பெரியார் தொண்டர் கோபி நாகப்பன் மறைவு

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழகத் தோழர் மணிமொழி தந்தையும், நம் கழகத் தோழர் நிவாஸ்  மாமனாருமான தோழர் நாகப்பன் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக் குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார்.  அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்போடு எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன்நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர். வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதி உள்ளிட்ட எந்த நிகழ்வும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.  தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன், திராவிடர் கழகம் யோகனந்தம், இந்திய கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் சோமசுந்தரம், மா. கம்யூனிஸ்ட் அய்யாவு, மதிமுக மாவட்ட துணை செயலாளர்  வழக்கறிஞர் கந்தசாமி, தாய் தமிழ் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமணன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். இறுதியாக நிவாஸ் நன்றி கூறினார். முன்னதாக நாகப்பன் இறுதி நிகழ்வில் உறவுகள் அவருக்கு சடங்குகள் செய்ய முற்பட்ட போது தோழர்கள் அதனை தடுக்க அவர்  திராவிடர் கழகத்தில் இருந்த போது எழுதி வைத்து சுவரில் மாட்டி இருந்த மரணசாசனம் அறிவிப்பு அட்டையை எடுத்து உறவினர் கொடுத்து படிக்க வைத்ததால் அவர்கள் அமைதிஆயினர். இதன் மூலம் ஒவ்வொரு பெரியார் தொண்டர்கள் வீட்டில் மரண சாசனம்என்பது அவசியம் இருக்க வேண்டும் என்று தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 02022017 இதழ்

You may also like...