இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு; இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும் முரண்பாடுகளும் மேலோங்கியிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்திற்காக பல்வேறு கட்சிகள் தனித் தனியாக களத்துக்கு வந்துள்ளன. கொள்கைப் பார்வையோடு எந்த ஒரு அணியையும் முழுமையாக அடையாளம் காண முடியாத அரசியல் சூழலில் திராவிடர் விடுதலைக் கழகம் இரு கண்ணோட்டங்களில் இந்தத் தேர்தலை அணுகிட முடிவு செய்கிறது.
ஜாதிய ஒடுக்குமுறைகள், ஜாதிய ஆணவப் படுகொலைகள் மற்றும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங் களுக்கு முன்னுரிமை தந்து, களத்தில் நிற்கும் திராவிடர் விடுதலைக் கழகம், இப்பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, களப் பணிகளில் தோழமையோடு இணைந்து நிற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள், சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்று விரும்புகிறது.
அந்த நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதே சரியாக இருக்கும் என்று முடிவு செய்கிறது.
இரண்டாவதாக – தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகாலமாக நடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மேலும் தொடரக் கூடாது என்பதாகும். தமிழகத்தில் அரசியலையும் மதத்தையும் நீண்டகாலமாக பிரித்தே வைத்திருந்த சீரிய மரபுகளை குழி தோண்டி புதைத்து, அரசியலை மதத்தோடும், மதச் சடங்குகளோடும் மூட நம்பிக்கைகளோடும் பிரிக்க முடியாமல், இணைத்ததோடு, மதவாத சக்திகளுக்கு அதிகார வர்க்கத்தின் ஆதரவையும் தடையின்றி கிடைத்திட அ.இ.அ.தி.மு.க. அனுமதித்து வருகிறது. அதே நேரத்தில், திராவிடர் இயக்கக் கொள்கைகளான ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு மற்றும் மனித உரிமைக்கான பரப்புரைகளுக்கு அனுமதி மறுத்து, கருத்துரிமையை பறித்து, அடக்குமுறை சட்டங்களை ஏவிவிட்டு,ஜனநாயக அரசியலமைப்புக்குள்ளேயே சர்வாதிகார கட்டமைப்பை திணித்து வருகிறது. சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்த ஆபத்து, அடுத்த 5 ஆண்டுகாலத்துக்கும் தொடரக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது.
எனவே, அ.இ.அ.தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய கட்சியாக களத்தில் நிற்கும் தி.மு.க. வேட்பாளர்களையும், அந்த அணியில் இணைந்துள்ள இந்திய தேசிய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிப்பதே சரியாக இருக்கும் என்று கருதுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் இயக்கக் கொள்கை அடிப்படை இலட்சியங்களிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றாலும், திராவிட இயக்கத்தின் ‘மிச்ச சொச்ச’ அடையாளங் களோடு இருக்கும் கட்சியாகவும் இருக்கிறது. திராவிடர் இயக்கத்தின் கருத்தியலை வீழ்த்திடும் உள்நோக்கத்தோடு திராவிட அரசியல் கட்சிகளின் தோல்விகளை திராவிடர் இயக்கத்தின் கருத்தியல் தோல்வியாகவே முன்னிறுத்தி, பார்ப்பன சக்திகளும், ஒரு சில ‘தமிழ் தேசியம்’ பேசும் அமைப்புகளும் திட்டமிட்டு காய் நகர்த்தும் சூழ்ச்சிகளை கவனத்தில் கொண்டும், இத்தகைய தி.மு.க.வுக்கான ஆதரவு முடிவை திராவிடர் விடுதலைக் கழகம் எடுத்துள்ளது.
எனவே, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் களையும், ஏனைய தொகுதிகளில் தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரிக்க முன் வருமாறு தமிழின உணர்வுள்ள வாக்காளர்களை திராவிடர் விடுதலைக் கழகம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
குற்றப் பின்னணி கொண்ட ‘தளி’ இராமச்சந்திரன்
2) மக்கள் விரோத – அராஜக அடக்குமுறைப் போக்கையும், கொடூரமான குற்றப் பின்னணியையும் கொண்ட இராமச்சந்திரன் என்பவரை ‘தளி’ தொகுதியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொதுவுடைமை கட்சியின் மாண்புக்கும், மரபுக்கும் எதிரான இந்த வேட்பாளர் தேர்வை மறுபரீசிலனை செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது. வேட்பாளராக தளி இராமச்சந்திரனே தொடருவாரேயானால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, தளி இராமச் சந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்று, தளி தொகுதி வாக்காளர்களை திராவிடர் விடுதலைக் கழகம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
- திராவிடர் விடுதலைக் கழகம் எடுத்துள்ள தேர்தல் நிலைப்பாட்டின் அடிப்படையில் கழகத் தோழர்கள் கட்சிகளுக்கு பரப்பரை செய்தல், வாக்கு சேகரித்தல் உள்ளிட்ட அரசியல் பணிகளில் செயல்படத் தேவையில்லை என்பதை கழகம் தெளிவுபடுத்த விரும்புகிறது.
பெரியார் முழக்கம் 21042016 இதழ்