மாமல்லபுரத்தில் 2 நாள் கழகப் பயிற்சி முகாம்

சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு பெரியாரியல் அடிப்படைப் பயிற்சி முகாம் 20, 21.7.2013 ஆகிய இரு நாட்களிலும் மாமல்லபுரத்தில் சிறப்புடன் நடந்தது. கிழக்கு கடற்கரைச் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த பண்ணை இல்லத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில் கழகத்தில் புதிதாக தங்களை இணைத்துக் கொள்ள முன் வந்த 33 இளைஞர்கள் கொள்கைப் பயிற்சி பெற்றனர். இதில் பெண்கள் 5 பேர்.

முதல் நாள் காலை 8.30 மணியளவில் தோழர்கள் அறிமுகத்தோடு பயிற்சிகள் தொடங்கின. சுயமரி யாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் செல்லையா முத்துசாமி திரைப்படம் இலக்கியம் குறித்த சமூகப் பார்வை என்ற தலைப்பில் முதல் பயிற்சியை அளித்தார்.

தொடர்ந்து, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் பயிற்சியளித்தார். தேனீர் இடை வேளைக்குப் பிறகு உடுமலை தமிழ்ச்செல்வன் ‘திராவிடர் இயக்க முன்னோடிகள்’ என்ற தலைப்பில் ‘ஒளித்திரை’யுடன் (பவர் பாயின்ட்) சமூக வரலாறு களை விளக்கினார். உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3 மணியளவில், காவை இளவரசன் பேய், பிசாசு, ஜோதிடம், வாஸ்து, மூடநம்பிக்கைகளை விளக்கினார். பயிற்சியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சந்தேகங்களைக் கேட்டனர். தேனீர் இடைவேளைக் குப் பிறகு தோழர் குமார், சமுதாயத்தில் பெரியார் இயக்கத்தின் தாக்கம் குறித்து பயிற்சியளித்தார்.

6 மணியளவில் முதல் நாள் பயிற்சி முடிந்தது. இரவு சார்லி சாப்ளின் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

ஜூலை 21 அன்று இரண்டாம் நாள் பயிற்சி

9 மணியளவில் தொடங்கியது. பகல் 1 மணி வரை ஜாதிய பாகுபாடு; ஒடுக்குமுறைகள்; காரணங்கள்; வடிவங்கள் குறித்து ஜஸ்டின் ராஜ் பயிற்சியளித்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘வகுப்புரிமை-இட ஒதுக்கீடு’ வரலாறுகளை விளக்கிப் பேசினார்.

முன்னதாக, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி ஆகியோர் பயிற்சி முகாம் குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். பயிற்சியில் பங்கேற்ற தோழர்கள் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டதைத் தொடர்ந்து, முகாமுக்கு ஏற்பாடுகளை செய்த தோழர்கள் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, காஞ்சி மாவட்ட தலைவர் டேவிட் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாடுகள், நோக்கம் குறித்துப் பேசினர். இரண்டு நாள் பயிற்சிகளையும் தோழர் விழுப்புரம் அய்யனார் ஒருங்கிணைத்தார்.

நிறைவாக பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார். காஞ்சி மாவட்ட பொருளாளர் சேகர் நன்றி கூற, மாலை 6 மணியளவில் முகாம் நிறைவடைந்தது. இந்த இரண்டு நாள் பயிற்சியில் ஏராளமான சமூக வரலாற் றுச் செய்திகளை அறியும் நல்ல வாய்ப்புகள் கிடைத்த தாக தோழர்கள் கருத்து கூறினர். தனக்கென்று வாழா மல் சமுதாயத்துக்கு இயன்றவரை தொண்டாற்ற வேண்டிய உணர்வை இந்த முகாம் தங்களுக்கு ஊட்டியது என்றும் அவர்கள் கூறினர்.

இரு நாட்களிலும் உணவு, தேனீர் வழங்கும் ஏற்பாடுகளை காஞ்சி மாவட்ட பொருளாளர் சேகர், சென்னை மாவட்ட துணைச் செயலாளர் வேலு, சென்னை கழகத் தோழர் தமிழ்ச் செல்வி, தோழர்கள் சிபி, பரசுராம், பொன்னுசாமி ஆகியோர் முன்னின்று செய்தனர்.  மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் முகாமுக்கு வந்தனர்.

மல்லை சத்யா : ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முகாமுக்கு பெருமளவில் உதவினார். முதல்நாள் மாலை 3 மணியளவில் பயிற்சி அரங்குக்கு வந்து, கழகப் பொதுச்செயலாளர்,  தோழர்களுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கலந்துரையாடினார். தமிழர்களுக்கான திராவிடர் இயக்க லட்சியங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் இத்தகைய பயிற்சிகளின் தேவை அவசியத்தை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

பயிற்சியில்லாத நேரங்களில் பயிற்சியரங்கில் இருந்த நீச்சல் குளம் பயிற்சியாளர்களுக்கு மிகவும் உற்சாகத்தைத் தந்தது. இரண்டு நாள் இயற்கையான மகிழ்ச்சியான சூழலில் நடந்த இந்த பயிற்சி, கழகத் தோழர்களிடையே கொள்கை உறவுகளோடு அனை வரும் கலந்து பேசி மகிழ்ச்சியுடன் உறவாடிய மாற்று நிகழ்வாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 25072013 இதழ்

You may also like...