கருகி நிற்கிறோம்!

எங்களின் தானியக் குதிர்கள்..

அடகுக் கடை ரசீதுகளும்,

வங்கி அனுப்பிய “ஜப்தி” நினைவூட்டல் கடிதங்களாலும்,

மூழ்கிப் போன நகைகளின் விபரக் காகிதக் குறிப்புகளாலும் நிரம்பியுள்ளன….

ஏர்முனை தூக்குமேடை ஆகிவிட்டது

பயிர் பூச்சிகளை அழிக்கும் நஞ்சுகள்

எங்கள் உயிர்மூச்சை நிறுத்தும் நிவாரணிகளாகி விட்டன…

விதைமணிகளை கொன்றாகிவிட்டது,

நுகத்தடிகளையும், கால்நடைகளையும் விற்று தின்றாகிவிட்டது.

இங்கு…

நீர்தருவாரும் இல்லை

கண்ணீர் துடைப்பாரும் இல்லை!

கருகி நிற்கிறோம்

எரியும் பயிர்களுக்கு துணையாக..!

ஏறு தழுவதற்கு போராடும் தமிழரே!

சோறு தரும் எங்களை சாவு தழுவ

விடாதிருக்க இணைவீரா?

போராடவில்லை என்றாலும் போகிறது…

பொங்கல் வாழ்த்து சொல்லிவிடாதீர்கள் ….

பச்சையமுள்ள பயிரைக் காணாதவரை,

உழவனுக்கு பொங்கலின் நிறம் எல்லாம் கருப்பே..!

-பெ.கிருஷ்ணமூர்த்தி

பெரியார் முழக்கம் 19012017 இதழ்

You may also like...