வரலாறுகளை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை தமிழகத்தில் நடந்த இராமாயண எதிர்ப்பு இயக்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையி லிருந்து:

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்களுக்கு வால்மீகி இராமாயணமோ, துளசிதாச இராமா யணமோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது கம்ப இராமாயணம தான். இராவணன என்பவன் ஒரு ஒழுக்கமான மன்னன் என்றும், கடத்தி வந்த சீதையைக்கூட மாண்புடன் நடத்திய பண்பாளன் என்றும்தான் நினைக்கிறார்களே தவிர, வில்லன் கொடியவன் என்ற சிந்தனையே தமிழ்நாட்டு மக்களிடம் இல்லை” என்று மற்றொரு ஆய்வாளர் எழுதுகிறார். ஒரு பெரிய பிரச்சார இயக்கம் இரா மனுக்கு எதிராக நடைபெறுகிறது; இராவணனை வைத்து காவியங்கள் உள்ளன என்றும் எழுதியுள்ளார்.

1922 ஆம் ஆண்டு திருப்பூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில மாநாடு நடக்கின்றது. கோவில் களில் நுழைய இதுவரை அனுமதிக்கப்படாத நாடார்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று, பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். (1950 வரை நாடார்களும்  கோவிலுக்குள் நுழைய முடியாத நிலைதான் இருந்தது.) மதுரை வைத்தியநாத ஐயர் (1939 இல் முதன்முதலாக கோவில் நுழைவு போராட்டம் நடத்தியவர் என்று பின்னாளில் சொல்லிக் கொள்ளப்படுபவர்) ஆட்களை அழைத்து வந்து, இந்த தீர்மானத்தைத் தோற்கடிக்க முயற்சிக்கின்றார். பிரச்சினைகள் வந்து தீர்மானம் அப்போதைக்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்து விடுகிறார்கள். அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசுகிறபோது, “இந்த நாட்டில் மக்கள் அனைவருக்கும் உண்மையில் சுயமரியாதை வந்து சமத்துவமாக நடத்த வேண்டும், சம உரிமை வர வேண்டும் என்றால், இந்த நாட்டில் இருக்கின்ற மனுதர்ம சாஸ்திரம், இராமாயணம், இதையெல் லாம் முதலில் எரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டில் சமத்துவம் வராது” என்று பேசுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்கின்ற கடவுளை உடைக்க வேண்டும், இராமாயணத்தை எரிக்க வேண்டும், காங்கிரஸ் காரராக இருக்கும்போதே பேச தொடங்கிய பெரியார், 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட் டத்தின்போது, வைக்கத்தப்பனை உடைத்து சல்லியாக போடு (சாலை போடுவதற்கு) என்கிறார். இதன் தொடர்ச்சியாக 1927 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில், குடியாத்தத்தில் முதல் நிகழ்ச்சி யாகவும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இராமாயணத்தையும் மனுதர்மத்தையும் எரித்தார்கள்.

இதே நேரத்தில் அம்பேத்கர் பற்றி சொல்லியாக வேண்டும். மகத் என்ற நகரில் சவுதார் என்ற குளத்தில், யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுக்கலாம் என்று 1924 இல் நகராட்சி முடிவு செய்கிறது. 1925 ஆம் ஆண்டு அவ்வுத்திரவை ரத்து செய்கிறார்கள். அப்போது அம்பேத்கர் ‘மூக் நாயக்’ (ஊமைகளின் தலைவன்) என்ற ஒரு பத்திரிகை நடத்துகிறார்.  அதில் ஒரு தலையங்கம் எழுதுகிறார், அதில் சென்னையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகள் என்னை உலுக்கியது என்று எழுதுகிறார். ஒன்று… கேரளாவில் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்கள்  கோவிலைச் சுற்றி  நடப் பதற்கு தடுக்கப்படுவதை எதிர்த்து, தென்னிந்தியா வின் பார்ப்பனரல்லாதார் சங்கத் தலைவர் இராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம்.  இரண்டாவது முருகேசன் என்ற ஒரு தாழ்த்தப்பட்டவர், சென்னை யில் ஒரு கோவிலுக்குள் நுழைந்ததற்காக, காவல் துறை அவர் மீது வழக்கு பதிந்து தண்டனை வழங்கி யுள்ளார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளும் அம்பேத் கரின் உள்ளத்தை உலுக்கியதாக எழுதுகிறார்.

1927 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மகத்தில் தண்ணீர் எடுத்து குடிக்கப் போவதாக ஒரு போராட்டம் அறிவிக்கின்றார். அதன் பிறகு, அதே ஊரில் ஒரு மாநாடு நடத்துகிறார். மார்ச் மாதம் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் வைத்து போராட்டத்தை நடத்தியவர், 1927 ஆம் ஆண்டு டிசம்பரில் இறுதியில் நடத்துகிறபோது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உயர்ஜாதி என அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கிறார். ஜோதி பாபுலே அவர்களின் சத்ய சோதக் மண்டல் (உண்மை நாடுவோர் சங்கம்) என எல்லோரையும் அழைக் கின்றார். அந்த ஊர்வலத்தில் ஆறு பார்ப்பனர்களும் கலந்து கொண்டனர்.  அந்த ஆறு பார்ப்பனர்களில் இருவர் மேடையில் நின்று, மனுதர்மத்தில் நம்மை இழிவுபடுத்தும் பகுதிகளை ஒருவர் படிக்கவும், இன்னொருவர் அதை எரிக்கவும் செய்தனர். (அந்த ஒரு முறை தான் அம்பேத்கர், பார்ப்பனர்-பார்ப் பனியம் என்று பிரித்துப் பேசினார்) பார்ப்பனியம் – பார்ப்பனியம் இல்லாத பார்ப்பனர்கள் என்று அந்த ஒரு முறை மட்டுமே பேசினார்.

சுயமரியாதை இயக்கத்தில் தொடர்ந்து இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம், மனுதர்ம எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது. நாத்திகரான பெரியார் பல கட்டுரைகள் எழுதினார் என்றாலும், கடவுள் நம்பிக்கை உள்ள பலர் எழுதினர். இ.மு.சுப்ரமணிய முதலியார், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ‘இராமாயண ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட தொடர் ஆய்வு கட்டுரையை எழுதினார். அதை பெரியார் ‘குடிஅரசில்’ வெளி யிட்டதுடன், தனியாக புத்தகமாகவும் வெளியிட் டார். (தற்போது திராவிடர் கழகம் மறுபதிப்பாய் வெளியிட்டுள்ளது) அதேபோல் பா.வே.மாணிக்க நாயக்கர் (சேலம் மாவட்டம் பாகல்பட்டியைச் சார்ந்த பொறியாளர், மேட்டூர் அணை கட்டப் பட்டபோது பொறியாளராக இருந்தவர்) அவர்தான் பெரியாரிடம் திருக்குறள் குறித்து விரிவாக விவாதித்தவர். இவர், ‘வால்மீகியின் வாய்மையும், கம்பனின் புளுகும்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். பூர்ணலிங்கம் பிள்ளை என்ற ஒரு ஆய்வாளர், ‘இராவணப் பெரியார்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். இவைகள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தைச் சாராதவர்கள் எழுதிய புத்தகம்.

‘இராமாயண பாத்திரங்கள்’ என்று பெரியார் எழுதிய நூலில், முன்னிலையில் பெரியார் எழுதுகிறார்… “ இராமாயணம் நடந்த கதை அல்ல. அது ஒரு கட்டுக்கதையே. அக்கதையின்படி இராமன் தமிழன் அல்ல. அவன் தமிழ்நாட்டானும் அல்ல. வடநாட்டான். இராமன் கொன்ற மன்னன் இராவணனோ தென்னாட்டான் இலங்கை அரசன். இராமனிடம் தமிழர் பண்பு (குறள் பண்பு) என்பது சிறிதும் இருந்ததாக இல்லை. இராமன் மனைவியும் அது போலவே வடநாட்டவள். அவளிடம் தமிழ்ப் பெண் பண்பு இல்லவே இல்லை. அதில் தமிழ்நாட்டு ஆண்கள் குரங்கு, அரக்கன், ராக்சதன் என்று குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் அரக்கிகள் என்ற குறிக்கப்பட்டுள்ளார்கள். இராமாயண போராட்டத்தில் ஒரு பார்ப்பனர்கூட சிக்கவே இல்லை. போரில் ஒரு வடநாட்டானோ ஆரியனோ பார்ப்பானோ சிக்கவே இல்லை. பார்ப்பனப் பையன் நோய் வந்து இறந்ததற்காக சூத்திரன் கொல்லப்பட்டிருக்கிறான். மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள், செத்தவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டவர்களே ஆவார்கள். தன் தங்கையை மானபங்கம் செய்ததற்காக, இராவணன், இராமன் மனைவியை கொண்டு சென்றான். ராமன் மனைவியை கொண்டு போனதற்காக இலங்கை முழுவதிற்கும் ஏன் நெருப்பு வைக்க வேண்டும்? ராக்சதர்களை ஏன் கொல்ல வேண்டும்? இராமாயண கதை தமிழர்களை இழிவுபடுத்துவதை தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமா யணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது, மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும், தமிழ்நாட்டு சுயமரியாதைக்கும் மிக மிக கேடும், இழிவும் ஆனதாகும். இராமாயண இராமன் சீதை ஆகியவர்களைப் பொருத்தவரைக்கும் கடுகளவும் கடவுள் தன்மை என்பது காணப்படவில்லை.

எப்படி நாடு விடுதலைப் பெற்றவுடன், வெள்ளையர்கள் பெயரை மாற்றி இந்நாட்டவர் பெயர் வைத்ததைப் போலவும், வெள்ளையர்களின் உருவங்களை அப்புறப்படுத்தியது போலவும், தமிழன் சுயமரியாதை உணர்ச்சிப் பெற்றப் பிறகு, தமிழர்களை இழிவுபடுத்தி, கீழ்சாதி மக்களாக்கிய, ஆரிய சின்னங்களையும், ஆரிய கடவுள்களையும், ஆரிய கடவுள்கள் என்பதான உருவங்களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த இரத்த ஓட்ட முள்ள தமிழன் கடமை ஆகும்” என்றெல்லாம் அந்த புத்தகத்தின் முன்னுரையில் பெரியார் எழுதுகிறார்.

1940-1942 வாக்கில், நமது வெறுப்பை காட்டும் அடையாளமாக, இரமாயணம் – பெரியபுராணம் ஆகியவற்றை எரித்து ஒழிக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். பலர் எரிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். இது தொடர்பாக பல விவாத அரங்குகள் நடந்தன. சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக அண்ணாவும், ஈழத்து அடிகளும் கலந்து கொண்டனர். 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதலில் சென்னை சட்டக் கல்லூரியில் நடை பெற்றது. இந்துமத பரிபாலன சபை (இப்போதைய அறநிலைய துறை)யின் இயக்குநர் சி.ஆர்.இராம சந்திர செட்டியார் (கோவையை சார்ந்தவர்), இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இவர் ‘கோவில் பூனைகள்’ என்ற புத்தகத்தை ‘கோவை கிழார்’ என்ற புனைப் பெயரில் எழுதியுள்ளார். இவர் கடவுள் நம்பிக்கையாளர். ஆனால், பார்ப்பன எதிர்ப்பாளர். இவருடைய தலைமையில் அண்ணாவும் ஈழத்தடி களும் ஒரு அணியிலும், சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை தலைவராக இருந்த இரா.பி.சேதுபிள்ளை (சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர்) இன்னொரு அணியிலும் வாதாடினார்கள். அடுத்து மார்ச் மாதம் சேலத்தில் நடந்தது. இங்கும் அதே போல் பார்ப்பன எதிர்ப்பாளரான ஒரு பக்தர் பிரின்சிபால் இராமசாமி கவுண்டர் (சேலம் கல்லூரியில் 27 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்) தலைமை தாங்கினார். இங்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை  தலைவராக இருந்த நாவலர் சோம. சுந்தர பாரதியார் கலந்து கொண்டார். இந்த இரண்டு விவாதங்களிலும் அண்ணாவின் சொற்பொழிவு, ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. இப்படி ஒரு பக்கம் இராமாயணத்தை எதிர்த்து பிரச்சாரம்.

இன்னொரு பக்கம் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு, எம்.ஆர்.இராதா போன்றவர்கள் நாடக வடிவில் தந்தனர். திருவாரூர் தங்கராசு எழுதிய இராமாயண நாடகம் என்ற நாடகம், எம்.ஆர்.இராதாவால் நடிக்கப்பட்டது. நாடகம் தொடங்கும்போது, இராமாயணம் குறித்து பல ஆய்வாளர்கள் எழுதிய புத்தகங்கள் எல்லாம் முதலில் காண்பிக்கப்படுமாம். அதில் இராமனாக நடிக்கும் இராதா ஒரு கையில் கள் மொந்தையுடனும், ஒரு கையில் மாமிசத்துடனும் வருவாராம். (இராமன் மாமிசம் சாப்பிடுபவன், மது அருந்துபவன் என்பதற்கு கதைப்படி நிறைய ஆதாரங்கள் உண்டு. இராஜாஜி எழுதிய ‘சக்ரவர்த்தி திருமகன்’ நூலிலும் கூட மாமிசம் சாப்பிடுவது பற்றி எழுதியுள்ளார்) எம்.ஆர்.இராதாவை காவல்துறை கைது செய்தால் இராமன் வேடத்தை கலைக்காமல் தான் செல்வாராம்.

(தொடரும்)

 

பெரியார் முழக்கம் 19042012 இதழ்

You may also like...