பெண்கள் சடலத்தை சுமந்து சென்றனர் இளந்தாடி துரையரசன் முடிவெய்தினார்
87 வயது பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு மற்றும் இந்தி எதிhப்பு உள்பட பெரியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறை சென்றவர். தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் கருப்புச் சட்டையுடன் இறுதி வரை கொள்கை மாறாமல் வாழ்ந்து காட்டிய இளந்தாடி தி.க. துரையரசன், 17.6.2016 அன்று திருச்சியில் முடிவெய்தினார்.
அன்று மாலை இறுதி நிகழ்வு இரங்கல் கூட்டம் பெரியார் தொண்டர் மருத்துவர் எம்.எஸ்.முத்து தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் த.பெ.தி.க. – சீனி விடுதலை அரசு, தி.மு.க. வெளியீட்டு செயலாளர் திருச்சி செல்வேந்திரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் கலிய பெருமாள், வனச்சரக (ஓய்வு) அலுவலர் பெரியார் உணர்வாளர் கோவிந்தசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி திருச்சி சரவணன் மற்றும் பலர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
இறுதி ஊர்வலத்தை கழகத் தோழர்கள் முன்னின்று நடத்தினர். சந்தவேல், குமார், திருச்சி புதியவன் ஆகியோர் வீரவணக்க முழக்கத்துடன் அவரது குடும்பத்தார் சம்மதத்துடன், அவரது வீட்டுப் பெண்களே சடலத்தை இடுகாடு வரை சுமந்து வந்தனர். திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் அசோக், மாவட்ட பொருளாளர் மனோகரன், விஜி மற்றும் திரளான பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் முழக்கம் 30062016 இதழ்