இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !
மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியனருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது இளையமகன் தான் பிரகாஷ். சிறு வயது முதலே கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட பிரகாஷ், பள்ளிப்படிப்பின் போதே மாநில அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பள்ளிக்கல்வி முடித்ததும், சென்னை வந்து அரசு கவின் கலைக் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, இக்கல்லூரியில் பீங்கான் கலைத் (Ceramic) துறையில் பயின்றிருக்கிறார். சென்னையில் தங்கிப் படித்தால் அதிக செலவாகும் என்பதால், குடும்ப சூழல் கருதி, அன்றாடம் கல்லூரிக்கு அடுக்கம்பாறையிலிருந்து இரயிலில் வந்து சென்றுள்ளார் பிரகாஷ். இச்சூழலிலும் ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் கல்லூரி வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரியில் 2 ஆண்டுகள் சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
பிரகாஷ் இயல்பிலேயே, இயலாதவர்களின் மீது கரிசனம் கொண்டவராக இருந்துள்ளார். பார்வையற்றோர் ஆதரவு இல்லத்திற்கு அவ்வப்போது சென்று அவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். மேலும் வரைகலை, டெரகட்டா, மற்றும் பீங்கான் கலையியலில் மிகச்சிறந்த அறிவும், திறமையும் கொண்டவராக இருந்துள்ளார் பிரகாஷ்.
கல்லூரியில் பீங்கான் கலையியல் பாடப்பிரிவின் துறைத்தலைவரான இரவிக்குமார், குறிப்பாக பிரகாஷை வகுப்பில் ஒதுக்கி வைத்து, அவரை கட்டம் கட்ட ஆரம்பித்தார். நன்றாகப் படிக்கும் ஒரு மாணவரை ஒரு துறைத்தலைவர் அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன ?
ஓவியக் கல்லூரியில் இருக்கும் பீங்கான் துறை என்பது ஒப்பீட்டளவில் மாணவர்களுக்கு குறைவான வேலை வாய்ப்பு அளிக்கும் துறை என்று மாணவர்கள் கூறுகின்றனர். துறைத் தலைவர் ரவிக்குமார் அப்படி சில மாணவர்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பினை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இது போக அவர் கல்லூரியில் பாடம் எடுக்கும் போது இந்துப் புராணங்களை விதந்தோதி கதைப்பார். கேட்டால் அது கலைகள் சார்ந்து விவாதிக்க வேண்டிய மரபார்ந்த விசயம் என அவர் நியாயப்படத்தக் கூடும். அவரது வேலை வாங்கித் தரும் தகுதியை மனதில் வைத்து மாணவர்கள் இத்தகைய விசயங்களில் ஆர்வம் காட்ட விரும்ப வில்லை என்றாலும், எதிர்ப்பை வெளிப்படையாக காட்ட முடியாது. ஆசிரியரை பகைத்துக் கொண்டால் இன்டர்னல் மார்க்கில் கைவைப்பார் என்பது தமிழக மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
இப்படித்தான மாணவர் பிரகாஷ் ஆசிரியரோடு மெல்ல மெல்ல முரண்பட ஆரம்பித்தார்.
மாணவர் பிரகாசை ஒருமுறை கூப்பிட்டு, “ நீ நல்லவன் என்பதால் தான் உனக்கு இரண்டு முறை சிறந்த மாணவன் விருது கொடுத்திருக்கிறேன். ஆனால் நீ ஏன் இன்னமும் சர்ச்சிற்கு சென்று கொண்டிருக்கிறாய் ?” எனக் கேட்டுள்ளார். அதன் பின் தொடர்ச்சியாக அவரை ஒதுக்கி வைத்தல், கண்டுகொள்ளாமல் விடுதல், மற்ற மாணவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இரவிக்குமார். மாணவர் பிரகாஷ் இதனை தனது மரண வாக்குமூல வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசும் பிரகாஷின் கேள்விகள் நம்மை நொறுங்கச் செய்கிறது. ஏழ்மை பின்னணியல் வரும் மாணவன், ஒரு ஆசிரியரின் நாட்டாமைத்தனத்தால் தூக்கில் தொங்கி இறநது போயிருக்கிறான் என்பது நம்மை வெட்கி தலை குனியவைக்கிறது. தான் கிறித்தவராக இருப்பது இவருக்கு ஏன் பிரச்சினை என்று ஆரம்பித்த முரண்பாடு பின்னர் அதிகரிக்கிறது. ரவிக்குமாரின் இந்துமதப்பற்றை ஏற்றால்தான் தான் ஒரு ஆளாக வெளியே வர முடியும் என்ற நிலை அவருக்கு பிடிக்கவில்லை. அவரது சுயமரியாதை அதை ஏற்கவில்லை.
மேலும் வகுப்பில் இல்லாத அடிப்படை வசதிகள், செய்முறைப் பயிற்சிக்கும், ஆய்விற்கும் தேவையான ஆய்வகப் பொருட்கள், கல்லூரியில் வழங்கப்படாமல் இருப்பதையும் அவர் ஆசிரியரிடம் சுட்டிக் காட்டியுள்ளார். இதனை வகுப்பறையில் இரவிக்குமாரிடம் பிரகாஷ் கேட்ட போது, வகுப்பு முடியும் முன்னரே வெளிறிப்போன முகத்தோடு வகுப்பறையில் இருந்து வெளியேறியுள்ளார் இரவிக்குமார். ஒரு அடிமை மாணவன் நம்மை கேள்வி கேட்பதா என்று ஒரு ஆண்டைக்கு உரிய வெஞ்சினத்தல் ரவிக்குமார் பயணிக்க ஆரம்பித்தார்.
இதன் தொடர்ச்சியாக இப்பிரச்சினைகளை கல்லூரி முதல்வரிடம் முன்வைத்துள்ளார் பிரகாஷ். இரவிக்குமார் பாடம் எடுக்காமல் இந்துமத வெறி மற்றும் மதத் துவேஷத்தை வளர்ப்பது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். அதனைக் கேட்டுக் கொண்ட கல்லூரி முதல்வர், பிரகாஷை சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.
மறுநாள் காலையில், வகுப்பறைக்கு வந்த இரவிக்குமார், “ எவன்கிட்ட போயி கம்ப்ளைண்ட் பண்ணினாலும், என்னை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என வகுப்பில் அனைவருக்கும் பொதுவாகக் கூறியுள்ளார். அதாவது பிரகாஷை ஜாடையாக மிரட்டியிருக்கிறார். இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார் பிரகாஷ்.
இந்நிலையில் மற்றொரு ஆசிரியர் ஒருவர் மாணவர் பிரகாஷின் கையறு நிலையை வைத்து இரவிக்குமாரை மிரட்ட திட்டமிட்டார். பின்னர் அந்த உள் தகராறு நடக்காமல் ஆசிரியர்களுக்குள் ‘புரிந்துணர்வு’ ஏற்பட்டு மாணவர் பிரகாஷ் முன்னிலும் அதிகமாக ஒதுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டில் முதலாமாண்டு சேர நுழைவுத்தேர்வில் தேர்வான மாணவர்களிடம் சுமார் ரூ.20,000-லிருந்து – ரூ.50,000 வரை பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஓவியக் கல்லூரிக்காக அரசு ஒதுக்கும் பல்வேறு நிதிகள் இங்குள்ள நிர்வாகத்தால் சுருட்டப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய கூட்டு காரணமாகவே ஆசிரியர் பிரகாஷ் அவரை மிரட்ட திட்டமிட்ட ஆசிரியரை பேசி சரிசெய்திருக்கிறார். இது குறித்து இறந்து போன மாணவர் பிரகாஷின் ஆடியோவை போலிசின் வசம் கொடுத்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் இந்த ஆடியோவை பரிசோதனை செய்து முடிப்பதற்கே 4 மாதம் ஆகிவிடும் என்பதால் யாரையும் கைது செய்ய முடியாது என போலீசு கைவிரித்ததாக மாணவர்கள் சோர்வுடன் கூறுகின்றனர்.
இந்நிலையில் மாணவர் பிரகாஷின் முயற்சிகளுக்கு ஆதரவாக மற்ற மாணவர்கள் வெளிப்படையாக முன்வரவில்லை. ”வந்தால் ஒழுங்கா படிச்சிட்டுப் போற வழியைப் பார். வகுப்புக்கு வாத்தியார் வரலை, அது இல்லை, இது இல்லைன்னு கம்ப்ளைண்ட் பண்ற வேலையெல்லாம் பார்க்காத, இல்லைன்னா உனக்குத் தான் பிரச்சினை. ஜாக்கிரதை” என ஆசிரியர் சிவராஜ் கூறியதை வீடியோவில் சொல்கிறார் பிரகாஷ்.
இதனால் மனம் நொந்த பிரகாஷ், மறுநாளில் இருந்து கல்லூரிக்குச் செல்லவில்லை. வீட்டிலும் சந்தேகம் வரக் கூடாது என்று இரயில் நிலையத்திலேயே இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பச் சென்றுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில், அதே கல்லூரியில் வேறு துறையில் படிக்கும் அவரது நண்பர் அலைபேசியில் அழைத்து கல்லூரிக்குப் பிரகாஷ் வராதது குறித்து கேட்டபோது, நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறி கல்லூரிக்கு வருவதை விட செத்துவிடுவது மேல் எனக் கூறி அழுதுள்ளார் பிரகாஷ். அவரை ஆற்றுப்படுத்தி ஆறுதல் கூறியிருக்கிறார் அவரது நண்பர்.
மறுநாள் காலையில், கல்லூரிக்குச் சென்று அலைபேசியில் பிரகாஷ் பேசிய பதிவை கல்லூரி முதல்வரிடமும் ஆசிரியர் சிவராஜிடமும் போட்டுக் காட்டியுள்ளார், பிரகாஷின் நண்பர். ஆனால் இப்பிரச்சினையை உதாசீனப்ப்படுத்தி இருக்கின்றனர் இருவரும். துறைத்தலைவர் இரவிக்குமார், ”இது போன்று பல மிரட்டல்களைப் பார்த்தவன் நான், இதற்கெல்லாம் சளைக்கமாட்டேன்” எனத் திமிராகக் கூறியுள்ளார். அதன் பின்னர் மற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்து, பிரகாஷின் வீட்டு முகவரியை கல்லூரி அலுவலகத்தில் இருந்து பெற்று அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.
பின்னர், பிரகாஷின் பெற்றோரிடம் நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர். பிரகாஷின் பெற்றோர்களும், கல்லூரி முதல்வரை பிரகாஷோடு வந்து சந்தித்துள்ளனர். அங்கு பிரச்சினையை முன் வைத்த பிரகாஷை, பல்வேறு கேள்விகள் மூலம் அவரை மனதளவில் காயப்படுத்தியிருக்கின்றனர். இறுதியில் ”எனது கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதமளிக்கும் வகையில் எழுதிக் கையெழுத்திட்டுத் தாருங்கள்” எனக் கேட்டுள்ளார் பிரகாஷ். அதற்கு மறுத்துள்ளது கல்லூரி முதல்வர், இரவிக்குமார் மற்றும் சிவராஜ்-ஐ உள்ளடக்கிய கல்லூரி நிர்வாகம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை 4 மணிக்கு தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்கு மூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார். பின்னர் மாலை 7 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கல்லூரி மாணவர்கள் அனைவரும், ”கல்லூரி முதல்வர், பேராசிரியர் இரவிக்குமார் மற்றும் சிவராஜைக் கைது செய்யவேண்டும்” என கோரிக்கை முன்வைத்து போராட்டம் செய்துள்ளனர். அங்கு வந்த போலீசிடம், அவருக்கு நடந்த கொடுமை குறித்து அவர் தனது நண்பருக்கு அலைபேசியில் அழுது கொண்டே விவரித்த ஆடியோ பதிவையும் மாணவர்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால் போலீசு கும்பலோ, யார் மீது நடவடிக்கை எடுக்காமல், மழுப்பி வருகிறது. மாணவர்கள் புகாரளித்தபோதும், முக்கிய சாட்சியமான ஆடியோவைக் குறிப்பிட்டு ”கல்லூரி முதல்வர் – சிவராஜ் – இரவிக்குமார்” கூட்டணியைக் கைது செய்யவேண்டும் எனக் கேட்ட போதும், பதிலளிக்காமல் மழுப்பிச் சென்றுள்ளது.
முதல் தகவலறிக்கையிலும் கூட தூண்டுதலின் பெயரிலான மரணம் எனப் பதிவு செய்யாமல், சந்தேகத்திற்குரிய மரணம் எனப் பதிவு செய்துள்ளது போலீசு.
தனது சுயமரியாதைக்காக, தனது உரிமைக்காகத் தனது உயிரை இழந்திருக்கிறார் பிரகாஷ். அவர் தனது நண்பர்களுக்கும், தன்னை துன்புறுத்தி தற்கொலைக்குத் தள்ளிய ஆசிரியர்களுக்கும் பேசியுள்ள வீடியோ பார்ப்போரைக் கலங்கச் செய்வதாக இருக்கிறது. கல்லூரிகளில் ஜனநாயகம் இல்லாத நிலையையும் அது எடுத்துக் காட்டுகிறது.
அவரது ஓவியங்களைப் பார்க்கையில் நமக்கு நீட் அனிதா நினைவுக்கு வருகிறார். ஒரு நல்ல கலைஞனை இங்கே கொலை செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நமது மாணவச்செல்வங்கள் சாக வேண்டுமா என்ற கேள்வி இதயத்தைக் குடைகிறது. ஒரு அடிப்படை ஜனநாயகம் கூட இல்லாத இந்நாட்டில் என்ன இருந் என்ன பயன்?