‘குடி செய்வார்க்கில்லை பருவம்’
அவசர சூழலில் ‘ஆம்புலன்ஸ்’ வந்து நிற்பதுபோல் கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கிய செயல்பாடுகளும் கடந்த காலத்தில் நிகழ்ந்தன. அவற்றுள் சில:
ஈரோடு மாவட்டம் ஆர்.எஸ். புதூர் பகுதியிலுள்ள சி.எம். நகரில் பொது சுடுகாட்டில் ஒரு அருந்ததியப் பெண் சடலத்தை எரியூட்ட ஜாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்தனர். சடலத்தை பாதி வழியில் நிறுத்திய நிலையில் செய்தி அறிந்த ஈரோடு, கோபி கழகத் தோழர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து போராடிய உள்ளூர் மக்களுடன் இணைந்து அதிகாரிகளிடம் வாதாடி வழக்கறிஞர்களையும் வரச் செய்து 7 மணி நேரம் போராடிய பிறகு ஜாதி வெறியர்கள் பணிந்தனர். தலித் பெண் சடலம் ஜாதி எதிர்ப்பு முழக்கங்களுடன்
பொது சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. 2016, ஏப்.27 அன்று இது நடந்தது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை நாளில் பார்ப்பனர்களைக் கொண்டு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. செய்தி அறிந்து நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள் விரைந்தனர். பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பூஜையையும் யாகத்தையும் நிறுத்த வேண்டும்; இது அரசு ஆணைக்கு எதிரானது என்று வலியுறுத்தினர். முதலில் கழகத் தோழர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட காவல் துறை, பிறகு பொது மக்கள் திரண்டு வந்தவுடன் தோழர்களை அழைத்து சமரசம் பேசி பூஜைகளை நிறுத்தியதோடு, யாகம் நடத்த வந்த புரோகிதர்களையும் திருப்பி அனுப்பியது.
சாக்கடைக் குழியில் மனிதர்களை இறக்குவது சட்டப்படி குற்றம். ஆனால் சட்டங்களை மீறி சாக்கடைக் குழிகளில் துப்புரவு தொழிலாளர்கள் இறக்கப்படுவதும் அவர்கள் நச்சுப் புகையில் சிக்கி மரணமடைவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 19ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதியில் (123ஆவது வட்டம்) பாதாளச் சாக்கடைக்குள் தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருப்பதை அறிந்த மயிலாப்பூர் கழகத் தோழர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தோழர்கள், குழியில் இருந்த தொழிலாளர்களை வேலையை நிறுத்துமாறு கூறி அங்கே இருந்த ஒப்பந்தக்காரரிடம் மாநகராட்சி ஊழியரிடமும் இது சட்ட விரோதம் என்பதை சுட்டிக்காட்டினர். அதிர்ச்சியடைந்த ஒப்பந்தக்காரர் மற்றும் மாநகராட்சி ஊழியர் அங்கிருந்து தங்கள் இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்று விட்டனர். காவல்துறையிடம் தொடர்பு கொண்டு தோழர்கள் புகார் செய்தனர். காவல்துறை கழகத் தோழர்களின் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்தது.
பெரியார் முழக்கம் 05012017 இதழ்