நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!

சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு கூறப்பட்டள்ள காரணம் முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருக்கும் சூழலில் கொண்டாட்டங்கள் கூடாது என்பதாகும். இந்த ‘சூழலில்’ மட்டுமல்ல; எப்போதுமே அரசு அலுவலகங்களில் மத கொண்டாட்டங்கள் நடக்கக் கூடாது. காரணம், அனைத்து மதத்தினரும் பணியாற்றக் கூடிய அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் தனி உரிமைகள் இருக்கக் கூடாது. ‘பூஜை’கள் என்பது பக்திக்காக நடப்பவை அல்ல; அது ‘கொண்டாட்டம்’ என்ற உண்மையை அரசு ஊழியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதனால்தான் முதல்வர் உடல்நலமின்றி இருக்கும்போது கொண்டாட்டம் கூடாது என்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் முதல்வர் நலம் பெற வேண்டும் என்று பூஜைகள், யாகங்களை அக்கட்சியின் அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் நடத்துகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் யாகம் நடத்தும்போது அந்த புகையினால் மயக்கமடைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. தரையில் சோறு சாப்பிடுகிறார்கள். இது உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது அல்லவா? இதனால் ஏதும் வயிற்றுக்குக் கேடு வந்தால் மீண்டும் மருத்துவத்தை நோக்கித் தானே செல்ல வேண்டும்? சிறுவர்கள், குழந்தைகளுக்கு வாயில் அலகு குத்தி, முதல்வர் நலம் பெற வழிபாடுகள் நடப்பதாகவும், படங்களுடன் செய்திகள் வருகின்றன. சிறுவர்களின் மென்மையான முகத்தில் இப்படி இரும்புக் கம்பிகளால் குத்தப்படும்போது, அதனால் புண், தொற்று ஏற்பட்டால் மீண்டும் மருத்துவரிடம் தானே போக வேண்டும்? இது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது அல்லவா? குழந்தைகளே விரும்பி அலகு குத்துகிறார்கள் என்பது ஏற்க முடியாத வாதம். குழந்தைகளே விரும்பி மாடியிலிருந்து குதிக்கிறார்கள்; குழந்தைகளே விரும்பி ஓடும் பேருந்தில் ஏறுகிறார்கள் என்றால் அதை அனுமதிக்க முடியுமா? தமிழக முதல்வர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று அரசியல் மாறுபாடுகளைக் கடந்து அனைவருமே ஒரே சிந்தனையை வெளிப்படுத்தும் அரசியல் நாகரிகம் தமிழகத்தில் திரும்புகிறது. இந்த நிலையில் சடங்குகள், யாகங்களை நடத்துவதும், மண்சோறு சாப்பிடுவதும், அலகு குத்துவதும் அறிவியல் மருத்துவத்தையே எள்ளி நகையாடுவதுபோல்தான் தெரிகிறது. மருத்துவ உலகில் நடந்து வரும் மகத்தான புரட்சிகள்தான் இன்று மனித சமூகத்தையே பாதுகாத்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த நவீன மருத்துவ சிகிச்சைகள் உலகப் புகழ் பெற்ற மருத்துவர்களால் முதல்வருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் நலம் பெற்று திரும்பி வர உதவப் போவது அறிவியல் கண்டுபிடிப்புகளான மருத்துவ சிகிச்சை முறைகளே தவிர யாகங்களும் சடங்குகளும் பூஜைகளும் அல்ல.

முதலமைச்சர் நலம் பெறுவதற்கு கடந்த காலங்களில் எத்தனையோ பூஜைகள், யாகங்களை நடத்திய பிறகும் அதற்கு ஏதாவது பலன் இருந்திருக்குமானால் முதல்வர் மருத்துவமனைக்கு வரும் நிலை வந்திருக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தலைமைச் செயலக ஊழியர்கள் பார்வையில் கூற வேண்டுமானால் இதுவும் ஒரு கொண்டாட்டம் தானே? முதல்வர் உடல்நலம் குன்றிய நிலையில் ஏன் இந்த கொண்டாட்டங்கள்? சிந்திக்க வேண்டும்!

பெரியார் முழக்கம் 13102016 இதழ்

You may also like...