சோதிடத்தை மறுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள்

கடவுள் நம்பிக்கையாளர்களே சோதிடத்தை நம்ப மறுக்கிறார்கள் – சோதிடம் ஒரு மோசடி என்று கூறியிருக்கிறார்கள்.

 

அப்துல் கலாம் : இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தை மக்களின்  பாராட்டுகளோடு முடித்துக் காட்டினார். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் அப்துல் கலாம். குடியரசுத் தலைவர் பதவிக்கு  அவரை வாஜ்பாய்பிரதமராக இருந்த பா.ஜ.க. ஆட்சி தேர்வு  செய்த போது கூட பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான பொறுப்பு மத்திய அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைச்சர் எந்த நாளில் பதவியேற்பு  விழாவை வைத்துக் கொள்ளலாம்; சோதிடப்படி உங்களுக்கு  ‘நாள் நட்சத்திரத்திற்கு’ ஏற்ற நல்ல நாள் எது என்று கேட்டார்.

அதற்கு அப்துல்கலாம் இவ்வாறு பதில் அளித்தார். “பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதே நேரம் அது சூரியனையும் சுற்றிக் கொண்டி ருக்கிறது. காலம், நேரம் இரண்டுக்குமே இந்த சுழற்சிதான் காரணம். என்னைப் பொறுத்தளவில் எல்லா நாள்களும் நல்ல நாள்களே. எல்லா நேரமும் நல்ல நேரமே. எந்த நாளும் நேரமும் உங்களுக்கு  வசதியோ அன்று பதவியேற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம்” என்று பதில் அளித்தார். அமெரிக்காவில்  அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்திய தமிழர் திருநாள் விழாவுக்காக டெல்லியிலிருந்து காணொளி காட்சி வழியாகப் பேசிய அப்துல்கலாம்,  இத்தகவல்களை அமெரிக்க தமிழர்களிடம் பகிர்ந்து கொண்ட போது கூட்டத்தினர்  பலத்த கரவொலி செய்து வரவேற்றனர்.

 

திருஞானசம்பந்தர் : வைணவர்களை சைவ மதத்துக்கு மாற்று வதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்  திருஞானசம்பந்தர். சைவ மத நம்பிக்கையாளர்களால் அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட திருஞானசம்பந்தரே சோதிடத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பாடல் பாடியிருக்கிறார்.

மதுரையை ஆண்ட மாறவர்மன் அரிகேசரி என்ற பாண்டிய மன்னன், சைவத்தி லிருந்து சமண மதத்துக்கு மாறி விடுகிறார். மன்னரின் மனைவி மங்கை யற்கரசி என்பவருக்கு இது பிடிக்கவில்லை. இவரும், பாண்டியர் அமைச்சரவையில் இருந்த குலச்சிறையார் என்ற அமைச்சரும் சேர்ந்து மன்னனை மீண்டும் சைவத்துக்கு மாற்ற ‘சித்து மோசடி’களில் கைதேர்ந்த

திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைக் கிறார்கள். திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படத் தயாரானபோது மற்றொரு சைவச் சாமியாரான அப்பர் எனும் திருநாவுக்கரசர், ‘சோதிடப்படி இன்று நல்ல நாள் இல்லை; போக வேண்டாம்’ என்று தடுக்கிறார். அதற்கு திருஞானசம்பந்தர் அதை எதிர்த்து,

ஒரு பாடல் பாடினார். “உள்ளத்தில் சிவன் குடியிருக்கும்போது ஒன்பது கோள்களும் என்னை ஏதும் செய்யாது” என்று பாடலில்  கூறிவிட்டு பாண்டியநாடு புறப்பட்டார். ‘வேயறு தோளி பங்கன்  விடமுண்ட கண்டன்’ என்று தொடங்குகிற பாடல் அது.

 

பாரதி : பார்ப்பனக் கவிஞன் பாரதி கூட

‘சோதிடம் தனை இகழ்

வான நூல் உயிர் கொள்’

– என்று தனது புதிய ஆத்திச் சூடியில் எழுதியிருக்கிறார்.

 

குன்றக்குடி பொன்னம்பலனார் : ‘சோதிடம்-இராசி பலன்களை நம்ப வேண்டாம்’ என்பதை வலியுறுத்தி குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பலம் அடிகள் ஒரு விழாவில் கூறிய கதை இது:

“ஒரு பிரபலமான சோதிடர் மீது மக்களுக்கு நம்பிக்கை.  அவர் கூறுவது எல்லாம் அ ப்படியே நடக்கிறது என்று மக்கள் நம்பினார்கள். அந்த சோதிடரிடம் ஒருவர் குடும்பத்துடன்  வருகிறார். தன்னுடைய மகனுக்கு 10 நாட்களாக கடுமையான காய்ச்சல் என்று கூறுகிறார். வேறு ஒருவர் சோதிடரிடம் வந்து, அவரும் தனது மகனுக்கு 10 நாள் காய்ச்சல் என்கிறார். சோதிடம் பார்க்கும் சாமியார் இரண்டு பேரிடமும் ‘மந்திரம்’ ஓதிய ‘கல்’ ஒன்றைக் கொடுத்து இதை வீட்டில் கொண்டு போய்வைத்து அடுத்த வாரம் வந்து பார்க்குமாறு கூறினார். ஒரு வாரம் கழித்து ஒருவர் வந்து, “சாமி, என் மகன் உங்கள் ‘புண்ணிய’த்தில் பிழைத்துக் கொண்டான். இப்போ நல்லா

இருக்கான் சாமி” என்றார். உடனே சாமியார், “உன் மகன் உயிர் கல்போல் கெட்டி; அதனால்தான் கல்லைக் கொடுத்தேன்” என்றார். மற்றொருவர் வந்து, “சாமி, என் மகன் இறந்து விட்டான்” என்றார். அதற்கு சாமியார், “அது எனக்குத் தெரியும். உன் தலையில் அவன் கல்லைத் தூக்கிப் போட்டு விடுவான் என்பதை உணர்த்தவே கல்லை உனக்குத் தந்தேன்” என்றார். இப்படித் தான் உறுதியான திட்டவட்டமான கருத்துகளை கூறாமல், ‘வாய்வித்தை’க் காட்டும் திறமையான மோசடிக்காரர்கள் சோதிடர்கள்” என்றார், பொன்னம்பல அடிகள்.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...