கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சி யினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்ற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை’ கொண்டு வர பரிசீலிக்கலாம் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ உள்ளிட்ட ஆய்வாளர்கள் யோசனை அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை? இதன் சிறப்பம்சங்கள் என்ன?
- விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர் இருக்க மாட்டார்கள். மாறாக அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும். கட்சி களின் பிரதிநிதிகள் பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கேற்ப எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே கட்சி அளித்துள்ள பெயர் பட்டியலை வரிசைப்படுத்தி அறிவிக்கப்படு வார்கள். ஏனென்றால் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கின்றன. தனித்து ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லாவிட்டால் ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியாக ஆட்சி அமைக்கலாம். குதிரை பேரம் இருக்காது.
- இப்போது எம்.பி., எம்.எல்.ஏ. குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவராக இருப்பதால், வேறு கட்சியினரோ, அவரை ஆதரிக்காதவர்களோ அணுக முடியாத நிலை உள்ளது. விகிதாச்சார முறையில் எந்த எம்.பி., எம்.எல்.ஏ.வையும் அணுகி தங்கள் தொகுதிக்கு நிவாரணம் பெற முடியும்?
- தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அறிவிக்க விரும்பும் பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பித்து விடுவதால், அவர்களின் தகுதியையும் மக்கள் எடை போட்டு பார்த்துக் கொள்வார்கள்.
- வேட்பாளரின் பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி குறைய வாய்ப்பு ஏற்படும்.
- இப்போதைய முறையில் அரசுக்கு தேர்தல் செலவு அதிகம் ஏற்படுகிறது. பல்வேறு வேட் பாளர்கள் சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தேர்தலில் செலவிடுகிறார்கள். எனவே தேர்தலுக்குப் பிறகு இழந்ததை மீட்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். விகிதாசார முறை யில் தேர்தல் செலவு குறையும். எம்.எல்.ஏ.க்கள் நேர்மைக்கு வாய்ப்பு அதிகமுண்டு.
இந்த உதாரணம் தெளிவாக விளங்கும்.
2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 17 கோடியே, 16 இலட்சத்து, 37 ஆயிரத்து, 684. இது மொத்த வாக்குகளில் 31 சதவிகிதம். ஆனால், அக் கட்சிக்கு 282 எம்.பி.க்கள் உள்ளனர். இது மொத்த முள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 51.9 சதவிகிதம்.
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியே 69 இலட்சத்து, 35 ஆயிரத்து, 311 வாக்கு கிடைத்தன. இது 19.3 சதவிகிதம். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 44 மட்டுமே. இது எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 8.1 சதவிகிதம் தான்.
இந்த விகிதாச்சார முறை தேர்தல் ஆஸ்திரியா, ஜெர்மன், பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிஸ் உள்பட பல நாடுகளில் உள்ளன.
இந்தியாவில் உடனடியாக இப்போதுள்ள தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பு இல்லை என்றாலும், எதிர்காலங்களில் கொண்டு வருவது நல்லது என்ற கருத்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பெரியார் முழக்கம் 07042016 இதழ்