இராசிபுரத்தில் கழகம் சார்பில் சேகுவேரா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

14-6-2017 அன்று மாலை 6-00 மணியளவில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையத் திடலில், இராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  “சேகுவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நகரக் கழகத் தலைவர் பிடல் சேகுவேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவினரின் பகுத்தறிவு, ஜாதியொழிப்புப் பாடல்கள் பாடப்பட்டன. பொதுக்கூட்டத்தில் இர. சுமதி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இராசிபுரம் கழகத் தோழர் மலர், பள்ளிபாளையம் முத்துபாண்டி, கழக அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஆகியோரைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர்மணி, அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூப நாட்டு விடுதலைக்குப் போராடி, அந்நாடு விடுதலை அடைந்த பின்னர், அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டு தலைமை அமைச்சராய், திட்ட அமைச்சராய், தேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னராய் நியமிக்கப்பட்ட பின்னரும், அண்டை நாடான பொலிவியாவில் நடைபெற்ற விடுதலைப் போரில் கலந்துகொள்ளச் சென்று அங்கு உயிர் நீத்ததின் வழியாக, நாடு, மொழி, இனம் கடந்த மனிதநேயத்தை உலகுக்கு உணர்த்திய மாண்பையும், தேசிய இன விடுதலைப் போர்களைக் குறித்தும், பெரியாரின் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையின் நோக்கம் குறித்தும், மத்தியில் நடந்து கொண்டிருக்கிற பா.ஜ.க. ஆட்சியின் மதவாத அரசியலின் ஆபத்துகளையும் விளக்கிப் பேசினார். நாமக்கல் மாவட்ட செய்லாளர் சரவணன் நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது.

பெரியார் முழக்கம் 29062017 இதழ்

You may also like...