அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்
1917இல் நிகழ்ந்த சோவியத் அக்டோபர் புரட்சிக் குறித்து
1933இல் பெரியார் எழுதிய கட்டுரை
ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர்அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக் கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச்செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பலசூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சிமுறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பிஅந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந்திருக்கின்றன வென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வருகின்றனர். ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடைமுறையில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ருஷியாவில் தனியுடைமை யொழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சியும், அறிவும் குன்றிஉற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவறொன்று தானே இன்று ஒத்துக் கொள்ளும்படி செய்துவிட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவைஅலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலேசமதர்ம ஆட்சியின் திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண் டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாக்ஷண்யமாகத் தண்டித்து வருவதை நியாய புத்தியுள்ள எவரும் தவறென்றுகூறத் துணியார். ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிகமில்லையென்று கூறப்படுகிறது. தனி மனிதனுடைய சுதந்திரத் திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார்சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானு கோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினியாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே பட்டினி யென்றால் இன்னதென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என் செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக் கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்ற கவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள
எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் திடுக்கிடச் செய்துவிட்டதென்பதை நன்கு அறியலாம்.
ஐந்து ஆண்டு திட்டம்
பஞ்சத்தாலும் கொடுங்கோன்மை யினாலும் பொருளாதார நிலையிற் மிக மிகக் கேவலமாயிருந்த ரஷியாவை உன்னத நிலைக்குக் கொண்டுவர சோவியத் ஆட்சியினர் 5 வருடத் திட்டமொன்று தயாரித்து ஐந்து ஆண்டு களுக்குள்இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டுமென்று திட்டம்போட்டுக் கொண்டு வேலை ஆரம்பித்தனர். வேலையற்று, கொள்ளையும் விபசாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில் முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக் கோரி உழைக்க ஆரம்பித்து விட்டனர். பொருள் உற்பத்தி ஐந்து வருடத் திட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி பெற்று விட்டது. தங்கள் ஆட்சி முறையைப் பற்றி பெருமை பேசிக் கொண்டு கர்வம் கொண்ட ஐரோப்பாவும், அமெரிக்காவும் உலக வர்த்தகத்தில் ரஷியப் போட்டியை எதிர்த்து போராட முடியவில்லை. உலகத்து மார்க்கட்டி லெல்லாம் ரஷியக் கோதுமை போய் மோதி உலகபொருளாதார உற்பத்தி ஸ்தானங்களை யெல்லாம் திடுகிடுக்கும்படி செய்து விட்டது.
‘பசி வந்திடப் பத்தும் பரந்துபோம்’ என்னும் பழமொழியைப் போல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப் பற்றி கதை கூறுவதில் பயனென்ன? பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது வயிறு நிரம்பும்படி ஆகாரம்தான் கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துரிமையை ஒழித்து பொது உடமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிறதேசம் உணவுப் பொருளைக் கொடுத்து ஒரு பொழுதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத் திட்டத்தில் உணவுப் பொருள்களைப் பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர். ஐந்து வருடத்திற்குள்இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள், இவ்வளவு ஆடுமாடுகள், இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும், இத்தனை மாணவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்குவருடத்திலே ஐந்து வருடத் திட்டத்திற் கண்ட பெரும்பாலானவை கள் பூர்த்தியாகி விட்ட தால் திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர். இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகையதிட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலை செய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்துவருகின்றன.
ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள்உற்பத்தியாகி, உற்பத்தி யான பொருள்கள் விலையாகாமல் பல விதத் தொல்லைகள் ஏற்படுவது நிட்சயம். இதையே ரஷியாவும் எதிர்பார்க்கின்றது. தேவைக்கு அதிகமானபொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரைவயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரணமென்ன என்பதை ஏழை மக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுதுதான் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியினால் தியங்கும்படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடைமலையெனத் துலங்கும்.
ருஷிய சமுதாய அமைப்பு
உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன? கோடிக்கணக்கான மக்கள் தினசரி 8 மணிநேரம், 10 மணிநேரம் வேலை செய்து வருகின்றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பலதேவைகளை உண்டாக்கிக்கொண்டு வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச் செல்ல ஒரு குதிரைபூட்டிய வண்டி போதுமானது. தன்னிடத்தில் ஏராளமான பணமிருக்கிறது என்ற திமிறினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டி யோடும் படியான வண்டியைச் செய்து அதற்கென்று பல மனிதர்களை குறைந்தசம்பளத்தில் வேலை யாளாக வைத்துக் கொள்கிறான். உண்மையான உணவுப் பொருளை உண்டாக்க வேண்டியபல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கொள்கிறான். இவன் தன் அவசியத்திற்கு மேற்பட்ட குதிரை களைஉபயோகித்துக் கொள்வதால் குதிரை விலை அதிகமாய் விடுகிறது. இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து தன் உடலைக் கெடுத்து, ஒண்ட இடமின்றி தெருவில் கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத்துறங்கும்.
குடிஅரசு 27.03.1933
(7 நவம்பர் 1917, சோவியத் புரட்சியின் 100ஆவது ஆண்டு நினைவாக)
நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்