கடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா? நாத்திகரா?
‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வார ஏடு தொடர்ந்து கடவுள் – மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த வாரம் (ஜூன் 16-22) வெளி வந்துள்ள ஒரு கட்டுரை இப்படி கூறுகிறது:
“வரலாறு தோன்றிய காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் முன்னேற்றத் திற்கும், அவர்களின் இன்னல்களைப் போக்குவதற்கும் அற்புதமான கண்டு பிடிப்புக்களை வழங்கிய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சான்றாக எழுத்துக் கலைக்குக் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த ‘சாயிலூன்’, அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘குட்டன்பர்க்’, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘சிங்கர்’, எந்திரங்கள் பலவற்றிற்கும் அடிப்படை விதியாக இருக்கும் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ‘ஆர்க்கிமெடிஸ்’, டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ‘டீசல்’, ரேடியோவைக் கண்டுபிடித்த ‘மார்க்கோனி’, தொலைபேசியைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் கிரகாம்பெல்’, இரத்தச் சுழற்சியை கண்டுபிடித்த ‘வில்லியம் ஹார்வி’, பென்சிலினைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் பிளமிங்’, இளம்பிள்ளைவாதம் அம்மை நோய்களுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த ‘ஆல்பிரட் சாபின்’ மற்றும் ‘எட்வார்டு ஜென்னர்’, காலரா மற்றும் மலேரியா நோய்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடித்த ‘ராபர்ட் கோச்’ மற்றும் ‘ரொனால்ட் ரோஸ்’ எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயனளிக்கும் மேற்கண்டவைகளைப் போன்ற அற்புதமான அன்பளிப்புக்களை வழங்கியவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ளவர்களே” – என்று எழுதுகிறது ‘உணர்வு’ ஏடு.
அறிவியலை கண்டுபிடித்தவர்கள், கடவுள், மத நம்பிக்கையாளர்கள் என்றே வாதத்துக்கு ஏற்றுக் கொள்கிறோம்.
இவர்கள் கண்டுபிடிப்புக்கு கச்சாப் பொருளாக இருந்தது – கடவுளும், மதமும் தானா? அல்லது அறிவியலா?
அனைத்து வல்லமையும் கொண்ட கடவுளும், கடவுள் உருவாக்கிய மதமும் தான் அம்மை நோயையும், பிளேக் நோயையும் மனித குலத்துக்கு தந்தது என்பதை உண்மையான கடவுள் மத பக்தர்களாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
அப்படி கடவுளால் தரப்பட்ட நோயை எதிர்த்துத் தானே மருந்தை கண்டுபிடித்தார்கள்.
அப்படியானால் இவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆத்திகமா? நாத்திகமா?
பெரியார் முழக்கம் 22062017 இதழ்