“திராவிடர் விடுதலைக் கழகம்” இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு
12-08-2012 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்களின் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாக சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமை செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். நேரில் வர இயலாத குமரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா, நெல்லை மாவட்ட அமைப்பாளர் காசிராசன், கடலூர் மாவட்டத் தலைவர் வடலூர் வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வழியாக தங்கள் ஆதரவை கழகத்தலைவரிடம் கூறியிருந்தனர்.
மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு மாரப்பனார் தனது மகன் உடன் கலந்துகொண்டார், மேலும் ஈரோடு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவுக்கன்பன் என்கின்ற குப்புசாமி, பெரியார் பெருந்தொண்டர் ஆசிட் தியாகராசன், சென்னை வழக்கறிஞர் வீ.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உட்பட பல முன்னணி தோழர்கள் என திரளாக திரண்டிருந்தனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து மூன்று தனிப் பேருந்துகள், மற்றும் மகிழுந்துகள், தனித்தனியாக தொடர்வண்டி, பேருந்து ஆகியவைகள் மூலமாக சுமார் 350 தோழர்கள் கலந்துகொண்டார்கள். அதேபோல சென்னையில் இருந்து இரண்டு தனி பேருந்துகள், புதுவையில் இருந்து இரண்டு தனிப் பேருந்துகள் மூலமாகவும் தோழர்கள் வந்திருந்தனர். பல்லடம், திருப்பூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து தனி சிற்றுந்துகள் மூலமாக வந்திருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்தவர்களுமாக ஏறத்தாழ 1500 பேர் என்ற அளவில் திரண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், முதலில் கோபி இராம.இளங்கோவன் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பைக் கூற அனைத்து தோழர்களும் அதை எழுச்சியோடு வழிமொழிந்து முழக்கமிட்டனர். ஈரோடு இரத்தினசாமி வரவேற்புரை ஆற்றினார். புதுவை லோகு.அய்யப்பன் துவக்க உரை ஆற்றினார். அடுத்ததாக, நாம் ஏன் பெரியார் திராவிடர் கழகத்தை விட்டுவிட்டு வேறு பெயரில் இயங்குகிறோம் என்று விளக்கி பேசிய விடுதலை க.இராசேந்திரன் நமது கழகத்தின் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார், மேலும் முதலில் 200 பேர் கூடுவோம் என்று எதிர்பார்த்து பின்னர் நாட்கள் நெருங்க நெருங்க 500 பேர் வருவார்கள் என்று உறுதி செய்து தான் இந்த மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று இவ்வளவு பேர் வந்திருப்பது நாம் சென்று கொண்டிருக்கிற பாதை மிகச் சரியானது என்பதை உறுதிச் செய்கிறது என்றும் பேசினார்.
இங்கு பொதுச்செயலாளர் விளக்கி பேசிய செய்திகளின் உண்மைகளை நீங்கள் ஆய்ந்து பார்க்கவேண்டும் என்றும் உங்களிடம் இதுவரை சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதே தவிர இது பரப்புவதற்கு அல்ல. தேவைப் படும் போது நமது தோழர்களோடு விவாதம் செய்து கொள்ளலாமே தவிர இது பத்திரிக்கைக்கான செய்தியும் அல்ல எனவே ஏடுகளில் யாரும் வெளியிடக் கூடாது என்பதையும் முதலில் வேண்டுகோளாக வைத்து தனது உரையை தொடங்கிய கழகத்தலைவர் கொளத்தூர் மணி, பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும் புதிய பெயரில் இயங்க வேண்டிய காரணத்தையும், அவசியத்தையும் விளக்கிப் பேசினார். மேலும் தனது உரையில்…..
புதிய பெயர், புதிய கொடி, புதிய செய்தி ஏடு ஆகியவைகளோடு இயங்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்தோம். பெரியார் முழக்கம் ஏடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை பயன்படுத்தி வந்த கொடியை (தூத்துக்குடி பெரியார் பாசறையின் கொடி என்பதால்) நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார். எனவே நாம் அமைப்பிற்கு புதிய பெயர் தான் வைக்க வேண்டும்.
பெரியாரின் கொள்கைகள் சுயமரியாதையும், சமதர்மமும் ஆகும். பன்னாட்டு சுரண்டல்கள் அதிகரித்து கொண்டிருப்பதால் நாம் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம், எனவே “சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்பதுதான் பொருத்தமான பெயராக இருக்கும் எனக் கருதினோம். ஆனால் ‘திராவிடர்’ என்ற சொல் தான் தமிழர் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது என்று பலரும் பேசி வருகிற இந்த சூழலில்,நாம் திராவிடர் என்ற சொல்லை கைவிடுவது, போதிய புரிதலின்றி இதுவரை திராவிடர் என்று வைத்திருந்ததை இப்போதாவது தவறை உணர்ந்து சரிசெய்து கொண்டதைப் பாராட்டுகிறோம் என்று சிலர் எழுதுவதற்குப் பயன்படலாமே தவிர பெரும்பாலான உழைக்கும் மக்களை கேவலப்படுத்தி பிரித்துவைத்திருக்கிற ஆரியத்துக்கெதிரான பண்பாட்டுப் புரட்சிக்குப் பயன்படாது என்பதால் நம்மை அடிமைகளாய் வைத்திருக்கும் ஆரியத்துக்கு எதிரான குறிச்சொல்லான ‘திராவிடர்’ என்ற சொல் அமைப்பின் பெயரில் அவசியம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே “திராவிடர் சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்று வைக்கலாமா ”திரவிடர் சுயமரியாதைக் கழகம்” என்று வைக்கலாமா என்று ஆலோசித்தோம். இதில் சுயமரியாதை என்ற சொல் வடமொழி என்பதால் தன்மதிப்பு என்று தமிழ் படுத்தி, “திராவிடர் தன்மதிப்புக் கழகம்” என்று வைக்கலாமா என்றும் கருதினோம், ஆனால் சுயமரியாதை என்ற சொல்லில் இருக்கும் வீரியம் தன்மதிப்பு என்பதில் இல்லை. எனவே இதுவும் கைவிடப்பட்டது.
சமூக விடுதலை இல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம்; அரசியலில் விடுதலை இல்லாமல் இந்திய தேசியத்திற்கு அடிமைப்பட்டிருக்கிறோம்; பொருளாதாரத்தில் பன்னாட்டிற்கு அடிமையாக இருக்கிறோம். எனவே நமக்கு இப்போது தேவையாக இருப்பது பார்ப்பன – இந்தியதேசிய – பன்னாட்டு சுரண்டலில் இருந்து விடுதலையே. எனவே “திராவிடர் விடுதலைக் கழகம்” என்று முடிவு செய்தோம். இது புதிய பெயரல்ல, புதிய முன்னெடுப்பு என்றும் அறிவித்தார்.
பிற்பகல் நிகழ்ச்சியின் துவக்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க) வாழ்த்துரை வழங்கினார். ம.தி.மு.க நகர செயலாளார் பூங்கொடி சாமிநாதன் அவர்கள் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். ஆசிட் தியாகராசன் அமைப்பை பாராட்டிப் பேசினார், மாவட்டத்திற்கு ஒருவராக கீழ்க்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்: திருப்பூர் துரைசாமி, கோவை பன்னீர்செல்வம், சேலம் (மேற்கு) முல்லைவேந்தன், நாமக்கல் சாமிநாதன், காஞ்சி டேவிட் பெரியார்,மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், திண்டுக்கல் நல்லதம்பி, தூத்துக்குடி அம்புரோசு, சென்னை உமாபதி, கிருஷ்ணகிரி குமார், திருச்சி புதியவன், கன்னியாகுமரி சூசை , வடலூர் கலியமூர்த்தி, கரூர் காமராசு, சேலம் (கிழக்கு) டேவிட், பெரம்பலூர் தாமோதரன், விழுப்புரம் வெற்றிவேல், திருநெல்வேலி அன்பரசு, பொள்ளாச்சி விஜயராகவன், தஞ்சை பாரி, நாகை மகேஷ், வேலூர் திலீபன், சேலம் (மாநகரம்) பாலு,
இறுதியாக மாநில வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், ஆகியோர் உரையாற்றினார்கள். கழகத் தலைவர் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில பொறுப்பாளர் சிவக்குமார் நன்றியுரை ஆற்றினார்.
சில மாவட்டகழகங்கள் கழக வளர்ச்சி நிதி அளிப்பதாக உறுதி அளித்து (அடைப்புக் குறிக்குள் உள்ள தொகை) முதல் தவணையாக கீழ்க்கண்டவாறு நிதி அளித்தார்கள்.
சேலம் மேற்கு – 3,00,000 (5,00,000)
ஈரோடு – 1,00,000 (5,00,000)
சென்னை – 1,00,000 (3,00,000)
புதுவை – 50,000 (2,00,000)
சேலம் கிழக்கு – 70,000 (1,00,000)
திருப்பூர் – — (1,00,000)
கோவை ———- (25,000)
இரா.வீரமணி (சேலம்) – 25,000
ஆசைத்தம்பி (கள்ளக்குறிச்சி) – 10,000
ஆசிரியர் செங்கோட்டையன் – 2,000 (10,000)
மதுரை வாசுகி – 1,000 (10,000)
வடலூர் கலியமூர்த்தி – 1,000 (10,000)
தமிழர் முன்னணி (கரூர்) – 1,000
சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக, காவலாண்டியூர் விஜயகுமார், சேலம் கேம்ப் அருள்செல்வம், மேட்டூர்(ஆர்.எஸ்) அரவிந்த், டைகர் பாலன் ஆகியோர் இணைந்து கழகத் தலைவருக்கு அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான மடி கணினியை வழங்கினார்கள்.
சசிக்குமார், மோகன்ராஜ், சண்முகசுந்தரம் ஆகியோரது நிறுவனத்தின் சார்பாகவும், விசு, அர்ச்சுணன், ஆகியோரது நிறுவனத்தின் சார்பாகவும் உணவிற்கு தேவையான பொருளுதவிகளைச் செய்தனர்.
ஜெயராமன், நிவாசு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஒலி பெருக்கி அமைத்துக்கொடுத்தனர்.
முதல் நாளே வந்திருந்த தோழர்களுக்கு இரவு உணவு, அடுத்தநாள் காலை உணவு, முற்பகலில் தேநீர் ஆகியவைகளை தயாரிக்கும் பொறுப்புகளை தோழர்கள் பிரேமா, சுகுணா, பேபி மோகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார்கள். மதிய உணவு சென்னை தோழர் மோகன் மேற்பார்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளை, ஈரோடு இரத்தினசாமி தலைமையில், மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச்செயலாளர் இராம.இளங்கோவன் ஆகியோரோடு இணந்து தோழர்கள் சிவக்குமார், சிவா, சுப்ரமணி, குமார், வெங்கட், மோகன், திருமுருகன், பூவதிராஜ், இரமேஷ், அழகன், சண்முகசுந்தரம், இரமேஷ்குமார், சண்முகப்பிரியன், செல்வராசு, செல்லப்பன், இளம்பிள்ளை சந்திரசேகர் ஆகியோர் செய்தனர்.
—
செய்தி: இளம்பிள்ளை கோகுல்
செய்தி பெரியார் தளத்திலிருந்து