ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பி யுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது.

(சென்ற இதழ் தொடர்ச்சி)

அடிப்படை வசதி பறிப்பு

தமிழர்கள் வீடுகட்ட இலங்கை பணம் ஐந்தரை இலட்சம் அரசு கொடுக்கின்றது. ஆனால் வீட்டுக் கட்டுமான பொருட்களின் விலை அதைவிட இரண்டுமடங்கு அதிகமாக இருக்கின்னறன. காலோபிளாக்ஸ் கல்லை பயன்படுத்தி தட்டிகளை வைத்து வீடு கட்டுகின்றனர். மின் விளக்குகள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இல்லை. (எ.டு.) ஒட்டுச் சுட்டான் பிரதேசத்தில் உள்ள முத்துஐயன், கட்டுக்குளம், கனகரத்தினபுரம், தட்டயமலை முத்துவிநாயகர்புரம் ஆகிய ஊர்களில் உள்ள 350 குடும்பங்கள் மின்சாரா வசதியின்றி குப்பி (மண்ணெய்) விளக்குகளை பயன்படுத்து கின்றனர். இராணுவ முகாம்களையும் நகரங் களையும் இணைக்கும் முக்கிய சாலைகளை மட்டும் சீனா போட்டுக் கொடுத்தது. ஆனால் ஊர்களுக்கு செல்லும் சாலைகள் மண் சாலைகளாக இருக்கின்றன. அதுவும் குண்டு குழியுமாக இருக்கிறது. மழைகாலத்தில் கடந்து செல்வது மிகவும் கடினமானது. அதுபோல வாழ்வு ஆதாரங்களான நிலம், நீர், காடு போன்றவற்றை ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் இராணுவத்தின் கையில் உள்ளது. (எ.டு.) இரணைமடு ஏரி நீரையும், காடுகளையும் நிலத்தையும் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இதனால் நான்கு குளங் களையும் 8.000 ஏக்கர் நிலங்களையும் இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப் பதால் தமிழர்கள் உழவுத்தொழில் செய்ய முடியாது. பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் காடுகளில் உள்ள பழங்காலத்து மரங்களை வெட்டி தென்னிலங்கைக்கு கடத்துகின்றன. முல்லைத் தீவில் உள்ள காட்டுவளங்களையும் மரங் களையும் தென்னிலங்கைக்கு கடத்துகின்றனர். தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவின் கடற்கரையின் பெரும்பகுதிகளை ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் அபகரிக்கப்படுகிறது. ஒருபுறம் சிங்களவர்களுக்கு அரசு உதவி செய்தாலும் மறுபுறம் செய்யவில்லை. (எ.டு.) வவுனியாவில் உள்ள போகஸ்வெவ என்ற ஊரில் 2771 சிங்கள குடும்பங்களை அரசு குடியமர்த்திருக்கிறது. பயிர்செய்ய ஓர் ஏக்கரும் குடியிருக்க வீடும், விவசாயம் செய்ய இரண்டு ஏக்கரும் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்தனர். சிலருக்கு ஓர் ஏக்கரும் சிலருக்கு வீடுகட்ட தகரமும், சிலருக்கு கல்லும் கொடுத்து விட்டு சென்று விட்டனர். சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை எதுவும் இல்லை. இந்த ஊர் நெடுங்கேணி, மதவாச்சி, வவுனியா ஆகி மூன்று பிரதேசங்களைச் சார்ந்துள்ளது. அதனால் எந்த பிரதேசத்தை நாடுவதென்று தெரியாமல் மக்கள் வாழ்கின்றனர். எந்த அரசும் உதவி செய்ய முன்வருவதில்லை. இதனால் இவர்கள் தமிழர்களுடைய வீடுகளில் திருடுகின்றனர்.

தமிழர் பகுதிகளில் போதைப் பொருட்கள், மஞ்சள் பத்திரிக்கைகள், குறுந்தகடுகள், மதுபானங்கள், உயிர்பறிக்கும் உணவுகள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், அரசியல் சிந்தனையாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் நச்சு ஊசிகளை போட்டு மெதுவாக கொலை செய்யும் செயல் நடைபெறுகிறது.(எ.டு.) அநுராதபுரம் சிறை யில் போடப்பட்ட நச்சு ஊசியால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசாவை மருத்துவ சோதனைக்காக யாழ்ப்பாண மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது அவருடைய உறவினருடன் அவரை சந்திக்க நேரிட்டது. புனர்வாழ்வு என்ற போர்வையில் நச்சு ஊசிகளை சரணடைந்த போராளி களுக்கும் அரசியல் சிந்தனையாளர்களுக்கும் கொடுத்து ஈழத்தமிழ் விடுதலை உணர்வை அரசு திட்டமிட்டு அழிக்கிறது.விடுதலைப் புலிகளின் மகளிர் அணித்தலைவி தமிழினி (சிவகாமி சுப்பிரமணியம்) உள்பட 109 நபர்கள் இனம்காண முடியாத நோய்களால் இறந்தனர். என்.என். சகாதேவன் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது மிகப்பெரிய பாரத்தை தூக்கி கொண்டு ஓடமுடிந்தது. ஆனால் இப்போது இந்த நச்சு ஊசி போட்டபிறகு 10 கிலோ எடையைகூட தூக்க முடியவில்லை என்று கூறினார். சோதனை என்ற போர்வையில் இளம் பருவத்தினரை அழைத்து கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிடுகின்றனர். தமிழர்கள் பலர் வலிந்து காணடிக்கப்படுகின்றனர். இதனால் காணாமல்போனவர்களை கண்டு பிடிக்கும் அலுவலகத்தை உருவாக்க சட்ட மியற்றினர். ஆனால் அந்த அலுவலகத்திற்கு நீதிமன்ற, விசாரணை, தண்டிக்கும் அதிகாரங்கள் இல்லை. இருந்தபோதிலும், வலிந்து காணடித்ததற்கு காரணம் என்ன வென்று ஆராய்ந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்குவதற்காக போராட லாம். தமிழர்களை சிதறடிப்பதும் சின்னா பின்னமாக்குவதும் இனக்குழு அழிப்பாகும்.

மொழியழிப்பு

அரசு அலுவலர்கள் சிங்களமும் தமிழும் கட்டாயம் கற்கவேண்டுமென்ற சட்ட முள்ளது. ஆனால் அவர்கள் நடைமுறையில் சிங்களம் மட்டும்தான் பேசுகின்றனர். தமிழ்ப் பகுதியில் தொடர்வண்டி நிலையம், மருத்துவமனை, அஞ்சல்துறை, காவல்துறை போன்ற முக்கிய அரசுத்துறைகளில் சிங்களவர்களை மட்டும் பணி நியமனம் செய்கின்றனர். சிங்களம் தெரியவில்லை யென்றால் இந்த சேவைத்துறைகளிலிருந்து உதவியையும் பெறுவது கடினமாக இருக்கிறது. இதனால் தமிழர்கள் கட்டாயமாக சிங்களம் கற்கவேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மறைமுகமாக தமிழ்மொழி அழிக்கப்படும் சுழல் உள்ளது.

ஒத்தசிந்தனையின்மை

வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்தால்தான் இன அழிப்பை தடுத்து வளமைக்கு வழிவகுக்குமென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றோர் கூறுகின்றனர்(08. 08.2016). தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றது. ஆனால் முஸ்லீம் கட்சிகள் தீர்வு விடயத்தில் மாத்திரம் அமைதியாக இருக்கின்றன. தீர்வுத் திட்டத்தை முன்வைக்காமல் மௌனமாக இருப்பது ஆபத்தாகும். அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் “அம்பாறை மாவட்டத்தில் கரையோர மாவட்டம் உருவாவதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். கரையோர மாவட்டத்தை அடித்தளமாக வைத்து தென்கிழக்கு அலகு வழங்கப்படுவதையும் மக்களைத் திரட்டி நாம் எதிர்ப்போம்” என்று அறிவித்தார். அதற்கு முஸ்லீம் காங்கிரஸின் மூத்த பிரதித்தலைவர் ஏ. எல். அப்துல் மஜீத் “கோடீஸ்வரன் போன்றோர் இருக்கும் வரையில் நாம் வடகிழக்கு இணைப்பை ஏற்கமாட்டோம்: என்று தெரிவித்தார்(07.08.2016). இப்படிபட்ட முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து கொண்டு தமிழ்- முஸ்லீம் நல்லுறவை சிதைக் கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்கக் கூடாது என்று கிழக்கு முஸ்லீம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தீhமானம் நிறைவேற்றியது (07.08.2016). அதுபோல வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஒருசிலர் மாங்குளத்திலும், ஒருசிலர் மதகுவைத்த குளத்திலும் ஒருசிலர் ஓமந்தையிலும் நிறுவ வேண்டுமென்று போராடுகின்றனர். பல கருத்துக்கள், குழுக்கள் அமைப்புகள் மக்களாட்சியின் வெளிப்பாடுகளாக இருக் கின்றன. ஆனால் பலவாறு சிந்தித்தாலும் கடைசியில் ஒரு கருத்துடன், கோரிக்கையுடன் முன்னோக்கி நகர்வது வெற்றியாகும். தமிழர் களிடையே குழப்பங்களும் முரண்களும் நீடித்துகொண்டே இருக்கின்றன. தமிழர் களிடையே வெளிநாட்டு மோகம் அதிகரித் துள்ளது. ஈழநாட்டிலும் தமிழ்நாட்டிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களுடைய நாட்டை கட்டி எழுப்ப விரும்பாமல் வெளி நாட்டில் வாழ விரும்புகின்றனர். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆள் குறைப்பு நடைபெறும். அதனால் தமிழர் களின் கோரிக்கை வலுவிழந்து விடும். அதனால் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட் டில் வாழும் 1,01,986 ஈழஏதிலிகள் தாய்நாட் டிற்கு திரும்பிச் செல்லவேண்டும். பிரிட்டன் தமிழ் அமைப்பு, உலக தமிழ் அமைப்பு, ஆசுத்திராலிய தமிழ் அமைப்பு போன்ற வெளிநாடுகளில் வாழும் அமைப்புகள் ஒத்த சிந்தனையுடன் ஒற்றைக் கோரிக்கையுடன் செயல்படவேண்டும்.

இறுதியாக விடுதலைப் புலிகளை தோற்கடித்ததுடன் தமிழர்களின் பிரச்சினை தீழ;ந்து விட்டதென அரசு கருதுகிறது. ஆனால் தமிழர்களின் கோரிக்கைகளான சம உரிமை, தமிழர்களின் இறையாண்மை, தனிநாடு (ஈழநாடு) போன்றவை கிடைக்க வில்லை. இவைகளை அரசு நிறைவேற்ற முன் வரவில்லை. இலங்கை சிங்களநாடு என்ற ஒற்றை இலக்கோடு அனைத்து செயல் பாடுகள் நடைபெறுகின்றன. இலங்கையை சிங்களமயமாக்குவதுதான் சிங்கள பேரின வாத அரசின் நிலைப்பாடாகும். இலங்கை அதிபர் சிறிசேனா பௌத்தத்தின் மத்திய தளமாக இலங்கையை மாற்றவேண்டும் என்று 07.08.2016 அன்று பௌத்தயா தொலைக் காட்சியில் கூறினார்.இதனால் வகுப்புவாதம் சிங்கள, இசுலாமிய, கிறித்தவ, இந்து சமயங்களிடையே நிலவி வருகிறது. இதனால் தமிழர்களின் அடையாளங்களை அடியோடு அழிப்பதில் திட்டமிட்டு செயல்படுகிறது. அதற்காக இலங்கை அரசு ஒட்டி-ஒதுக்கல்  என்ற கொள்கையை கடைபிடிக்கிறது. வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி தமிழர்களின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க திட்டம் தீட்டப்படுகிறது. தமிழர் களின் கூக்குரல் கேட்கப்படவில்லை. எனவே தமிழரின் உரிமைக்குரல் ஈழமண்ணில் உயிர் வாழத் துடிக்கிறது. உயிர்வாழ உரிமைக் குரல் எழுப்புவோம்.                                              (நிறைவு)

பெரியார் முழக்கம 03112016 இதழ்

You may also like...