பெரியார் நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்த வேமண்ணா முடிவெய்தினார்
தந்தை பெரியாரின் நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்த்து,
கன்னட மக்களிடம் பெரியார் சிந்தனைகளை கொண்டு சென்ற எழுத்தாளர்
வேமண்ணா (89). பெங்களூரில் கடந்த ஜூன் 8ஆம் தேதி முடிவெய்தினார்.
1960களில் பெரியார் பெங்களூரு கோலார் தங்கவயல் பகுதிகளுக்கு பொதுக்
கூட்டங்களுக்கு சென்றபோது, வேமண்ணா, பெரியாருடன் உரையாடி,
நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். கன்னட மொழியைப் படித்தால் பகுத்தறிவு
கருத்துகளை கன்னட மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுமே என்று
பெரியார் அறிவுறுத்தியதை ஏற்று, பெங்களூர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து
முறைப்படி கன்னடம் பயின்றார். கடந்த 50 ஆண்டுகளில் பெரியாரின்
30க்கும் மேற்பட்ட நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.
பெரியாரின் வாழ்க்கை வரலாறு நூலையும் கன்னடத்தில் எழுதிய
பெருமைக்குரியவர். இந்த நூல் ஹம்பி பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது பெரியாரியல் பணிகளை பாராட்டி, ‘கன்னட ரத்னா’, ‘பெரியார் முழக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளை பல அமைப்புகள் வழங்கி கவுரவித்துள்ளன. வேமண்ணாவின் இயற்பெயர் வி.சி.வேலாயுதம். தமிழ்நாட்டுத் தமிழர். 1946இல் வேலை தேடி பெங்களூருக்கு சென்றார். அங்குள்ள ராஜா நூல் ஆலையில் பணியாற்றிய வேமண்ணா, பெரியாரின் சுயமரியாதை கருத்துகளில் ஈர்க்கப்பட்டார். பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்த வேமண்ணாவுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அவரது
துணைவியார் கடந்த ஆண்டு மரணமடைந்தார். தனது பிள்ளைகளுடன் வசித்த வேமண்ணாவுக்கு கடந்த 8ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று வீடு திரும்புகையில் மரணம் நேரிட்டது.
எவ்வித மூடசடங்குகளும் இன்றி சுயமரியாதை வழியில் அவரது உடல் அடக்கம் நடந்தது. பெரியார் இயக்கத்தினரும், தமிழர் அமைப்புகளும் ஏராளமாக திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினார். கர்நாடக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செயலாளர் பழனி, இராவணன், இராசேந்திரன், சித்தார்த்தன், குமார், வேலு உள்ளிட்ட தோழர்கள் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
வேமண்ணா கன்னடத்தில் பெரியார் நூல்களை மொழி பெயர்த்ததுபோல் பெங்களூருவில்
பேராசிரியராக இருந்த மறைந்த ஏ.எம். தர்மலிங்கம், பெரியார் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஆவார். பெரியார் பகுத்தறிவு மரபில் ஆழமாக வேரூன்றி நின்ற பல சிந்தனையாளர்கள் கர்நாடகத்தில் உண்டு. பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த நரசிம்மையா, சீரிய பகுத்தறிவாளர். சாய்பாபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியவர். தற்போது கருநாடக முதல்வராக இருக்கும் சித்தராமய்யாவும், பகுத்தறிவு மரபில் வந்தவர். பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது உருண்டால் ‘புண்ணியம்’ கிடைக்கும் என்ற சடங்குக்கு தடை போட்டது உள்ளிட்ட பல்வேறு பகுத்தறிவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருபவர் சித்தராமய்யா.
பெரியார் முழக்கம் 16062016 இதழ்