பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை
இப்போது இங்கு பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது, “இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து” என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கல்யாணம் நடந்த போதி லும் மணப்பென் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை.
ஏனெனில், இத் திருமணத்துக்குச் சம்மந்தப் படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப் பட்டிருக்கிறது. கற்பு என்பதைச் சுகாதாரத்தையும், சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன் என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை. உதாரணம் என்னவென்றால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்னவென்றால் இந்துக் கடவுள்கள் என்பவற்றிற்கும்கூட ஆண் கடவுள்களுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த – அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
இந்தத் தனி உடைமை தேசத்தில் இது ஒழிக்கப் படுவது என்பது சுலபத்தில் ஏற்படக்கூடிய காரியமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது.
ஏன் என்றால், பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலைமை.
எப்படி எனில், “புருஷன் சம்பாதிக்கிறவன். சம்பாதித்த பொருளுக்கு அவனே சொந்தக்காரன்; மனைவிக்குச் சோறு போட்டுச் சேலை கொடுத்துக் காப்பாற்றுகிறவன்; மனைவி பெற்ற குழந்தைக்குத் தன் சொத்துக்களைக் கொடுக்கிறவன்; குடும்பப் பாரமும், குடும்பப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுகிறவன். ஆகவே, அவனுக்கு – அவனால் காப்பாற்றப்படுகிற – அவன் மீது பொறுப்பு விழுந்த மனைவியை அடக்கி ஆள உரிமை உண்டு” என்பது இன்றைய சமுதாய முறைச் சட்டமாய் இருக்கிறது. இதை எப்படி ஒருவன் மறுக்க முடியும்?
சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றால் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு இத்திறமைகள் இல்லாத ஒரு புருஷனைக் கட்டிக் கொள்வதாய் இருந்தால் மாத்திரம் ஆண்களைப் பெண்கள் அடக்கியாள முடியும்; முடியாவிட்டாலும் சம சுதந்தரமாகவாவது இருக்க முடியும். இதில்லாமல் எவ்வளவு சுயமரியாதை யும், சம சுதந்தரமும் போதித்தாலும் பெண்களுக்குச் சம சுதந்தரமும், சம கற்பு என்பதும் ஒரு நாளும் முடியக் கூடிய காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். அன்றியும் அப்படிப்பட்ட திறமை அற்றவர்களுக்குச் சமசுதந்தரம் அளிப்பதும் ஆபத்தான காரியம்தான்.
ஆதலால், பெண்கள் சுதந்தரம், இந்த மாதிரி கல்யாண காலங்களில் பேசி விடுவதாலோ, “சுத்த” சுயமரியாதை முறையில் திருமணம் செய்து விடுவதாலோ ஏற்பட்டு விடாது.
தனி உரிமை உலகில் பெண்கள் சுதந்தரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல் பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். ஜீவனத்துக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தாய் தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல் – அதுவாக (பெண்ணாகவே பார்த்து) தகுந்த வயதும், தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் கன்னிகாதானம், கல்யாணம், தாரா முகூர்த்தம் என்கின்ற வார்த்தைகளே மறைந்து – அகராதியில்கூட இல்லாமல் ஒழிய வேண்டும். அன்றுதான் பெண்கள் சுதந்தரம் அனுபவிக்க இலாயக்குள்ளவர்களாவார்கள்.
பெரியார், ‘குடிஅரசு’ 1.3.1936
பெரியார் முழக்கம் 08032012 இதழ்