முல்லைப் பெரியாறு: வரலாற்றுப் பின்னணி
முல்லைப் பெரியாறு அணையின் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி:
முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆசியா கண்டத்திலேயே ஒரு நதியை – வேறொரு பக்கம் – விவசாய நிலங்களை நோக்கி திருப்புவதற்காக கட்டப்பட்ட முதல் அணை இது தான்.
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில், சிவகிரி என்ற சிகரப் பகுதியில் தோன்றுகிறது பெரியாறு. வழியில், 6 சிறிய ஆறுகளை இணைத்துக் கொண்டு கேரளாவில் முன்னூறு கி.மீ. தூரம் ஓடி கொச்சி அருகே அரபிக் கடலில் கலக்கிறது.
கேரளாவில் மட்டும் 244 கி.மீ. தூரம் பயணிக்கிறது. கேரளாவின் மின் தேவைகளில் 74 சதவீதம் பெரியாறு நீரின் பயன்பாட்டிலிருந்தே பெறப்படு கிறது.
சிவகிரியில் தோன்றும் பெரியாறு, 48 கி.மீ. தொலைவில் கடந்ததும் முல்லை என்ற இன்னொரு ஆற்றோடு இணைகிறது. மொத்தம் ஏழு நதிகளும் இணைந்து மழைக் காலங்களில் பெரும் வெள்ளத்தோடு அரபிக் கடலில் கலக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்த ஆங்கிலேயர்கள், இந்த நதிநீர் முழுமையும் கடலில் கலப்பதைத் தடுத்து, கிழக்கு பக்கமாகத் தடுத்து, கிழக்கு பக்கமாகத் திருப்பினால், தென் தமிழகம் விவசாய ரீதியாக பயன்பெறுமே என எண்ணினார்.
முல்லையும், பெரியாறும் சந்திக்கும் இடத்தில் அணை கட்டினால், மலையாளிகளுக்குச் சொந்தமான 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கும் என்பதால், திருவிதாங்கூர் சிற்றரசோடு ஒரு முறையான ஒப்பந்தம் போட்ட பிறகு அணையைக் கட்ட வேண்டும் என ஆங்கிலேய அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
அணை இருக்கும் பகுதி தமிழகப் பகுதிதான். என்றாலும் சிக்கலான எல்லைப் பகுதியாக இருப்பதால் எதிர்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்ற எண்ணத்தில் ஆங்கிலேய அரசு சென்னை மாகாண அரசுக்கும், திருவிதாங்கூர் அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் போட்டது. இதுதான் இப்போது பிரச்சினைக்கு மூலக் காரணமாகி விட்டது. இதன் அருகில்தான் பீர்மேடு, தேவிகுளம் போன்ற தமிழர்கள் நிறைந்த பகுதிகளும் உள்ளது. இதை இப்பொழுதும் மீட்டெடுக்க வேண்டுமென தமிழ் தேசியவாதிகள் முழங்குவது குறிப்பிடத்தக்கது.
அணையின் வரலாறு
1815 ஆம் ஆண்டு கேப்டன் வார்ட்ஸ் என்பவர் இந்த அணையைக் கட்ட ஆய்வுகளை மேற் கொண்டார்.
1827 ஆம் ஆண்டு வருவாய்த் துறை வாரிய உறுப்பினராக இருந்த காட்சின் என்பவர்தான் இதற்கான திட்ட அறிக்கையை ஆங்கிலேய அரசிடம் சமர்ப்பித்தார்.
47 வருடங்களுக்குப் பிறகு 1874 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னி குக்கிடம் இத்திட்டம் செயல்படுத்த ஒப்படைக்கப்பட்டது.
மோசமான அடர்ந்த – இருண்ட வனப் பகுதிகளில் யானை, சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளும், பாம்புகளும் நிறைந்த பகுதியில் அணை கட்டுவதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு வேலைகள் தொடங்கப்பட்டது.
மூன்றாண்டுகள் வேலை நடந்து கொண்டிருந்த போது, 1890 இல் ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டு அணை அடித்துச் செல்லப்பட்டது. சவாலான அப்பகுதியில் மீண்டும் அணை கட்ட நிதி கொடுக்க முடியாது என பிரிட்டிஷ் அரசு கூறிவிட்டது.
பென்னி குக், மனம் தளராமல் லண்டனுக்குச் சென்று, தன் சொத்துக்களை விற்றும், கடன் பெற்றும் பணிகளைத் தொடங்கினார். 9 ஆண்டுகள் அணையைக் கட்டினார். 1895 இல் முழுமையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. பென்னி குக்கின் தியாகமும், நேர்மையும் தமிழர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
அணையில் நீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்பால் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் மூழ்கும் அபாயம் குறித்தும் கவலைப்பட்ட ஆங்கிலேயர்கள் அதற்கும் மாற்று ஏற்பாடு செய்தனர். ஆங்கிலேயர்கள், திருவிதாங்கூர் சிற்றரசோடு முறையான ஒப்பந்தம் போட்டனர்.
இது 1886 அக்டோபர் 29 அன்று போடப் பட்டது. நீரில் மூழ்கும் ஏக்கர் ஒன்றுக்கு 5 ரூபாய் வீதம் 8 ஆயிரம் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது.
அன்றைய சென்னை மாகாண அரசு, திருவிதாங்கூர் சிற்றரசுக்கு வருடந்தோறும் இத்தொகையை வழங்கவேண்டும் என்றும், அது பிரிட்டிஷ் நாணயமாக இருக்கவேண்டும் என்றும், இந்த ஒப்பந்தம் 999 வருடங்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் கையெழுத்தானது.
1955 இல் கேரள அரசு இந்த நட்ட ஈடு இன்றைய பொருளாதார மதிப்புக்கு மிகவும் குறைவு என்று கூறியதால், ஏக்கருக்கு 30 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக தமிழகம் உயர்த்தியது. அது இன்றும் தொடர்கிறது.
இடுக்கி அணையும் – சர்ச்சைகளும்
1979 இல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியாகும் நீரை தேக்கும் வகையில் கேரளம், இடுக்கியில் ஒரு அணையை கட்டியது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட பெரியதாகும்.
இடுக்கியில் அப்போது ஏற்பட்ட ஒரு பூகம்பத்தைக் காரணம் காட்டி அணையின் கொள்ளளவான 152 அடி உயரத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசு நிர்ப்பந்தித்தது.
இதுவே ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகும். கேரள அரசு எதிர்பார்த்தபடி இடுக்கி அணையில் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு தண்ணீர் கிடைக் காததால் கூடுதலாக தண்ணீரைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் நாடகம் ஆடியது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 16 அடி குறைத்துவிட்டால் அந்த தண்ணீர் முழுவதும் இடுக்கி அணையில் சேமிக்கப்படும். அதன் மூலம் தாங்கள் எதிர்பார்க்கும் மின் உற்பத்தியைப் பெறலாம் என்பது தான் கேரளாவின் சூழ்ச்சியாகும்.
சர்ச்சை உருவானதால் இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டது. மத்திய அரசின் நீர்வளக் குழுமம், அணையை பலப்படுத்திவிட்டு பிறகு நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தலாம் என பரிந்துரைத்தது.
152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்ட பிறகு 16 அடி உயரமுள்ள அணையின் நீரை தந்திரமாக இடுக்கி அணையில் சேகரித்தது கேரளா. தமிழக அரசு, அணையை பலப்படுத்த முயற்சிகள் செய்யும் போதெல்லாம் கேரள அரசு தடுத்து வருகிறது.
16 அடி நீர் குறைக்கப்பட்டதால் நீரில் மூழ்கும் மலையாளிகளின் நிலம் 8 ஆயிரம் ஏக்கரிலிருந்து 4677 ஏக்கராக குறைந்து விட்டது. ஆனாலும் தமிழகம் 8 ஆயிரம் ஏக்கருக்கான ஒப்பந்தப் பணத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.
கேரளாவுக்கே லாபம்!
16 அடி நீர் மட்டம் குறைந்ததால் 10.4 டி.எம்.சி. யிலிருந்து 6.4 டி.எம்.சி.யாக தண்ணீர் கொள்ளளவு குறைந்தது.
இதனால் தென் தமிழகத்தில் பயனடைந்த நிலங்களில் ஒன்றே கால் லட்சம் ஏக்கர் நிலம் தரிசாகியது. இப் பகுதியில் உற்பத்தியாகும் நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் நிலத்தைச் சார்ந்து இருக்கும் ஆடு, மாடு, கோழி, முட்டை என அனைத்தும் கேரளாவுக்கே ஏற்றுமதியாகின. தெளிவாக சொல்வது எனில் முல்லைப் பெரியாறு அணை நீரால் பயன்படும் பாசனப் பகுதியின் உற்பத்திகள் யாவும் கேரள மக்களின் தேவைகளைத் தான் பூர்த்தி செய்தன. இதைக் கேரள அரசும், மலையாளிகளும் புரிந்து கொள்ள மறுப்பதுதான் வேதனை அளிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேறும் குகைப் பகுதியில், நீரின் சுழற்சியில் 1955 இல் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இப்போது 152 அடியிலிருந்து 136 அடியாக நீரின் கொள்ளளவு உயரம் குறைக்கப் பட்டதால், 140 மெகாவாட் மின் உற்பத்தி, 100 மெகாவாட்டாக குறைந்துவிட்டது. அதே நேரம் குறைக்கப்பட்ட 16 அடி நீரை இடுக்கி அணையில் தேக்கி வைத்து அங்கு மின்சார உற்பத்தி செய்து, அதை தமிழகத்திற்கு கேரள அரசு விற்கிறது.
மத்திய அரசின் நீர்வளக் குழுமம் அணையை ஆராய்ந்து, மராமத்துப் பணிகளை மேற்கொண்ட பிறகு 145 அடியாக உயர்த்தலாம் என்றது. தமிழகம் 26 கோடியை செலவு செய்து அணையைப் புதுப்பித்தது. மீண்டும் மீண்டும் கேரள அரசு சர்ச்சை செய்ததால் இப்பிரச்சினை உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தது.
- அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக தமிழகம் உயர்த்திக் கொள்ளலாம்.
- அணைக்கு அருகிலுள்ள பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். இப்பணிக்கு கேரள அரசும், அதிகாரிகளும் தொந்தரவு செய்யக் கூடாது.
- அணை பலப்படுத்தப்பட்டதும் 152 அடிக்கு தண்ணீரை சேமிக்கலாம்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத கேரள அரசு, சட்டமன்றத்தைக் கூட்டி, கேரளாவில் உள்ள 22 அணைகளின் நீர்த்தேக்க வரையறையில் உச்சநீதிமன்றங்களின் ஆணைகளோ, வேறு மாநில அரசுகளோ தலையிடக் கூடாது என்றும், கேரள அரசே இதைத் தீர்மானிக்கும் என்றும் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்தை செய்தது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேரளாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இரு மாநில முதல்வர்களையும் பேச்சு வார்த்தை நடத்த அறி வுறுத்தியது. அது தோல்வியில் முடிவடைந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழு ஒரு வல்லுனர் குழுவைக் கொண்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அணை உடைந்தால் என்ன செய்வது?
இந்தியாவில் பூகம்பம் ஏற்படக் கூடிய பகுதிகள் 1, 2, 3, 4, 5 என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 1 மற்றும் 2 மண்டலங்கள் மிக லேசான நிலநடுக்கம் மட்டுமே ஏற்படக்கூடிய பகுதிகள்.
முல்லைப் பெரியாறு அணை 1 மற்றும் 2வது மண்டலங்களிலேயே உள்ளது. சிறிய அளவிலான அதிர்வுகளைத் தாங்கும் வல்லமை அணைக்கு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணைகளே அதற்கு உதாரணம்.
ஒரு வேளை அணை உடைவதாக வாதத்துக்கு ஏற்றுக் கொண்டாலும், முல்லைப்பெரியாறு அணையின் தொடர்ச்சியாக அதே ஆற்றில் 13 தடுப்பணைகள் உள்ளது. அடுத்தடுத்து இந்த அணைகளின் வழியாக வெள்ள நீரைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் முல்லைப் பெரியாறு, கேரளாவின் வனப் பகுதியில் 240 கி.மீ. தூரம் ஓடினாலும் சமவெளியில் 23 கி.மீ. தூரம் மட்டும் பாய்கிறது. இங்கு மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். உடையும் அணை நீர் சமவெளிக்கு வருவதற்கு முன்பாகவே தடுப்பணைகள் மூலம் தடுத்துவிடலாம்.
இந்த சந்தேகங்கள் எல்லாம் தேவையே இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள். காரணம் அணை மூன்று முறை நவீன முறையில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய கல்லணையே உறுதியாக நிற்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
கேரள அரசு பதறுவதற்குப் பின்னணி
இடுக்கி மாவட்டத்திலுள்ள பிரவம் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலை மனதில் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி இப்போது பிரச்னையைக் கையாண்டு வருகிறது.
அணை நீர் 152 அடியிலிருந்து 135 அடியாக குறைக்கப்பட்ட பிறகு, 3914 ஏக்கர் நிலப் பரப்பு தண்ணீரிலிருந்து மீட்கப்பட்டது. அது ஒரு எழில்மிகு பகுதி. இப்போது அங்கே அரசியல் வாதிகளும், பணக்காரர்களும் பல விடுதிகளையும், சொகுசு மாளிகைகளையும் கட்டியுள்ளனர்.
அணை நீரை மீண்டும் 152 அடியாக உயர்த்தினால், இப்பகுதிகள் அணை நீரில் மூழ்கிவிடும். இதனால் பல அரசியல்வாதிகள், நடிகர்கள், பணக்காரர்களின் நிலங்களும், கட்டிடங்களும், ஆக்கிரமிப்புகளும் மூழ்கிவிடும். எனவேதான் கேரள அரசு, 152 அடியாக அணையை உயர்த்த அஞ்சுகிறது என்று மீடியாக்கள் குற்றம்சாட்டுகின்றன.
கேரளாவை நம்பலாமா?
புதிய அணை கட்டிய பிறகு, தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைத் தருவோம் என கேரளா கூறுகிறது. கேரளாவை நம்பலாமா? உண்மை என்ன?
கேரள அரசு புதிய அணை குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. அதில், ‘பிற மாநிலங்களுக்கு தண்ணீரின் இருப்பைப் பொறுத்து’ தான் தர முடியும் என்றும், பெரியாறு நதியே இரு மாநில நதி அல்ல என்றும், அது கேரளாவுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் கூறியுள்ளது.
மேலும், ‘1886 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தைத் தவிர பெரியாறு நீரில் தமிழகத்திற்கு வேறு உரிமை இல்லை’ என்று கூறியுள்ளது.
இப்போதே பித்தலாட்டம் செய்யும் கேரள அரசு, புதிய அணையை கட்டினால், பழைய ஒப்பந்தம் இதற்குப் பொருந்தாது எனக் கூறிவிட்டால் என்ன செய்வது? என்பதுதான் தமிழகத்தின் அச்சமாகும்.
உச்சநீதிமன்றமும், மத்திய நீர்வள ஆணையமும் பெரியாறு அணை பற்றி ஆராய்வதற்காக ஐந்து முறை நிபுணர் குழுவை அமைத்துள்ளன. இக் குழுக்கள் ‘அணை பாதுகாப்பாக’ இருப்பதாக உறுதி செய்துள்ளன.
‘மக்கள் உரிமை’
பெரியார் முழக்கம் 19012012 இதழ்