காகபுதூர் கிராமத்தில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

தமிழர் கலை இலக்கிய மன்றம் எனும் பெயரில் ஆண்டுதோறும் பொது மக்களை இணைத்துப் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர் காகபுதூர் கிளைக் கழகத் தோழர்கள். இந்தாண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற விழா ஊர் முழுவதும் களை கட்டியது.

திருவள்ளுவர், மறைமலையடிகள், கர்னல் பென்னிக்குக், புரட்சிக் கவிஞர் ஆகியோரது படத் திறப்பு நிகழ்ச்சி, கூட்டுப் பொங்கல், சமர்ப்பா குமரனின் எழுச்சி இசை நிகழ்ச்சி, மாணவர் கருத்தரங்கு, பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், குடந்தை சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி, மாணவர்கள் கலை நிகழ்ச்சி, கருத்துப் பட்டறை, முல்லைப் பெரியாறு திரைப்படம் என மூன்று நாட்களும் விழாக் கோலம் பூண்டிருந்தது காகபுதூர் கிராமம்.

காணும் பொங்கலன்று நடைபெற்ற நிறைவு நாளன்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி கருத்துரையாற்றினார். மக்களை ஒன்றுபடுத்தி, சாதிமத பேதமற்ற மூடத்தனங்களற்ற பகுத்தறிவுச் சமுதாயத்தை உருவாக்க கழகம் ஆற்றிவரும் பணிகளை விளக்கிப் பேசினார்.

மூன்று நாள் நிகழ்ச்சியிலும் ஊர்ப் பொது மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு பங்கேற்றனர். சரியாக  பத்தாண்டுகளுக்கும் முன்பு இதே ஊரில் கருப்பு சட்டை அணிவதற்கே தடை விதிக்கப்பட்டது. கழகத் தோழர்கள் சாதி ஆதிக்கவாதிகளால் கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். தோழர் காசு. நாகராசனின் குடும்பம் மூன்று முறை ஊர் விலக்கம் செய்யப்பட்டது. தோழர்கள் நடத்தி வந்த தாய்த் தமிழ்ப் பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது.ஆனால், அத்தனை இடையூறுகளையும் தாண்டி கழகத் தோழர்களின் சீரிய பணி காரணமாக இன்றைக்கு மக்கள் கழகத்தை அங்கீகரித்து பேராதரவு கொடுத்து வருகின்றனர். காகபுதூரில் நடைபெறும் கழக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மக்களே செலவுகளை ஏற்று வருகிறார்கள். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவிற்கு ரூ25 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. பொது மக்கள் வழங்கிய நன்கொடை ரூ.30 ஆயிரம். 5000 ரூபாய் மிச்சமாகியுள்ளது. 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பெரியாரியல் கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரணம், தோழர்களின் சலியாத உழைப்புதான்.

இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்களோடு தமிழர் கலை இலக்கிய மன்றம் சார்பாக தோழர்கள் சு.கந்தகுமார், மு.இராமகிருட்டிணன், சு. அப்புசாமி, க.தேவராசு, சு.கண்ணப்பன், சு.சின்னக்கண்ணன், மகேசு, மனோகரன், மு.குப்புராசு, கேபிள் மோகன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பரமசிவம், மோ.செல்வி, செ.செல்வநாயகி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சு.நடராசன், ம.இராமலிங்கம் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தினர்.

 

பெரியார் முழக்கம் 02022012 இதழ்

You may also like...