கடந்து வந்த புரட்சிப் பாதை!
கியூபா மக்களை யும் இயற்கையையும் நேசித்த உண்மையான கம்யூனிஸ்ட்டான ஃபிடல் காஸ்ட்ரோ, 90ஆவது வயதில் காலமான செய்தி, சமத்துவம்- சுதந்திரத்தை விரும்பும் உலக மக்களின் இதயத்தில் இடியாக இறங்கியது.
பொருளாதார சமத்துவத்தையும் ஏழைகள் இல்லா கியூபாவையும் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றிட அயராது உழைத்த காஸ்ட்ரோவின் மூச்சு நின்ற செய்தி, அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்ல… உலக நாடுகள் பலவற்றிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது உயர்கல்வியை முடித்திருந்த காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசத்தின்மேல் அளவற்ற காதல் ஏற்பட்டது. ஹவானா பல்கலைக்கழகம்தான் காஸ்ட்ரோவின் இதயத்தையும் மனதையும் திறந்து அவரை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் ஆக்கியது. அதே பல்கலைக் கழகத்தில் ஒரு சில மாணவர்கள் ஒரு வேளை உணவுக்குக் கஷ்டப்படும்போது, வேறு சிலரோ சுகபோகத்தில் திளைத்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பினார். அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக் குறித்து அப்போதைய அதிபரான பாடிஸ்டாவிடம் அவர் கூறிய புகார், குப்பைக்குச் சென்றது. அப்போதுதான் அமெரிக்காவின் கைக்கூலி அதிபர் பாடிஸ்டா என்பதை அறிந்து, ‘உடனடியாக அந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு உண்மையான மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்று திட்டம் தீட்டினார்.
கியூபாவின் முக்கிய இராணுவ முகாமான மொன்காடாத்தைத் தாக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்து, 1953 ஜூலை 26இல் இரவில் குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. ஆனால், அந்த முயற்சியின்போது எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார். கியூபா நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க அமெரிக்காவுக்கு வழிவகுத்துக் கொடுக்கும் பாடிஸ்டாவின் ஆட்சியை விரட்டி அடிக்கவே தாம் திட்டம் தீட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது அவர் ஆற்றிய உரையே “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற புகழ் பெற்ற உரை. இதைக்கேட்ட நீதிபதிகள் வாயடைத்துப் போனார்கள். சிறையில் இருந்து 1955 மே 15இல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.
சிறைக்குள்ளே கியூபாவின் சுதந்திரம் குறித்து திட்டமிட்ட காஸ்ட்ரோ, சிறையில் இருந்து வெளியே வந்ததும் மெக்சிகோ சென்று சே குவேராவை சந்தித்தார். பின்னர் இருவரும் இணைந்து கியூபா விடுதலைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகப் போராடினார்கள். சே குவேரா உதவியுடன் மக்களையும் விடுதலைப் போரில் பங்கேற்க வழி செய்தார் காஸ்ட்ரோ.
காஸ்ட்ரோ ஆட்சியைக் கைப்பற்றியபோது, கியூபா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. காஸ்ட்ரோ பதவியேற்றது முதல், தனக்கு நெருக்கமாக இருக்கும், கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்ட பொருளாதாரப் பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி, பொருளாதாரம் குறித்து முடிவு செய்தார். தன்னைக் கிண்டல் செய்த அமெரிக்காவைக் கண்டு அஞ்சாமல், கியூபாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களை அரசே கைப்பற்ற வழிவகுத்தார். பல்வேறு துறைகளிலும், கல்வியறிவிலும் கியூபா முன்னேற்றத்தைக் கண்டது.
ஃபிடலை ஒழித்தால் கியூபாவை அழித்துவிடலாம் என்று கணக்கு போட்ட அமெரிக்கா, காஸ்ட்ரோவை கொலை செய்ய மேற்கொண்ட நூற்றுக்கணக்கான முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. ஃபிடலின் காதலி மூலம் கொலை செய்யத் திட்டமிட்டதும் அம்பலமானது. அவரது காதலி அதனை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த ஆண்டு கியூபாவுக்கு மேற்கொண்ட பயணம் உலக வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2006ஆம் ஆண்டு ஜூலையில் செரிமான பிரச்சினைக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஃபிடல், 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 19இல் பதவி விலகுவதாக அறிவித்தார்.
உடல்நலக்குறைவால், நவம்பர் 26ஆம் தேதி மரணம் அடைந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி நிகழ்வு டிசம்பர் 4ஆம் தேதி கியூபாவில் நடைபெறவுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு, கியூபாவை தன்னிறைவு எட்ட வைத்த, ஒரு மாபெரும் வீரனின் பெருமையைப் பறைசாற்றும் தினமாக அமையும்.
– ‘ஜூவி’ கட்டுரை
பெரியார் முழக்கம் 01122016 இதழ்