இடஒதுக்கீடு சட்டங்களை குப்பைக் கூடையில் வீசும் அய்.அய்.எம்.எஸ். நிறுவனங்கள்

உயர்கல்வித் துறையில் சமூக நீதி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு அவை பார்ப்பன கோட்டையாகவே இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கின்றன. அய்.அய்.டி. என்ற உயர் கல்வி நிறுவனம், இதற்கு சரியான உதாரணம். இந்த நிறுவனங்களில் தட்டுத்தடுமாறி இடம் பிடித்த வெகு சில தலித் மாணவர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தொடங்கினால் தடை விதிக்கப்படுகிறது. மற்றொரு உயர் கல்வி நிறுவனம் இந்திய மேலாண்மை நிறுவனமான ‘அய்.அய்.எம்.எஸ்.’ என்பதாகும். சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் போதுதான் பல்வேறு நிறுவனங்களில் உயர்மட்டப் பொறுப்புகளில் பல்வேறு சமூகப் பிரிவினருக்கான வாய்ப்புகள்

(ளுடிஉயைட னiஎநசளவைல) உருவாகும். முடிவெடுக்கக்கூடிய உயர் பதவிகளில் பார்ப்பனர் அல்லது விரல்விட்டு எண்ணக் கூடிய சில உயர் ஜாதி வகுப்பினர் மட்டுமே இப்போதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அய்.அய்.எம்.எஸ். என்ற தன்னாட்சி பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், இந்தூர் (1996), கோழிக்கோடு (1996), ரோதக் (2009), ராய்ப்பூர் (2010), ராஞ்சி (2010), காஷிப்பூர் (2011), கல்கத்தா (1961), அகமதாபாத் (1961), பெங்களூரு (1973), லக்னோ (1984), உதய்ப்பூர் (2011), ஷில்லாங் (2007), திருச்சிராப்பள்ளி (2011) ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களிலோ, ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையிலோ, சமூக நீதி எனும் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுவதே இல்லை. சுயாட்சி நிறுவனங்களாக இயங்கும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர கடந்த ஜனவரி 2017இல் நடுவண் ஆட்சி வரைவு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த பின்னணியில் இந்த நிறுவனங்களில் பேராசிரியர்கள் பதவிக்கு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதா? ‘தலித்’ பேராசிரியர்கள் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்? இந்த விவரங்களைத் தருமாறு மத்திய மனித வளத் துறை அமைச்சகத்துக்கும், அய்.அய்.எம்.எஸ். ஆய்வு நிறுவனங்களுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூரு ‘அய்.அய்.எம்.எஸ்.’ நிறுவன  மாணவர் சித்தார்த் ஜோஷி, பேராசிரியராகப் பணியாற்றும் தீபக் மால்கன் இருவரும் கேட்டனர். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதில் வெளி வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.

1985ஆம் ஆண்டுக்கு முன்பே உருவான 4 ‘அய்.அய்.எம்.எஸ்.’ நிறுவனங்கள், பேராசிரியர் நியமனங்களில் பேராசிரியர்களின் ‘சமூகப் பின்னணி’ பற்றிய எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று கூறிவிட்டன. ஷில்லாங், திருச்சிராப் பள்ளி போன்ற அண்மையில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், பதவி நியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றுவது இல்லை என்று தெரிவித்தன. உதய்ப்பூர் ‘அய்.அய்.எம்.எஸ்.’ நிர்வாகம், தகவல் தெரிவிக்க மறுத்ததோடு, இடஒதுக்கீடு கொள்கை எதுவும் இங்கே பின்பற்றப்படுவதில்லை என்றும் உறுதியாகக் கூறிவிட்டது.

கட்டுரையாளர்கள் தனிப்பட்ட முறையில் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் 13 ‘அய்.அய்.எம்.எஸ்.’ நிறுவனங்களில் கோழிக்கோடு, ரோதல் நிறுவனங்களில் மட்டும் தலா ஒரு பட்டியலினப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர்கள் இருக்கிறார்கள். வேறு 11 நிறுவனங்களிலும் ஒரு தலித் பேராசிரியர்கூட இல்லை. இந்த நிறுவனங்களில்

233 பேராசிரியர்களில் 2 தலித், 5 பிற்படுத்தப்பட் டோர் தவிர, ஏனைய அனைத்துப் பதவிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள், பார்ப்பனர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய உயர்ஜாதியினர்தான்.

இந்த நிறுவனங்களில் மத்திய அரசின் பல கோடி ரூபாய் நிதி உதவியுடன் ஆராய்ச்சிப் படிப்புகளும் நடக்கின்றன. தனியார் நிறுவனங்களும் நிதி உதவி செய்கின்றன. இந்த ஆய்வுப் படிப்பு படிக்க உரிய தகுதியிருந்தும் தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்தப் பயனை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். இந்தியாவின் மூன்று பழைய ‘அய்.அய்.எம்.எஸ்.’ நிறுவனங்களான கல்கத்தா, அகமதாபாத், இந்தூர் நிறுவனங்களில் தயாராகும் மேலாண்மை நிபுணர்களைக் கொண்டுதான் ஏனைய மேலாண்மை நிறுவனங்கள் விரிவாக்கப்படுகின்றன. இந்த மேலாண்மை நிறுவனங்களிலேயே தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நிலையில் விரிவாக்கப்படும் ‘அய்.அய்.எம்.எஸ்.களும் சமூக நீதியின் கதவுகளை இழுத்து மூடி விடுகின்றன.

‘அய்.அய்.எம்.எஸ்.’ நிறுவனங்களில் மேலாண்மை நிர்வாகம் படித்தவர்கள், உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டு, உயர் பொறுப்புகளில் செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள். 1970ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பட்டியல் இனம் மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கு 22.5 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 2008லிருந்து பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் அடிப்படையில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி வழங்கப்பட்டாக வேண்டும். ஆனால், பேராசிரியர் நியமனங்களிலும் மாணவர் சேர்க்கையிலும் இந்த சமூகநீதி முற்றிலுமாக  புறக்கணிக்கப்பட்டே வருகிறது. கடந்த 2016 செப்டம்பர் 20ஆம் தேதி ஷில்லாங்கில் ‘அய்.அய்.எம்.எஸ்.’ நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைவர்களின் உயர்மட்ட மாநாட்டை மத்திய மனித வளத் துறை அமைச்சர் கூட்டியிருந்தார். அரசியல் சட்டப்படி நிர்வாகம் தனது கடமைகளை செய்ய முன்வர வேண்டும் என்று அம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிறுவனங்களில் உயர்கல்வி பெற்று உயர் பதவிகளை உலகம் முழுதும் ஆக்கிரமித்துள்ள பார்ப்பன உயர்ஜாதிக் குழுவினர் தங்களுக்குள் ஒரு நெருக்கமான உறவு வளையத்தை உருவாக்கி செயல்படுகிறார்கள். குறிப்பாக பார்ப்பன மேலாண்மையை அனைத்து உயர்நிலைகளிலும் நிலைநிறுத்துவதே அவர்களின் இரகசிய செயல் திட்டமாக இருக்கிறது.

‘மேலாண்மை’ என்பது நிர்வாக அதிகாரத்தைக் கொண்ட ஒரு உயர் பதவி. நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்படும்போதுதான் அது அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பயன்களையும் வளங்களையும் கொண்டு சேர்க்கும். சமத்துவத்தை வளர்த்தெடுக்கும். பல்வேறு சமூகக் குழுக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர மறுப்பதும். ஏற்கனவே ஆதிக்கத்திலுள்ள ஒரு பிரிவினரை மட்டுமே மேலும்  மேலும் வளர்த்து, ஏற்றத் தாழ்வுகளை விரிவுபடுத்துவது நல்ல மேலாண்மைக்குரிய இலக்கணம் அல்ல. அது சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்தான மக்கள் துரோகம்.

ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் மறு உற்பத்தி செய்யும் நிறுவனங் களாகவே இந்த மேலாண்மை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் குறிப்பாக அரசு குழுக்கள், அரசுக்கான ஆலோசனைக் குழுக்கள், அமைச்சகங்களுக்கான குழுக்கள், ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளை ஏற்று வழி நடத்தும் நிலையிலிருப்பவர்கள் இந்த “மேலாண்மை நிபுணர்கள்” தான். ஒரு காலத்தில் காவல்துறை அதி காரிகள், அரசியல் தலைவர்கள் இந்தப் பொறுப்புகளில் இருந்தார்கள். அவர்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள்.

சமூகத்தின் அதிகாரத்தை பார்ப்பனர்கள் வேத காலத்தி லிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்ககள். சமூக ஆதிக்கப் பிடியில் சிக்கி அடிமைகளாக ஜாதிய சமூகத்தின் சமூக விதிகளைப் பணிந்து பயந்து ஏற்று வாழப் பழக்கப்படுத்திய ஜாதிய உளவியலை உடைத்து சமூக மாற்றத்துக்காகக் கொண்டு வரப்பட்டதுதான் கல்வி மற்றும் உயர் கல்வி அமைப்புகள். ஆனால் கொடுமை என்னவென்றால், பார்ப்பன சமூக அதிகாரம், உயர்கல்வி நிறுவனங்களையும் தன்வசமாக்கிக் கொண்டுவிட்டது.

அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்கள்கூட முழுமையாக இல்லாவிட்டாலும் இடஒதுக்கீட்டைப் பின்பற்றும் கட்டாயத்துக்கு வந்துவிட்டன. ஆனால் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பார்ப்பன கோட்டையின் கதவுகள் மட்டும் இன்னும் திறக்கவே மறுக்கிறது.

– ‘இரா’

(எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ ஏப்ரல் 1, 2007இல் வெளி வந்த இரண்டு ஆய்வுகளைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை)

நிமிர்வோம் நவம்பர் 2017 இதழ்

You may also like...