வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்த காமராசர் விழா
சென்னை இராயப்பேட்டை வி.எம்.சாலையில் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் மாலை 5.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவையொட்டி காமராசர், பெரியார் படங்களும் அவர்களின் கருத்துகளோடு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. “பள்ளிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு பதிலாக காமராசர் வாழ்த்துப் பாட வேண்டும்” என்ற பெரியாரின் கருத்து அனைவரையும் ஈர்த்தது. ‘விரட்டு பண்பாட்டுக் கலைக் குழு’வினரின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. காமராசர், அம்பேத்கர், பெரியார் மற்றும் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்கள், பறை இசை, இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் நாடகங்கள் என்று இரண்டரை மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘காமராசரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பிலும், பழ.கருப்பையா ‘காமராசரின் சமூக நீதிப் புரட்சி’ எனும் தலைப்பிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘காமராசரும் பெரியாரும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர். பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு இறுதி வரை கருத்துகளையும் கலை நிகழ்ச்சிகளையும் செவிமடுத்தனர். காமராசர் குறித்த ஏராளமான வரலாற்றுத் தகவல்களை கருத்தாளர்கள் விளக்கிப் பேசினர்.
பெரியார் முழக்கம் 20072017 இதழ்