பெண்கள் மீதான தீண்டாமை!

பெண்களை மாதந்தோறும் தீண்டாமைக்கு உள்ளாக்கும் ஒரு நிகழ்வு இன்னும் தொடர்கிறது. பெண்களைக் கீழானவர்கள் என்ற உளவியலைக் கட்டமைக்கும் இந்தத் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) வெளி வந்த கட்டுரையி லிருந்து சில பகுதிகள்:

நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிகிறது. இப்படிப் புறச் சூழலால் உண்டான காயங்களால் இரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து இரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித் தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள்.

‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘NO blood should  hold us  back’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (Don’t let your period stop you) என்கிற வாசகங்களுடன் சானிட்டரி பேடுக்கான ஒரு பிரிட்டன் விளம்பரப் படம் கம்பீரமாக பறைசாற்றுகிறது. பெண்ணுரிமைப் பார்வையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும் மாதவிடாய் தடையாய் இருந்துவிட அனுமதிக்கக் கூடாது.

தீட்டு என்ற பெயரில் மாதந்தோறும் ஒருவிதத் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் பெண்கள். கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்படுவது தொடங்கி அவரவர் வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கும் சமூகம்தான் நம்முடையது. வீட்டுக் குள்ளேயே ஒரு ஓரமாகத் தனிப் பாய், தனிப் பாத்திரங்கள் கொடுத்து அருவருப்பானவர் களாக நடத்தப்படுவதும், வீட்டுக்கு வெளியே இருட்டு அறையில் சாக்குப் பையில் உட்கார வைத்து மாதவிடாய் முடியும்வரை சாப்பாடு, தண்ணீர்கூட யாராவது கொண்டுவந்து கொடுத்துத் தனிமைப்படுத்துவதும் இன்றும் நடக்கத்தான் செய்கிறது.

மாதவிடாய் இரத்தம் தூய்மையானது என நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி இரத்தமும், எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோயைத் தீர்க்கும் அருமருந்து. அவற்றைப் போலவே மாதவிடாய் இரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும் உயிர்காக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் சொல் கிறார்கள். ஆனால் என்ன சொன்னாலும் மாத விடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டாவெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத்துக்குள்தான் இன்றும் சிக்கிக் கிடக்கிறார்கள்.

இதிலிருந்து விடுபட, ‘எந்த இரத்தமும் நம் வேகத்துக்குத் தடைபோட அனுமதிக்கக் கூடாது’ என நமக்கு நாமே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறது அக்கட்டுரை.

பெரியார் முழக்கம் 28072016 இதழ்

You may also like...