தபோல்கரிலிருந்து கவுரி இராவணன் வரை… தொடரும் ‘ராமலீலா’க்கள்
ஆண்டுதோறும் விஜயதசமி யன்று புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் ‘இராவணன்’, ‘மேகநாதன்’, ‘கும்பகர்ணன்’ – என்று இராமாயணத்தில் ‘அசுரர்’களாக சித்தரிக்கப்படும் திராவிடர்களை வடநாட்டுக்காரர்கள் எரித்து ‘ராமலீலா’ கொண்டாடுகிறார்கள். இந்தியாவின் ‘பிரதமர், குடியரசுத் தலைவர்’கள் எல்லாம் இந்த ‘எரிப்பு’ விழாவில் பங்கெடுப்பது வாடிக்கை. பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவரான அன்னை மணியம்மையார் இதை எதிர்த்து 1974 டிசம்பர் 25இல் இராமன், சீதை, இலட்சுமணன் உருவப் படங்களை எரிக்கும் ‘இராவண லீலா’வை நடத்தினார். 1995இல் பெரியார் திராவிடர் கழகம் உருவான பிறகு 1996, 1997ஆம் ஆண்டுகளில் இதேபோல் இராவண லீலாவை நடத்தியது.
இப்போது உ.பி. மாநிலத்தைச் சார்ந்த ஓம்வீர் சரஸ்வத் என்ற வழக்கறிஞர் ‘இராவணன் உருவ பொம்மைகளை எரிக்கக் கூடாது’ என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக ‘தினமணி’ நாளேடு (செப்.27) ஒரு செய்தி வெளியிட் டுள்ளது. அதில், “இராவணனை எரிப்பது அவனை தெய்வமாக வணங்கி வரும் சமூகத்தினரை இழிவுப்படுத்துகிறது. மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவுர் என்ற ஊரில் இராவணனுக்கு மிகப் பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் இராவணனுக்கு கோயில் இருக்கிறது. அத்துடன் தசரா விழாக்களில் பெரும் கூட்டம் திரளுவதால் இராவணன் உருவ பொம்மையை எரிக்கும்போது, தீ விபத்துகள் நிகழ்கின்றன” என்று கூறியுள்ள அந்த வழக்கறிஞர், இராவணன் ‘சரஸ்வத் பிராமண’ சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகிறார். இராவணன் ஒரு ‘பிராமணன்’ என்ற கருத்தை அவ்வப்போது பார்ப்பனர்கள் கூறுவது வழக்கமாகிவிட்டது. புராணக் கதைகளின் பாத்திரங்களுக்கு எந்த ‘வர்ணத்தையும்’ பூசலாம்; காரணம் அவைகள் வரலாறுகள் இல்லை.
இராமன், அரசக் குடும்பத்தில் பிறந்த ‘சத்திரியன்’ என்பதால், வேத முறைப்படி பார்ப்பன இராஜ்யத்தை நடத்தினான். அதனால்தான் – கடவுளை நேரடியாக வணங்கிய சூத்திர சம்பூகன் கழுத்தை ‘பிராமணர்கள்’ முறையிட்டதால் விசாரணை செய்யாமலேயே வெட்டித் தள்ளினான். இராமாயணக் கதையை பரப்பியதன் நோக்கம், வேதங்களை பார்ப்பன ‘தர்மங்களை’ எதிர்த்த ‘அசுரர்’களை கொன்று ஒழித்துவிட வேண்டும்; அதுதான் ‘தர்மம்’ என்ற உண்மையை உணர்த்து வதற்குத் தான்.
அதனால்தான் ‘இராவணனை’ இப்போதும் ‘ராமலீலா’ கொண்டாடி தீயில் போட்டு எரிக்கிறார்கள். பார்ப்பனிய எதிர்ப்பாளர்களை அழித்து விட வேண்டும் என்ற ‘ராமலீலா’ காட்டும் வழியில்தான் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி ‘இராவணன்’ ஆகியோர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாக்கப்படுகிறார்கள். ‘தேவர்’களின் சமூக விரோத நாசகாரச் செயல்களை எதிர்த்த ‘அசுரர்’கள் அழிக்கப்பட்டார்கள். அந்த ‘தேவ-அசுர’ப் போராட்டம் இப்போது தொடர்கிறது என்பதைத் தானே இந்தப் படுகொலைகள் உணர்த்து கின்றன?
பெரியார் முழக்கம் 05102017 இதழ்