கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல் இந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்
இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார்.
“இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை எதிர்க்கும்போது அந்தத் திணிப்புக்கான வேர் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அந்த வேரை நீக்குவதற்கான போராட்டத்தை தொடங்க வேண்டும்.
இந்தி – இந்தியாவின் அலுவல் மொழி என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது அட்டவணையில் 344, 345 மற்றும் 351ஆவது பிரிவுகள் கூறுகின்றன. இந்தப் பிரிவுகள் நீடிக்கும் வரை இந்தித் திணிப்புகள் தொடரவே செய்யும். எனவே இந்தப் பிரிவுகளை சட்டப் பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். அரசியல் சட்டம் இதுவரை 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. முதல் திருத்தத்திற்கு காரணமாக இருந்தவரே தந்தை பெரியார் தான். ஆகவே ஆட்சி மொழிப் பிரிவுகளை நீக்கிடும் திருத்தம் கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்சி மொழிக்கான சட்டத்தில் இடம் பெற்றுள்ள பிரிவுகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழி களுக்கான சமத்துவத்தை மறுக்கும் பிரிவுகள் ஆகும்.
ஆட்சி மொழி சட்டம் குறித்து அரசியல் நிர்ணய சபையிலேயே சூடான விவாதங்கள் நடந்துள்ளன. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், இந்திக்கு ஆதரவாகவே பேசினார்.
நமது அரசியல் நிர்ணய சபை என்பதே மக்களின் பிரதிநிதித்துவம் கொண்டது அல்ல; படித்தவர், பணக்காரர் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிக்க உரிமை இருந்த நிலையில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள். சூத்திரர், பஞ்சமர், நந்தன்கள், சம்பூகன்கள் இல்லாத அவையாகவே அது இருந்தது. அம்பேத்கர், அ ரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவர். அவரும் நந்தனின் பிரதிநிதியாக செயல்படக் கூடிய நிலையில் இல்லை. இந்தியை அலுவல் மொழியாக தொடருவதா வேண்டாமா என்ற வாதம் நடக்கவில்லை. அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் தொடரலாமா என்பதுதான் வாதத்தில் மேலோங்கி நின்றது. எண்களைக்கூட உலகம் முழுதும் ஏற்றுக் கொண்ட எண்களுக்கு பதிலாக இந்தி எழுத்து எண்களையே பயன்படுத்த வேண்டும் என்று இந்திக்காரர்கள் வாதாடினார்கள். இந்த விவாதங்களை நாம் படிக்க வேண்டும். மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படி அரசியல் சட்டத்தில் இந்தி ஆட்சி மொழிக்கான பிரிவை நீக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் வலிமை பெரியார் இயக்கத்துக்குத் தான் இருக்கிறது என்பது என் கருத்து. (கைதட்டல்)
இப்போதும் இந்துத்துவா சக்திகளால் சீரணிக்கப்பட முடியாத ஒரே தலைவராக பெரியார் தான் இருக்கிறார். நான் ‘இந்துவாக சாக மாட்டேன்’ என்று அறிவித்த அம்பேத்கரையே ‘இந்துத்துவா’ வாதிகள் தங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1956இல் அம்பேத்கர் புத்தமார்க்கத்துக்கு மாறி விட்டார். அதற்குப் பிறகு அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்த வரும் இல்லை. ஆனால், இந்தியாவில் ஜாதி எந்த மதத்தையும் விட்டு வைக்கவில்லை. உலகம் முழுதும் கிறிஸ்துவ மதம் இருக்கிறது. அங்கு ஜாதி இல்லை; இங்கே கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி நுழைந்து விட்டது; புத்த மார்க்கத்திலும் நுழைந்து விட்டது.
அதேபோல் இந்தியாவின் வழிகாட்டும் கொள்கை நெறியில் பசு மாடு பற்றி பேசப்படுகிறது. விவசாயத்தை பாதுகாக்க விவசாயத்தை நவீனமாக்க மாடுகள், கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிற பிரிவுகளில் நமக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை. அதன் கடைசி பகுதி பசுவதை கூடாது என்று கூறுகிறது. இந்தப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலேயே அடிப்படை உரிமையாக சேர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதை அம்பேத்கர் ஏற்கவில்லை. வழிகாட்டும் கொள்கை நெறியில் தான் சேர்த்தார். இந்த வழிகாட்டும் கொள்கைப் பிரிவைக் காரணம் காட்டி, காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே கேரளா, ஒரு சில வடகிழக்கு மாநிலங்களைத் தவிர, எல்லா மாநிலங்களிலும் ‘பசுவதைத் தடைச் சட்டத்தை’ கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது பசு மாட்டோடு எருமை, கன்று குட்டி, ஒட்டகத்தையும் சேர்த்து, சந்தைகளில் இறைச்சிக்காக விற்க தடை செய்துள்ளார்கள்.
இதே வழிகாட்டும் கொள்கை நெறியில் மதுவிலக்கு கொள்கையை நாடு முழுதும் அமுல்படுத்த வேண்டும் என்ற பிரிவு இடம் பெற்றிருக்கிறது. அதற்காக சட்டம் இயற்ற தயாராக இல்லை. ஆனால், ‘பசுவதை தடைச் சட்டம்’ மட்டும் வேகமாக வந்து விட்டது. மாநிலங்களின் உரிமையாக இருந்த ‘கல்வி’யை 1976ஆம் ஆண்டு பொதுப் பட்டியலுக்கு கொண்டு போய்விட்டார்கள். மத்திய அரசின் ஒப்புதலின்றி, மாநிலங்கள் கல்விக்கான சட்டங்களைப் போட முடியாது என்ற நிலை வந்து விட்டது. கல்வி பொதுப் பட்டியலுக்கு போனதால்தான் மத்திய அரசு ‘நீட்’ நுழைவுத் தேர்வை – நமது மாநிலத்தில் திணிக்கிறது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வே வேண்டாம் என்று நாம் சட்டம் போட்டு விட்டோம். அதையும் மீறித்தான் நுழைவுத் தேர்வு இப்போது திணிக்கப்படுகிறது. 7 கோடி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை மிக்க தமிழக சட்டசபையின் தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் ஆளுநரிடம் போய்விட்டது. பிறகு ஏன் சட்டமன்றம்? ஆளுநரிடமே அதிகாரத்தைக் கொடுத்துவிட வேண்டியதுதானே!
இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள நளினியின் வரலாறு நூலாக வெளி வந்தது. அந்த நூலுக்கு நான் அணிந்துரை எழுதினேன். அதில் நான் எழுப்பிய கேள்வி இதுதான். தேசத் தந்தை காந்தி கொலை வழக்கில் கோட்சே, ஆப்தே இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. கோபால் கோட்சே உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை; அவர்கள் 18 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு 1966இல் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்தது காங்கிரஸ் அரசுதான். காந்தி கொலை வழக்கிலேயே ஆயுள் தண்டனை பெற்றவர்களை 18 ஆண்டுகளில் விடுதலை செய்யும்போது இராஜீவ் கொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை 26 ஆண்டுகளுக்குப் பிறகும் விடுதலை செய்ய மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத்தான் கேட்டேன்.
தமிழ்நாடு – இப்படி அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்படுகிற மாநிலமாகவே இருக்கிறது. மாடுகள் விற்பனை குறித்து சட்டம் போடும் அதிகாரம் மாநிலத்துக்குத்தான். ஆனால் மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு உத்தரவு போடுகிறது. ஏகலைவனின் கட்டை விரலை ‘தானமாகக்’ கேட்ட துரோணாச்சாரிகளின் பெயரால்தான் விளையாட்டுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.
நமது பண்பாடு – மொழி – கல்வி உரிமைகளை இழந்து வரும் நிலையில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் வாயிலாக நான் உங்கள் முன் வைக்கும் கோரிக்கை இது தான்:
இந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கும் சட்டப் பிரிவுகளையும், பசுவை வெட்டக் கூடாது என்று கூறும் வழிகாட்டும் கொள்கை நெறியில் உள்ள பிரிவையும் நீக்கக் கோரி, நீங்கள் போராட வேண்டும்.
பெரியார் இயக்கம் தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” – என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
காஞ்சி மக்கள் மன்றம் நடத்திய ஜாதி – இந்துத்துவ எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளை நீதிபதி அரி பரந்தாமன் மிகவும் விரும்பிக் கேட்டு மேடையிலும் தனது உரையைத் தொடங்கும் முன் கலைக் குழுவினரை மிகவும் பாராட்டினார்.
தனது உரையை முடித்து, மக்கள் மன்றத்தினரின் கலை நிகழ்வுகளை சிறிது நேரம் அமர்ந்து கேட்ட பிறகு, விடைபெற்றுச் சென்றார்.
பெரியார் முழக்கம் 08062017 இதழ்