இருவர் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்திய மகேஸ்வேதா தேவி : 90ஆம் வயதில் முடிவெய்தினார்

பழங்குடி மக்களுக்காக போராடியவரும், அவர்கள் வாழ்க்கை பார்ப்பன உயர் ஜாதியினர் திணித்த மூடநம்பிக்கைகளால் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை இலக்கியங்களாக எழுதி குவித்தவருமான மகேஸ் வேதாதேவி 90 ஆம் வயதில் கொல்கத்தாவில் முடிவெய்தினார். 120 நூல்களை அவர் எழுதியுள்ளார். ஞானபீடம் ‘பத்மவிபூஷன்’ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு.

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம், அவர் ‘ஞான பீட விருது’ பெறும் நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் விடியற்காலை ஆந்திர மாநிலம் இராஜமுந்திரி சிறையில் இரு இளைஞர்கள் தூக்கிலிட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவர்களின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ‘ஞான பீட விருது’ பெறும் மேடையில் விருதைப் பெறுவதற்கு முன் குடியரசுத் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனுவை திடீரென வழங்கினார், மகேஸ்வேதா தேவி. அடுத்த நாள் விடியற்காலைதூக்கிலிடப்படவிருக்கும் இரு இளைஞர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்றுமனுவில் கோரி இருந்தார். வேறு வழியின்றி கருணை மனுவை குடியரசுத் தலைவர் வாங்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு விட்டதால் தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமையாளர்கள் அன்று இரவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர். இரவு உறங்கச் சென்று விட்ட தலைமை நீதிபதி எழுந்து வந்து கோரிக்கையை ஏற்று இராஜமுந்திரி சிறை நிர்வாகத்துக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். தூக்கிலிடுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சிறை நிர்வாகம் தூக்கிலிடுவதை நிறுத்தியது. மகேஸ்வேதாதேவி, மிகச் சிறந்த இலக்கியவாதி மட்டுமல்ல, பழங்குடி மக்களுக்கான போராளியும், மனித உரிமைக்கு குரல் கொடுப்பவருமாக இருந்தார்.

 

ரூ.15 கடன் பாக்கிக்கு தலித் கணவன்-மனைவியை வெட்டிக் கொன்ற பார்ப்பனர்

ரூ.15 கடன் பாக்கிக்காக உ.பி. மணிப்பூரில் தலித் கணவர் மனைவியைச் சேர்த்து கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார், ஒரு பார்ப்பனர். அந்தப் பார்ப்பனர் பெயர் அசோக்மித்ரா. பல சரக்கு கடை வைத்துள்ளார். இவர் நடத்திய பல சரக்குக் கடையில் கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளிகளான இவர்கள் சாமான்கள் வாங்குவது வழக்கம். ரூ.15 கடன் பாக்கி வைத்திருந்தனர். கொலை செய்யப்பட்ட பாரத் சிங், மம்தா இருவரும் கணவன் மனைவியர். பரத்சிங் சுவாசக் கோளாறு உள்ளவர். உழைத்து தங்களது 5 குழந்தைகளையும் காப்பாற்றும் நிலையில் இருந்தவர் தாய் மம்தா மட்டும்தான்.தாய் தந்தையைப் பறிக்கொடுத்த 18 வயது மகள் மிலான் போலீசாரிடம் கூறுகையில்: “தங்கள் பெற்றோரிடம் 5 ரூபாய் மட்டுமே இருந்தது. அதற்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட்டுவிட்டு, கடும் பசியுடன் வேலைக்குச் சென்றபோது அசோக் மித்ரா வழி மறித்து ரூ.15 கடன் பாக்கியை கேட்டிருக்கிறார். கையில் காசில்லை; வேலைக் குப் போய் வந்து அடைத்து விடுகிறேன்என்று கூறியதை ஏற்காமல், கையிலிருந்த கோடரியை பிடுங்கி தந்தையை வெட்டி சாய்த்தான், அந்த பார்ப்பனன். தாய், ‘அய்யோ, வேண்டாம்’ என்று தடுத்தபோது அவரையும் வெட்டி சாய்த்தான். தனது மூன்று சகோதரர்களை எப்படி காப்பாற்றுவது என்பது எனக்கு தெரியவில்லை” என்று கதறியழுகிறார் மிலான். உ.பி. மாநில அரசு, ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 04082016 இதழ்

 

You may also like...