மதவாத ஆட்சிகள் பாடம் பெறுமா? பிரிட்டன் விலகியது; ஸ்காட்லாந்து விலகப் போகிறது
28 நாடுகளைக் கொண்டு 43 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது அய்ரோப்பிய ஒன்றியம். அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து இப்போது பிரிட்டன் விலகிவிட்டது. வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் விலகலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் விலகல் அய்ரோப்பிய நாடுகளிடையே கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டன், ஸ்காட்லேண்ட், வேல்ஸ், வடக்கு அயர்லாந்த மாநிலங்கள் அடங்கியுள்ளன. ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மாநிலங்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கவே கூடுதலாக வாக்களித்துள்ளன. அய்ரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிட்டன் விலக முடிவு செய்தவுடன், ஸ்காட்லாந்து, பிரிட்டனோடு இணைந்திருக்க விரும்பவில்லை. 2 ஆண்டுகளுக்குள் ஸ்காட்லாந்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரிட்டனோடு இணைந்திருக்கவே கூடுதலான ஆதரவு கிடைத்தது. இப்போது அங்கே கூடுதலானவர்கள் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பிரிட்டிஷ் ஏடுகள் தெரிவிக்கின்றன.
சந்தை பொருளாதாரம், அடிப்படை மதவாதம் இரண்டும் இன்று உலகநாடு களில் பிரச்சினைகளாக முன் நிற்கின்றன. இதில் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் இருக்கிறது. எந்த ஒரு தேசத்துடனும் இணைந்து நிற்க விரும்பாத தேசிய இனங்கள் பிரிந்து செல்ல விரும்பினால் அதை சட்டத்தினால் தடுத்து விட முடியாது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களை அவர்களின் அடையாளங்களை அழித்து ‘இந்தியனாக்க’ இந்திய அரசு திட்டமிட்டு காய் நகர்த்துகிறது. தேசிய இனங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுக்கும் போக்கு ஒரு போதும் வெற்றி பெறாது.
அய்ரோப்பிய ஒன்றியங்களிலுள்ள நாடுகளில் வாழ்வோர் பெரும்பாலும் கிறித்துவர்கள்தான். கிறித்துவர்களுக்கு தனியாக கிறித்துவ நாடு வேண்டும் எனவே பிரியக் கூடாது என்ற மதவாதப் பார்வை அவர்களிடம் இல்லை. ஆனால் மோடி ஆட்சியோ ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்தைத் திணிக்கத் துடிக்கிறது. இந்தியன், ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளங்கள் பார்ப்பனியத்தால் தேசிய இனங்கள் மீது திணிக்கப்படும் அடையாளங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளாக உலகின் பல நாடுகள் இருந்தாலும் முக்கியப் பிரச்சினைகளில் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்துகளைக் கேட்டும் வருகின்றன.
அண்மையில் சுவிட்சர்லாந்து நாடு அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை இலட்சம் ரூபாய் மாத ஊதியம் வழங்க முடிவு செய்தது. இது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி கருத்து கேட்டது. பெரும்பான்மை மக்கள் இத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் அய்ரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கவே விரும்பினாலும் தனது கருத்தை மக்கள் ஏற்காததால் பதவி விலகுகிறார்.
இந்தியா – காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் இந்தியாவுடன் இருப்பதா? பாகிஸ்தானுடன் இருப்பதா? அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை முடிவு செய்வோம் என்று அய்.நா.வில் தந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முன்வரவில்லை. இலங்கையில் இனவாத ஒற்றை ஆட்சி நடத்தும் இலங்கை ஈழத் தமிழர்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தி கருத்து கேட்க தயாராக இல்லை. அய்ரோப்பிய நாடுகளில் மக்கள் கருத்தை மதிக்கிறார்கள்; மதவாத ஆட்சிகளோ மக்களை ஒடுக்குகின்றன.
பெரியார் முழக்கம் 30062016 இதழ்