ஊர்த் தமிழன் – சேரித் தமிழன் பேதத்தை ஒழித்திட தயாராவோம்!
இரட்டை தம்ளர், இரட்டை சுடுகாடு என்ற சாதித் தீண்டாமை வடிவங்களை எதிர்த்து பரப்புரை நடத்திய பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் பிறந்த நாளில் பரமக்குடியிலிருந்து ‘ஊர்-சேரி’ என்ற இரட்டை வாழ்வுரிமை அவலங்களை எதிர்த்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது.
‘சுதந்திரம்’ பெற்று விட்டதாக கூறப்படும் ஒரு நாட்டில், ஊரின் கடைக் கோடியில் சாதியால் ஒதுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் தனியாகக் குடியமர்த்தப்பட்டுக் கிடக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமும், ‘ஊர்-சேரி’ என்று பிரிந்து கிடக்கிறது. இப்படி ஒரு இழிவானதலைகுனியத்தக்க பிரிவினை அமைப்பு நீடித்து வருகிறதே என்ற சிந்தனைகூட வற்றிப் போய், தமிழர் சமூகம் கிடக்கிறது என்பதுதான் வேதனை.
“மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும். ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்ன வென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப் படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும் சாந்தத்தோடும் அகிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”
– என்று பெரியார் 1920 ஆம் ஆண்டிலேயே திருச்செங்கோட்டிலே கேட்டார்.
கேரள மாநிலம் வைக்கத்திலே, ‘தெருத் தீண்டாமை’யை எதிர்த்து வீதிகளில் நடக்கும் உரிமை கோரி போராடி சிறை சென்றார். அருவிக்குத்தி தீவுச் சிறையில் ஒரு மாதம் அடைக்கப்பட்டு விடுதலையானவுடன் மீண்டும் களம் புகுந்த பெரியாரை திருவாங்கூர் சிறையில் கடுங்காவல் கைதியாக 6 மாதத் தண்டனை விதித்து அடைத்தார்கள்.
திருவாங்கூர் சிறையில் பெரியார் எப்படி அடைக்கப்பட்டிருந்தார்?
“கால்களில் விலங்குச் சங்கிலி தலையிலே கைதிகள் அணியும் குல்லாய். முழங்கால் களுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேஷ்டி. கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர் களோடும் வேலை செய்து கொண்டு இருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்குச் செய்வானோ அதுபோல இரு மடங்கு வேலை செய்கிறார்” என்று வைக்கம் போராட்டத்தைத் தொடங்கிய கேசவ மேனன் எழுதியுள்ளார்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் முதன்மையான இலக்கே சாதி ஒழிப்புதான். தீண்டாமைக்கு மூலம், சாதி யமைப்புதான். சாதியமைப்பை முன்னிறுத்தியே பெரியார் பார்ப்பன எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் எதிhப்பு என்ற எல்லை வரை கொள்கைப் பரப்பை விரிவாக்கினார். பெரியார் இறுதி வரை வலியுறுத்திய ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையும் முதன்மையாக ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்காகத்தான்.
தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து, ஒருமித்த கூட்டு உளவியலை தகர்த்ததில் சாதிக்கு பெரும் பங்கு உண்டு. சாதி – மனித நேயத்தை – ஜனநாயக பண்பை – கூட்டுச் செயல்பாட்டை – சமூக மயமாக்கலைத் தடுத்து நிறுத்தியதோடு, வெறுப்புகளுக்கு உரமேற்றி மனித மாண்புகளை குழி தோண்டிப் புதைத்து விட்டது. தமிழனாக ஒன்று சேரவிடாமல் தடுத்து நிறுத்தும் சாதி; சாதியால் மட்டும் குழுக்களை ஒன்று திரட்டுகிறது என்றால், தமிழினம் எப்படி வலிமை பெற்று தனது உரிமைக்குப் போராட முடியும்?
அனைவருக்கும் சம உரிமை என்ற உண்மையான ஜனநாயகப் பண்புகளை சாதி மறுக்கிறது. அனைவரும் சமமாக முடியாது என்ற பார்ப்பனியமே – சாதியமாக உருத்திரட்சி பெற்று திகழ்கிறது. ஜனநாயகப் பண்புக்கு எதிரான இதே சாதி தான் இந்த நாட்டில் ‘ஜனநாயக’ தேர்தலில் சக்தியோடு பங்காற்றுகிறது என்பதுதான் விதித்திரமான நகை முரண்! ஆக, தேர்தல் ஜனநாயகத்திற்குள்ளும் சாதி தலைநீட்டுவதற்கான வாய்ப்புகள் வருகிறது என்றால், ஜனநாயகத்தின் உயிரோட்டம், கொலை செய்யப்படுகிறது என்பது தானே!
தமிழனின் ஜனநாயகத்தை – தமிழனின் வாழ்க்கை முறையை – தமிழனின் உறவு முறையை – தமிழனின் பண்பாட்டுக் கூறுகளை – தமிழனின் மொழி தீர்மானிக்காமல், சாதியக் கூறுகளே மேலாதிக்கம் செலுத்தி நிற்கிறது. இவை எல்லா வற்றையும்விட தமிழன் உருவாக்கும் கட்சிகளுக்கே கூட சாதியமே அடித்தளமாகும் அவலநிலை அதிகரித்து வருகிறது; மொழி வழித் தமிழனை தேட வேண்டியிருக்கிறதே!
அரசியல் – பண்பாடு – சமூகங்களில் சாதியைப் பேணிக் கொண்டிருப்பதை எதிர்க்காமல், கண்டும் காணாமல், ஒதுங்கிக் கொண்டு, தமிழின அரசியலை நோக்கி அறைகூவல் விடுப்பது எப்படி தமிழின அரசியலுக்கு வலிமை சேர்க்கும்?
சாதி எதிர்ப்புக் களம் நோக்கிய தொடர்ச்சியான பயணத்தின் வழியாகவே சாதிய ஒடுக்குமுறையின் இறுக்கத்தை தகர்த்து பலவீனமாக்க முடியும். அந்தப் பாதைகளில் பயணப்பட்டுக் கொண்டேதான் தமிழின ஒர்மைக்கு வழியமைக்க முடியும் என்பதே பெரியாரியம் தந்துள்ள கொள்கை வெளிச்சம். சாதித் தமிழனை தமிழனாக்குவோம் என்ற நோக்கோடு பெரியார் திராவிடர் கழகம் சாதிய பிரிவினைகளுக்கு சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பரப்புரை இயக்கத்தை மீண்டும் தொடங்குகிறது.
மனிதனுக்கு மனிதன் இழைக்கும் இந்த ‘அவமானங்களை’ இழிவுகளை எதிர்த்து நாம் புறப்படும்போது பெரியாரை இழித்துப் பழித்துப் பேசிக் கொண்டு, ஒரு சிறு கும்பல் புறப்பட்டிருக் கிறது. இப்படி எத்தனையோ ‘வசை’களை துரோகங்களை சந்தித்தே பெரியாரியத்தின் பயணம் தொடருகிறது.
சாதி எதிர்ப்பு – பார்ப்பன எதிர்ப்பு – இந்துத்துவ எதிர்ப்புகளைவிட பெரியார் எதிர்ப்பே எங்களது முதன்மைப் பணி என்று பேசுகிற கூட்டங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் கூச்சல் போடட்டும்; அது பற்றி நமக்குக் கவலை இல்லை.
பெரியாரின் கொள்கை வழி நிற்கும் சாதி எதிர்ப்பாளர்களாகிய நாம், நமது கொள்கைப் பயணத்தைத் தொடருவோம்!
பயணம் வெற்றிப் பெற தோழர்களே, அணியமாவீர்!
பெரியார் முழக்கம் 12042012 இதழ்