எழுச்சியுடன் சைக்கிள் பேரணி – கபடி போட்டி – பொதுக் கூட்டம் : மேட்டூர் (ஆர்.எஸ்) பகுதியில் அம்பேத்கர் விழா
சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏப்.14 அன்று பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடந்தது. கபடி போட்டி, சைக்கிள் பேரணி, கலை நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் என்று நிகழ்ச்சிகள் எழுச்சி நடைபோட்டன.
காலை 10 மணிக்கு மேட்டூர் அணை குட்டி (எ) பத்மநாபன் நினைவுத்திடலில் எஸ். முருகேசன், ஜம்பு நதி (மேட்டூர் ஹைடெக் திளை ஆஷ் பிரிக்ஸ்) ஆகியோர் கபடி போட்டியை தொடங்கி வைத்தனர். இறுதிப் போட்டியை பிற்பகல் என். சந்திரசேகரன் (நகர செயலாளர், அ.இ.அ.தி.மு.க.) தொடங்கி வைத்தார்.
முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை தேசிய சமூக விருது பெற்ற ஆ.டி.சலாம் (எ) தணிகாசலம் வழங்கினார். டி.கே.ஆர். நினைவு சுழற் கோப்பையை கே.இரமேஷ் (கே. அசோசியேட்ஸ்) வழங்கினார். இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரத்தை பி. ஸ்டாலின் (மேட்டூர் அசோசியேட்ஸ்), மே.த. சரவணன் (பேத அசோசியேட்ஸ்) ஆகியோர் வழங்கினர். புலவர் இமயவரம்பன் நினைவு சுழற்கோப்பையை கே. இரமேஷ் வழங்கினார். மூன்றாம் பரிசு ரூ.4 ஆயிரத்தை ஜோ. இரகு (பெஸ்ட் பேப்ரிகேடர்ஸ்) வழங்கினார். மேட்டூர் கருப்பரசன் நினைவு சுழற் கோப்பையை கே. இரமேஷ் (கே அசோசியேட்ஸ்) வழங்கினார்.
மாலை 4 மணிக்கு நங்கவள்ளி யிலிருந்து அம்பேத்கர் பிறந்த நாள் விழா சைக்கிள் பேரணி தொடங்கி யது. கழக்த தலைவர் கொளத்தூர் மணி பேரணியைத் தொடங்கி வைத்தார்.
,,6 மணியளவில் பேரணி, மேட்டூர் ஆர்.எஸ். வந்தடைந்தது. பேரணியை ஜோக்கர் திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி வரவேற்றனர்.
அங்கிருந்து கூட்டம் நடக்கும் ஊருக்குள் தலைவர், இயக்குனர், தோழர்கள், பெண்கள் பறை இசையோடு பேரணியாக சென்ற காட்சி எழுச்சி மயமாக இருந்தது. கட்சி பேதமின்றி ஊர் மக்களும், பேரணியில் பங்கேற்றனர். ஊரே விழாக்கோலமாக திகழ்ந்தது. மாலை 7 மணியளவில் கோனூர் தி.இராம கிருட்டிணன் நினைவு அரங்கில் சீனிவாச ராகவன் தலைiயில் ம.சரத் குமார், சி.பிரசாத் குமார் முன்னிலை யில் நடந்த பொதுக் கூட்டத்தில் அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, பொருளாளர் துரைசாமி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல், கதிரவன், சூ. கதிரவன் உரையைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியில் அரும்பு அம்பேத்கர் குறித்து கவிதை வாசித்தார். நிகழ்வில் மேட்டூர், திருப்பூர், ஈரோடு, குருவாரெட்டியூர், காவலாண்டியூர் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.
பொறியாளர் இரா. ஸ்ரீராம் நன்றி கூறினார். நிகழ்வுகளை புத்தர் கலைக்குழுவுடன் கழகத் தோழர்கள் இணைந்து நடத்தினர்.
பெரியார் முழக்கம் 18052017 இதழ்