திவிக வரவேற்கிறது இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.

வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு.

காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு ஆதரவு’ என்ற போராட்டத்தின் வழியாக வெடித்திருக்கிறது. இந்த உண்மையை தொலைக்காட்சி விவாதங்களில் மாணவ-மாணவிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.  இது அவர்களின் ஆழமான, தெளிவான புரிதலை வெளிப்படுத்துகிறது. முதன்மையான இந்த எதிர்ப்பு நோக்கத்தை மடை மாற்றி ‘பீட்டாவை தடை செய்’ என்ற முழக்கத்தோடு குறுக்கி விடுவது போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஆபத்தான முயற்சியாகும். பீட்டாவுக்கு எதிரான குரலும் ஒலிக்கலாம்; ஆனால் அது ஒன்று மட்டுமே நோக்கமாகிடக் கூடாது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வாழ்வியல் சார்ந்த பகுதிகளில் ஜாதிகள் இல்லாத தமிழர் பண்பாடே நமது பண்பாடு என்பதை சங்க இலக்கியங்கள் நமக்கு கூறுகின்றன. பிறகு வடநாட்டு பார்ப்பனியத்தால் நுழைந்த ‘வர்ணப் பாகுபாடு’ அந்த ‘வர்ணங்களின்’ கலப்பினால் உருவான ‘ஜாதி’; தொடர்ந்து அந்த ஜாதியையும் அதன் கட்டமைப்பையும் நிலைநிறுத்த வந்த பார்ப்பன நிறுவனங்கள் அனைத்துமே தமிழர் பண்பாடு அல்ல. மாறாக தமிழின பண்பாட்டைச் சீர்குலைத்த சமூகக் கொடுமை என்ற புரிதலுடன் இந்தப் பண்பாட்டு உரிமைப் போராட்டத்தை நமது மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்தால் அது மகத்தான சமூகப் புரட்சிக்கு இழுத்துச் செல்லும் என்பது உறுதி. இதுவே நமட்ககான பண்பாட்டு மீட்பும் ஆகும்.

‘ஜல்லிக்கட்டு’ தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டு என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அதன் நடைமுறைகளில் ‘ஜாதியம்’ ஊடுருவி, நமது பண்பாட்டை சீரழித்தக் காரணத்தால்தான் ஜல்லிக்கட்டை எப்படி தமிழர் பண்பாடாக ஏற்க முடியும் என்ற கேள்வியை நாம் இப்போதும் எழுப்பியே வருகிறோம். ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தக் கேள்வியை போராட்டக் களத்தில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக நிற்கும் இளைஞர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஜாதிகளற்ற ஜல்லிக்கட்டே நமது தமிழ் பண்பாட்டின் பெருமைக்குரிய அடையாளமாக இருக்க முடியும்.

தமிழர் பண்பாட்டுக்கு எதிராக மாட்டிறைச்சிக்கு தடை போட வேண்டும் என்றும், இந்தியா முழுதுமே இந்துக் கலாச்சாரம் மட்டுமே ஒற்றைக் கலாச்சாரம் என்றும் கூறிக் கொண்டு அதிகாரங்கள் வழியாக அதைத் திணிப்பவர்கள் நமது தனித்துவமான பண்பாட்டை சீர்குலைக்க துடிப்பவர்கள் என்ற புரிதலோடு இந்தப் போராட்ட எழுச்சியை ஆதரிப்பதுபோல முகம் காட்டுவோரையும் ஊடுருவ நினைப்போரையும் எச்சரிக்கையுடன் முறியடிக்க வேண்டும்.

சென்னை கடற்கரையில் திரண்ட மாணவர்கள், “நாங்கள் தலித்துகள் அல்ல; மறவர்கள் அல்ல; கவுண்டர்கள் அல்ல; அனைவரும் தமிழர்கள்” என்ற முழக்கமிட்டிருப்பது, மாணவர்களின் தெளிவான பண்பாட்டுப் புரிதலை அடையாளம் காட்டுகிறது. ‘கோக், பெப்சி’ போன்ற பன்னாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று சில மாவட்டங்களில் வணிக அமைப்புகள் முடிவெடுத்திருப்பதும் போராட்டத்தின் சரியான திசை வழியைக் காட்டி நிற்கிறது.

இதேபோல் எகிப்து நாட்டில் இணையதளங்கள் வழியாகத் திரண்ட இளைஞர்கள்தான் அங்கே ஒரு புரட்சியை நிகழ்த்தினார்கள். ‘அரபு வசந்தம்’ என வரலாற்றில் குறிப்பிடப்படும் அதே புரட்சி ‘தமிழர் வசந்தமாக’ உருப்பெற்று, சமத்துவமான சுயமரியாதையுள்ள தமிழர் உரிமைகளையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் பாதையில் நமது இளைய சமுதாயம் பயணிக்கும்; அதற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது. எழுந்து நிற்கும் – தொடரும் இளைய சமுதாயத்தின் போராட்டக் களத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் துணை சேர்க்கும்; அரண் அமைத்துத் தரும் என்று உறுதி கூறுகிறோம்.

கொளத்தூர் மணி

தலைவர்

திராவிடர் விடுதலைக் கழகம்

You may also like...