ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு
நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் 06.10.2016 அன்று தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. குமார பாளையம் நகர கழகத் தலைவர் மீ.த.தண்டபாணி வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் முன்னதாக பாவலர் இரா.நிறைமதி தலைமையில் “தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது “மதமே” என்ற தலைப்பில் பொன் கதிரவன், “பெண்ணடிமையே”என்ற தலைப்பில் நா.அன்பழகன், “சமூக அநீதியே” என்ற தலைப்பில் மதுபாரதி, “ஜாதியே” என்ற தலைப்பில் பகலவனும் கவிதை நடையில் சிறப்பாக எடுத்துரைத்தனர். கவியரங்கம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக துரை தாமோதரனின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது. சாமியார்களின் மோசடித்தனங்களை விளக்கி மக்களின் அறியாமையைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. பின்னர் பா.செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், செயலாளர் மு.சரவணன், அமைப்பாளர் மா.வைரவேல், பொருளாளர் அ.முத்துப்பாண்டி, திராவிடமணி, ப.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் கழகத் தலைவர் பேசும் போது, “ஆர்.எஸ்.எஸ் என்கிற நச்சு அமைப்பாக இருந்தாலும் சரி, அது வழிநடத்துகிற கட்சியாக இருந்தாலும் சரி, மற்றும் துணை அமைப்புகளாக இருந்தாலும் சரி, கல்விக் கொள்கையைப் பற்றி பேசினாலோ……. அரசியலைப் பற்றி பேசினாலோ…. அதற்குள் இருக்கும் அர்த்தத்தைப்பற்றி புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேன்டும் என்பதையே தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன்”என்று கூறினார். நிகழ்காலங்களில் நடைபெற்று வரும் இந்துத்துவ இயக்கங்களின் மதவாத பயங்கரவாதங்களை பற்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக உரையாற்றினார். இறுதியாக குமாரபாளையம் நகர செயலாளர் வெங்கட் நன்றியுரையாற்றினார். திருப்பூர், ஈரோடு, கோபி பகுதியைச் சார்ந்த கழகத் தோழர்களும், நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும்,ஆதரவாளர்களும் குடும்பத்தோடு பங்கேற்று சிறப்பித்தனர். 23.09.2016 அன்றே நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் ஒத்திவைக்கப்பட்டு, பின்பு அனுமதி பெற்று 06.10.2016 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
பெரியார் முழக்கம 03112016 இதழ்