சலூன் கடையில் முடிவெட்ட மறுப்பு: கழகத்தின் முயற்சியால் வெற்றி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தி ஒன்றிய பகுதிக்குட்பட்ட புதுரோடு பகுதியை சார்ந்தவர் தோழர் பாலாஜி. இவர் நமது கழகத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது ஊருக்கு அருகிலுள்ள புங்கம்பள்ளி பகுதியிலுள்ள சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றார். சலூன் கடைக்குச் சொந்தக்காரர், ‘இந்த கடையில் உனக்கு (தாழ்த்தப்பட்டோருக்கு) முடிவெட்ட மாட்டேன். நீ வேறு கடைக்கு செல்’ என்றார். அந்தப் பகுதியில் இருந்த மற்ற இரண்டு கடைக் காரர்களும் ‘நாங்களும் வெட்ட மாட்டோம்’ என்று மறுத்து விட்டனர். வீடு திரும்பிய தோழர் அந்தப் பகுதியை சார்ந்த மற்ற தோழர் களிடத்தில் இதை கூறினார். உடனே, அங்கு இருந்த தோழர்கள், புதுரோடு இராஜேந்திரன் தலைமையில் கடையினை முற்றுகையிட சென்றார்கள். அவர்கள் அங்கு செல்லும் முன்பாக இராசேந்திரன் அந்த பகுதி காவல் நிலைய ஆய்வாளரை கைபேசியில் அழைத்து, கடையில் நடந்த சம்பவத்தைக் கூறி நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நாங்கள் அந்தக் கடையை எங்களது கழகத்தின் சார்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கூறினார். தோழர்கள் கடைக்குச் செல்லும் முன்பாக கடைக்கு வந்த துணை ஆய்வாளர் தலைமையிலான போலீசார், கடையின் உரிமையாளரை எச்சரித்ததுடன் இல்லாமல், தோழருக்கு அங்கு முடிவெட்டும் வரை இருந்துவிட்டு சென்றனர் மற்ற இரண்டு கடைகளிலும் கழகத் தோழர்கள் முடிவெட்டிக் கொண்டனர். கடையின் உரிமையாளர் கழகத் தோழர்களிடம் இனிமேல் நீங்கள் எப்பொழுது வந்தாலும் நான் உங்களுக்கு முடிவெட்டுகிறேன் என்று உறுதி அளித்த பின்பு, தோழர்கள் அங்கிருந்து சென்றனர். இந்நிகழ்விற்கு அப் பகுதியைச் சார்ந்த பொது மக்கள் தோழர் களுக்கும், கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 15082013 இதழ்

You may also like...