நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவருக்கும் நீதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக புதுச்சேரி, தமிழக அரசுகள் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், ரவி சுப்பிர மணியம், ரகு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாநில அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதியும், ஜெயேந் திரரும் தொலைபேசியில் பேசிய தாக உரையாடல் ஒன்று வெளியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர் நடவடிக்கை எடுக்காததன் பின்னணி குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர், ‘‘சங்கரராமன் கொலை வழக்கில் கீழ் நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில அரசு இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. மேலும் விசாரணை நீதிமன்ற நீதிபதியும், ஜெயேந்திரரும் தொலைபேசியில் பேசிய உரையாடல் குறித்த வழக்கிலும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை’’ என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை 5ஆம் தேதி (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர். மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து தமிழக, புதுச்சேரி மாநில அரசுகள் அதற்குள் பதில் அளிக்கு மாறும் உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையத்துக்கு இலஞ்சம் தர முயன்றதாக – டி.டி.வி. தினகரன் மீது பாயும் சட்டம், நீதிபதிக்கே இலஞ்சம் தருவதற்கு பேரம் பேசிய ஜெயேந்திரர் மீது பாயாதது ஏன்?
பெரியார் முழக்கம் 11052017 இதழ்