இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி வழி பொறியியல் படிப்பு ரத்து!
வடமாநிலங்கள் முழுவதுமே இந்தி பேசினால் பிழைத்துக்கொள்ளலாம் என நெடுங்காலமாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்தி மாநிலம் எனப்படும் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரில், இந்தியின் மூலம் பொறியியல் பட்டம் படிக்க ஒருவருமே முன்வரவில்லை என்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ‘அடல்பிகாரி வாஜ்பாயி இந்தி பல்கலைக்கழகம்’ செயல்படுகிறது. இங்கு கடந்த ஆண்டு முதல் இந்தி மூலம் பொறியியல் பட்டப்படிப்புகள் கற்பித்தல் தொடங்கப்பட்டது. மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 180 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கு பேர் மட்டும்தான். முதல் ஆண்டில்தான் அப்படி என்றால், இந்த ஆண்டில் அதுவும் இல்லை!
பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூட சேரவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது, பல்கலைக்கழக நிர்வாகம்.
பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் தற்போதைக்கு நான்கு தற்காலிகப் பேராசிரியர்கள் தான் இருக்கின்றனர். ஒரு முழுநேரப் பேராசிரியர்கூட இன்னும் பணியமர்த்தப்படவில்லை. இன்னும் பல உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அடல் பிகார் வாஜ்பாயி பல்கலைக்கழகமானது தன்னாட்சி அந்தஸ்து உடையது என்பதால், அதன் நிர்வாகமே இதில் முடிவுசெய்யலாம் என்று மத்தியப் பிரதேச அரசு கூறிவிட்டது. மாநிலத்தின் தொழில் கல்வித் துறை அமைச்சர் தீபக் ஜோசி, பகிரங்கமாக இதைத் தெளிவுபடுத்திவிட்டார்.
விரைவில் நடக்கவுள்ள பல்கலைக்கழகத்தின் கல்விக்குழுக் கூட்டத்தில், பொறியியல் படிப்புகள் குறித்து முடிவெடுக்கும் என்று அண்மையில் பொறுப்பேற்றுள்ள புதிய துணைவேந்தர் ராம்தேவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் 07092017 இதழ்