இந்திய பார்ப்பன ஆட்சியின் மரண விளையாட்டு!
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்த கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த 11 ஆண்டும் எந்த நொடியில்தூக்கு வரப்போகிறதோ என்று மரணத் துடிப்புடன் தான் அவர்கள் காலத்தைக் கடத்தியிருப்பார்கள். இதுவே பெரிய தண்டனை. இதற்குப் பிறகும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாமா என்று மனித உரிமையாளர்கள் கேட்கும் கேள்விக்கு உள்துறை அமைச்சகம், ஒரு விசித்திரமான பதிலை வழங்கியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் கடந்த 6 ஆம் தேதி பதில் மனுவை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. 11 ஆண்டு காலம் கருணை மனுவை கிடப்பில் போட்டது கொடூரமான செயல் அல்ல; மாறாக இவ்வளவு காலமும் அவர்கள் உயிர் காப்பாற்றப்படுகிறதே என்று நிம்மதியோடு கழித்திருப்பார்கள் என்கிறது உள்துறை அமைச்சகம்.
ஆக 11 ஆண்டுகாலம் தூக்குத் தண்டனையை தள்ளி வைத்து, இவர்களை நிம்மதியாக வாழ விடலாம் என்ற நல்ல நோக்கத்தோடுதான் கருணை மனுக்களை கிடப்பில் போட்டு வைத்தார்களா? அதுவே இந்த ஆட்சியின் நோக்கம் என்றால், தூக்குத் தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்து இந்த இளைஞர்களை ஏன் நிரந்தரமாக நிம்மதியாக வாழவிடக் கூடாது?
சரி, 11 ஆண்டுகாலமாக மரணத்திலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த பிறகு, திடீரென்று தூக்கிலிடப் போகிறோம் என்று அறிவிப்பது ‘மரணத்தை’ வைத்து நடத்தும், கொடூரமான விளையாட்டு அல்லவா? அத்தகைய விளையாட்டை இந்தஇளைஞர்களிடையே நடத்தி, அதில் ‘பகடை’ இன்பம் காணவே இந்திய அரசு விரும்புகிறதா?
தமிழ் நாட்டு மக்களுக்கு, பதில் சொல்லட்டும்!
பெரியார் முழக்கம் 19012012 இதழ்