நடுவண் ஆட்சியின் துரோகங்கள்
தூத்துக்குடி மக்களை கதிர்வீச்சுக்கு உள்ளாக்கி மக்களை நோயாளிகளாக மாற்றிய ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் மீண்டும் அதிகாரத் திமிருடன் தூத்துக்குடியில் மக்கள் எதிர்ப்புகளை மதிக்காமல் நுழையத் துடிக்கிறது. 100 நாள் போராட்டத்தின் இறுதியில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு 13 உயிர்களை பலி கொடுத்தனர் தூத்துக்குடி மக்கள். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை வழங்கிய பார்ப்பன நீதிபதி கோயல் ஓய்வு பெற்ற சில மணி நேரங்களிலே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆனார். முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் இந்த ஆலை பற்றிய ஆய்வை நடத்த ஒரு குழுவையும் அமைத்தார். குழுவில் தமிழகத்தைச் சார்ந்த நீதிபதியை இணைத்தால் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான முடிவு வந்துவிடும் என்பதால் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இப்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அகர்வால் குழு பச்சைக்கொடி காட்டிவிட்டது. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்து தவறு என்றும் கூறிவிட்டது. சுற்றுச் சூழல் பாதிப்பு இருந்ததாஇல்லையா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டிய குழு அதன் எல்லையை மீறி ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைள்ளது. ஆய்வுக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு தரவேண்டும் என்ற அவசியமில்லை என்றும் பசுமை தீர்ப்பாயைத் தலைவர் நீதிபதி கோயல் கூறிவிட்டார். இந்தப் பரிந்துரைக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் தமிழக அரசு சட்டப் பேரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் உணர்வு. வேதாந்தா நிறுவனத்தின் நன்கொடைப் பட்டியலில் பா.ஜ.க. இருக்கிறது. எனவே மக்கள் எதிர்ப்பைப் புறந்தள்ளி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு வழியமைத்து விட்டது நடுவண் ஆட்சி.
காவிரியின் குறுக்கே கருநாடக அரசு கட்டவிருக்கும் மேகதாது அணைக்கு மத்திய நீர் ஆணையம் வழியாக நடுவண் அரசு ஒப்புதல் வழங்கி தமிழக டெல்டா விவசாயிகளுக்கு மற்றொரு துரோகத்தை இழைத்திருக்கிறது நடுவண் ஆட்சி. மத்திய நீர்வளத் துறை அமைச்சராக ரெங்கராஜன் குமாரமங்கலம் இருந்த காலத்தில் மேகதாதுப் பகுதியில் மின்சாரம் எடுக்கும் திட்டத்துக்குத்தான் கருநாடக அரசு அனுமதி கோரியது. இப்போது காவிரி நீரைத் தடுத்துப் பாசனத்துக்கும் பெங்களூர் மற்றும் ராம்நகர் மாவட்ட குடிநீர் திட்டத்துக்குமாக அதை மாற்றியிருக்கிறது.
கஜா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறக் கூட முன்வராத மோடி, தமிழகத்துக்கு அடுத்தடுத்து துரோகங்களை இழைத்துக் கொண்டிருக்கிறார். மக்களின் சீற்றத்துக்கு பதில் சொல்லும் காலம் வந்தே தீரும்!
நிமிர்வோம் நவம்பர் 2018 இதழ்