பெரியாருக்கு முதல் பெருமை சேர்த்த தாம்பரம்
பெரியாருக்கு முதலில் பெருமை சேர்த்த நகரம் என்ற பெருமையைக் கொண்டது தாம்பரம்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையம் எதிரில் அரசு ஊழியர்களுக்கு புதிய குடியிருப்புகளை 39 ஏக்கர் 51 சென்ட் பரப்பளவில் அரசு உருவாக்கியது. அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு பெரியார் பெயர் சூட்ட அப்போதைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முடிவு செய்தனர்.
1946ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டக் குழு தலைவர்
டி. சண்முகம் தலைமையில் தாம்பரத்தில் நடந்த விழாவில் பெரியார் நகர் என்ற பெயரில் நகரம் உருவாக்கப்பட்டது. அத்துடன் பெரியார் பெயர் கொண்ட வளைவும் திறக்கப்பட்டது.
இதை அன்றைக்கு சென்னை மேயராக இருந்த திவான் பகதூர் என்.சிவராஜ் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஒரு பார்வை யாளராக அண்ணா பங்கேற்றார். பெரியார் பெயர் கொண்ட வளைவு திறக்கப்பட்ட தால் தாம்பரம் நகரத்தின் பெயர் பட்டி தொட்டி எங்கும் தெரியவந்தது.
தாம்பரம் தேசிய நெடுஞ்சாலை, முடிச்சூர் சாலை, கக்கன் சாலை, காந்தி ரோடு என்று நான்கு சாலைகளை உள்ளடங்கிய பெரும் பகுதியாக பெரியார் நகர் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம், தாம்பரம் மார்க்கெட், நகராட்சி அலுவலகம், தபால் நிலையம், பாரதி திடல் மேடை என தாம்பரத்தின் மொத்த பயன்பாட்டுக்கான பெரும் பகுதி பெரியார் நகரிலேயே அமைந்துள்ளது. தாம்பரத்தில் பெரியார் நகர் என்று பெயர் வைத்த பிறகுதான், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் பெரியாரின் பெயரால் தெருக்கள், சாலைகள், நகர்கள் உருவாகின.
கடந்த 70 ஆண்டுகளுக்கு எந்த வளைவை வைத்து தாம்பரம் நகரம் பெருமை கொண்டதோ, அந்த பெரியார் வளைவு 3 ஆண்டுகளுக்கு முன்பு இடம் மாற்றி வைக்கிறோம் என்ற பெயரால் தாம்பரம் நகராட்சியால் அகற்றப்பட்டது. நகர்மன்றத்தில் முறையான அனுமதி ஏதும் இல்லாமல், பெரியார் பிறந்த நாள் அன்றே இரவோடு இரவாக வளைவு அகற்றப் பட்டது. வரலாற்றுச் சிறப்புக்குரிய பெரியார் பெயர் கொண்ட வளைவை உடனடியாக மீண்டும் வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் நகராட்சிக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக கட்டித் தரு கிறோம் என்று உறுதிமொழி கொடுத்து விட்டு, பெயரளவில் பெயர் பலகையை மட்டும் வைத்தனர்.
கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலின்போது பெரியார் வளைவு அகற்றப்பட்ட விவகாரம் எதிரொலித்தது. அங்கு திமுக வேட்பாளராக போட்டி யிட்ட எஸ்.ஆர்.ராஜா, தான் வெற்றி பெற்றால் பெரியார் பெயர் வளைவை மீண்டும் கட்டித் தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, பெரியார் பெயரைத் தாங்கிய வளைவை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சியினரின் விருப்பமாக உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா கூறும்போது, ‘‘தமிழகத்தில் முதன்முதலில் தாம்பரத்தில் தான் பெரியார் பெயரில் நகர் உருவாக்கப் பட்டு, அவர் பெயர் கொண்ட வளைவு திறக்கப்பட்டது. இது தாம்பரத்துக்கு மிகப் பெரிய பெருமை. கடந்த காலத்தில் தேவை யில்லாமல் வளைவு அப்புறப்படுத்தப் பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் பெரியார் பெயர் வளைவு வைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பணி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
நன்றி: ‘தமிழ் இந்து’ (செப்.17)
பெரியார் முழக்கம் 19102017 இதழ்