விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பும் உரிமை, நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு உண்டு என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிரான பேரணி சமூகப் பதட்டத்தையும் மத மோதல்களையும் உருவாக்கும் என்று அரசு முன் வைத்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை.

திராவிடர் விடுதலைக் கழகம் செப்டம்பர் முதல் தேதி மாலை மயிலை அம்பேத்கர் பாலத்திலிருந்து வி.எம். சாலை வரை நாத்திகர் விழாவையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்த காவல்துறையிடம் கேட்டது. மாநகர காவல்துறை ஆணையர் மறுத்து விட்டார். கழக சார்பில் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி கே.கே. சசீதரன் முன் ஆகஸ்டு 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதாடினார். அரசியல் சட்டத்தில் ஒரு குடிமகனுக்கு அடிப்படை கடமையாக அறிவியல் மனப் பான்மையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டி, இந்தத் தடையாணை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இந்த ஊர்வலமே சமூக பதட்டத்தை உருவாக்கும் என்று வாதிட்டனர். நீதிபதி கே.கே. சதீதரன் வழக்கை திங்கள்கிழமை (பேரணி நடப்பதற்கு அடுத்த நாள்) ஒத்தி வைப்பதாக கூறினார். கழக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், திங்கள் கிழமை ஒத்தி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று எதிர்ப்பை பதிவு செய்தார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை பேரணி என்பதால் தடையை தகர்க்க வேண்டும் என்ற முனைப்போடு வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் இருவரும் மேல்முறையீட்டுக்கான முயற்சிகளில் இறங்கினர். உடனடியாக மேல்முறையீட்டுக்கான ரிட் மனு தயாரிக்கப் பட்டது. தலைமை நீதிபதியிடம் அவசர விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் கேட்டுக் கொண்டார். தலைமை நீதிபதி கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, நீதிபதிகள் வி.தனபாலன், துரைசாமி ஆகியோரடங்கிய சிறப்பு அமர்வு அடுத்த நாள் சனிக்கிழமை காலை விசாரிக்க உத்தரவிட்டார். சனிக்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை. விடுமுறை நாளில் சிறப்பு அமர்வு விசாரணை என்பது அபூர்வமாக முக்கிய வழக்குகளுக்கு மட்டுமே நடக்கும்.

கலைஞர் கருணாநிதி கைது, ஜெயலலிதா கைது, சங்கராச்சாரி கைது போன்ற வழக்குகளில் தான் இத்தகைய விடுமுறை நாள் சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அதே போன்று பகுத்தறிவுப் பரப்புரை உரிமைக்காக திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த வழக்கில் கழக வழக்கறிஞர்களின் தீவிர முயற்சியால் விடுமுறை நாள் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிபதி தனபால் இல்லத்தில் சனிக்கிழமை நடுப் பகல் விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜிலி, அரசு பிளீடர் அய்.எஸ். இன்பதுரை, சிறப்பு பிளீடர் வழக்கறிஞர் எஸ்.டி.எஸ். மூர்த்தி ஆகியோர் வாதிட்டனர்.

கழக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதிட்டார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் வழக்கிற்கு உதவினர். நீதிபதி சசீதரன், திங்கள் கிழமை வழக்கை தள்ளிப் போட்ட நிலையில் இந்த சிறப்பு  அமர்வு விசாரணைக்குத் தேவை இல்லை என்றும், இந்த பேரணியை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உருவாகலாம் என்றும் அரசு சார்பில் வாதிடப்பட்டது. கழக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பேரணிக்கான அனுமதி மறுப்பு அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ) மற்றும் 51ஏ(எச்) பிரிவுகளுக்கு எதிரானது என்றும், இதேபோல் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டியதோடு ஞாயிற்றுக் கிழமை திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு திங்கள்கிழமை வழக்கை தள்ளி வைத்ததையும் எதிர்த்தார்.

நீதிபதி சசீதரன் குறிப்பான ஆணை ஏதும் வழங்காமல் விசாரணையை தள்ளி வைத்ததை குறை கூறிய நீதிபதிகள் பேரணி நடத்தும் உரிமையை ஏற்றுக் கொண்டனர். சென்னையில் பேரணிகள் நடத்துவதற்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிலிருந்து லேங்க்ஸ் கார்டன் சாலை வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பேரணியை இந்தப் பாதையில் நடத்துவதற்கு அனுமதித்தனர். காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் சிறப்பு விசாரணைக்கு வந்தனர். பேரணியைத் தடுத்திட காவல்துறை மேற்கொண்ட தீவிர முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில் பொதுக் கூட்டம் நடைபெறாமல் தடுக்கும் முயற்சிகளில் காவல்துறை இறங்கியது. பேரணிக்கு நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பொதுக் கூட்டத்தை தடை செய்வதில் நெருக்கடிக்குள்ளான காவல்துறை, பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற பிரச்சினைகளை எழுப்பி, கழகத் தோழர்களை கடுமையான இழுத்தடிப்புக்கு உள்ளாக்கியது. கடைசியில், பொதுக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்த வி.எம். சாலையிலேயே நடத்துவதற்கு அனுமதி வழங்கினர்.

காவல்துறையின் தடை முயற்சிகள் கழகத்தின் பேரணிக்கு கூடுதல் விளம்பரத்தையும் முக்கியத்துவத்தையும் உருவாக்கியதோடு பேரணி, பொதுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடப்பதற்கும் காரணமாயிற்று.

சிறப்பு அமர்வு விசாரணை வரை இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்வதற்கு காரணமான கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோருக்கு பொதுக் கூட்ட மேடையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆடை போர்த்தி, கழக வெளியீடான ‘குடிஅரசு’ தொகுப்புகளை பரிசாக பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.

பெரியார் முழக்கம் 05092013 இதழ்

You may also like...