பெயரையே சொல்லித் தரலாம். இதனால் அவ்வை என்றாலே பாட்டி என்றாக் கப்பட்டு மாறுவேடப் போட்டிக்கு மாணவ மாணவியர் தேர்வு செய்வதில் ஒன்றானது.

சங்க இலக்கியங்களில் உள்ள அவ்வையார் பாடல்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட நீதி நூல்களின் வரிகளே அவ்வைக்கு சொந்தமாக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக,

“உண்டி சுருங்கல்

பெண்டிர்க் கழகு

கற்பெனப் படுவது

சொல்திறம் பாமை”

போன்ற வரிகளுக்கு அழுத்தம் தரபட்டன. அவ்வையார் என்ற மூதாட்டி வடிவத்தைக் கொண்டு ஆணாதிக்க கருத்துக்கள் நிலை நாட்டப்பட்டன.

இதற்கான இடங்கள் குறித்த காட்சிகள் நாடகத்தின் தொடக்க நிலையில் வருகின்றன. நான்கு சுவர்களுக்குள் எப்படி சுதந்திரமற்ற கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பதை மூங்கில் கொம்புகளைக் கொண்டே காட்சிப் படுத்தப்படுகின்றன.

அவ்வை குறித்த கட்டுக் கதைகள் பலவற்றையும் உடைத்தெறிந்து, கூன் விழக் குனிந்து, கையில் கோலூன்றி, நிற்கும் கிழவியல்ல சங்ககால அவ்வை என்பதைச் சொல்லும் விதமாக பார்வையாளர்களை ஒரே நொடியில் வியப்பில் ஆழ்த்தும் அடுத்த காட்சி அமைகிறது.

“பாடினி வந்தாள் பாடினி வந்தாள்” என்ற வரியுடன் தொடங்கும் சங்ககால இளம் அவ்வையின் ஆடலும் பாடலும் தாளமும் இசையும் சில மணித் துளிகள் நம்மை உறையச் செய்து விடுகின்றன.

அதியன்  (அதியமான்) அதிகாரம் செய்யும் அரசன் அல்ல. மக்களுக்கு நல்லது செய்தல் வேண்டும் என்னும் அவாவுடையவன். அவன் மக்கள் தொண்டன். போரை விரும்பாதவன்; வலிந்து போர் திணிக்கப்பட்டால் உறுதியாக எதிர்த்து வாகை சூடும் ஆற்றலாளி. தொண்டைமானுக்கு வலிய போர் செய்யும் ஆசை இருப்பதை அறிந்து அவ்வையிடம் சொல்கிறான். தமது தூதராகச் சென்று போரைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறான். வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு எடுத்துக் காட்டாக பள்ளிப் பருவத்தில் படிக்கும்போது கண் முன் வந்தது அவ்வைப் பாட்டி உருவம்தான். ஆனால் கம்பீரமாகத் தூது சென்று அதியனின் வீரதீரத்தை அங்கதச் சுவைகொண்ட பாடலால் எடுத்துச்சொல்லி அமைதியை ஏற்படுத்துகிற அவ்வை வித்தியாசமாகவே காட்டப்படுகிறாள்.

ஆணாதிக்கத்திற்கு சார்பாக நின்று நீதி போதித்த அவ்வைப் பாட்டியிலிருந்து முற்றிலும் வேறுபட்டவள் சங்ககால இளம் அவ்வை என்பதற்கு மேலும் ஒரு சான்று:

“நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ

அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நலனே”

என்கிற பாடல். நாடோ, காடோ, மேடோ, பள்ளமோ நிலப்பரப்பில் பெண் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மாற்றி ஆண் ஒழுக்கமாக – நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறாள் சங்ககால அவ்வை.

இப்படி எல்லா வகையிலும் மாறுபட் டிருக்கும் அவ்வையின் உண்மைத் தோற்றத்தை ஊகிக்க வைப்பதற்கு சங்க இலக்கியங்களி லிருந்து சான்று காட்டி நிறுவும் மேதைமையை அவ்வை நாடகம் வெளிப்படுத்துகிறது.

இளம் அவ்வை பாணர் மரபினள். பாடினியாக ஊர்கள் தோறும் திரிந்தவள். அதியமான் நெடுமான் அஞ்சியிடம் கூடுதலாகப் பிரியம் காட்டியவள்.

“சிறிய கள்பெறினே எமக்கீயும் மன்னே

பெரிய கள்பெறினே தானுண்டு எமக்கும்

ஈந்து மகிழும் மன்னே”

என்று அதியனுடன் சமதையாகக் கள்ளும், கறிசோறும் உண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தவள் என்பது சான்றுப் பாடல்களுடன் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் காதல் உளவியலைப் பல பாடல்களில் பதிவு செய்திருப்பவள் அவ்வை. காதலன் பெயரையோ ஊரையோ ஒருவர் சொன்னால் திரும்பச் சொல்லிக் கேட்கும் ஆர்வம் பெண்களிடம் இயல்பாக ஏற்படும்.

“அகவன் மகளே அகவன் மகளே

பாடுக பாட்டே

அவன் நன்னெடுங் குன்றம்

பாடிய பாட்டே”

என்ற குறுந்தொகைப் பாடலை மூதாட்டியாக இருக்கும் அவ்வையாரா பாடியிருக்க முடியும்?

காதலிலே சற்று சறுக்கல் ஏற்பட்டக்கால் உணர்ச்சிப் பீறிட்டு,

“முட்டுவேன் கொல்

தாக்குவேன் கொல்

ஓஓ ஒல்லெனக்

கூவுவேன் கொல்”

என்று பாடும் துடிப்பில் இளம் அவ்வையைத் தான் காண முடிகிறது.

ஆயுளைத் தீர்க்கமாக்கும் என்ற நம்பிக்கையோடு நெல்லிக் கனியை அவ்வைக்கு அதியன் கொடுக்கும் காட்சியும் அவள் மறுக்கும் காட்சியும் இறுதியில் அதியனே வென்று அவ்வை நெல்லிக் கனியை உண்டு சுவைக்கும் காட்சியும் இளம் அவ்வையைத் தான் நெடுநாள் வாழ அதியன் ஆசைப்பட்டிருப்பான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

இந்நாடகத்தில் அவ்வை யாராக ஐந்து பேர் வருகின்றனர். இப்போதும் காட்சிப் படுத்தப் பட்டு சென்னை கடற்கரை சாலையில் கையில் கோலுடன் நிற்கும் அவ்வைப் பாட்டி – இந்தத் தோற்றத்தில் வரும் சௌமியாவும், பாடினி எனும் இளம் பருவ அவ்வையாக வரும் தமிழரசியும், தொண்டைமானிடம் தூது போகும் அவ்வையாக வரும் யாழினியும், இளம் பருவத்தின் இன்னொரு கால நிலையினளாக வரும் அஸ்வினியும் மாறுபட்ட அவ்வைகளைக் கண் முன் நிறுத்துகின்றனர்.

உச்சகட்ட காட்சியில் இளம் அவ்வையும் முதிய அவ்வையாரும் சந்தித்து கருத்து மோதலோடு விவாதம் நடைபெறுகிறது.

இந்தக் காட்சியில் இரண்டு அவ்வையார் களும் வேறு வேறானவர்கள் என்பதைத் தெளிவுபடுத்த ஈழத்து அவ்வையார் வருகிறார். அந்த அவ்வையார் தோற்றத்தில் வரும் ஆயிஷா, தோழர் இன்குலாபின் பெயர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்குலாப் உடல் சுமந்து நம்மிடையே வந்தமர்ந்து உரையாட வாய்ப்பில்லை என்பது உண்மை. ஆனால் உடலின் வாழ்க்கையை வென்று காலத்துக்கும் வழிகாட்டிக் கொண்டே இருக்கும் அவரது படைப்புகள் என்பது வெறும் புகழ்ச்சியில்லை என்பதற்கு நாடக அரங்கம் இளம் தலைமுறையினரால் நிரம்பி வழிந்தது சான்று பகர்ந்தது.

நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களும் தொழில்நுட்பாளர்களும் உயிர்ப்போடு நாடகம் நடத்துவதற்கு உறுதுணையாய் இருந்தனர். கலை இலக்கிய வரலாற்றில் இன்குலாப் காலம் என்பதொன்று மலர்ந்துள்ளது. அவரைப் பின்பற்ற மேலும் பலர் வருவார்கள் என்பதை அவ்வை நாடக நிகழ்வு உணர்த்தியது.

(கட்டுரையாளர் – பத்திரிகையாளர் – மார்க்சிஸ்ட்)

 

நிமிர்வோம் டிசம்பர் 2017 இதழ்

You may also like...