‘கங்கா தீர்த்தம்’ உடலுக்குக் கேடு!
கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து அஞ்சலகங்களில் விற்பதற்கு மோடி ஆட்சி ஏற்பாடு செய்துள்ளது. பிணங்களும் இராசயனக் கழிவுகளும் கலந்து நிற்கும் கங்கை – உலகின் மிக மோசமான நதிகளில் ஒன்று. கங்கையை தூய்மைப்படுத்துவதற்கு மோடி ஆட்சியே ரூ. 25,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த அசுத்தத் தண்ணீரை ‘புண்ணிய நீர்’ என்று என்று பக்தர்கள் குடிப்பதற்கு விற்பனை செய்வது மக்களின் உடல்நலனுக்கு தெரிந்தே இழைக்கப்படும் கேடு. பக்தி என்ற பெயரால் அறிவியலை சமூகம் இழந்து நிற்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
சென்னை பல்கலைக்கழகத்திலேயே இந்திரா காந்தி என்ற ஆய்வாளர் மயிலாப்பூர் கோயில் குறித்து ஆய்வு நடத்தினார். கோயிலில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மூல விக்ரகத்துக்கு’ ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் ‘அபிஷேகம்’ (அதாவது சிலையில் தண்ணீர் ஊற்றுதல்) நடத்துகிறார்கள். இந்த ‘அபிஷேக தீர்த்தத்தை’ கிண்டியிலுள்ள ‘கிங் இன்ஸ்டியூட்’ எனும் ஆய்வு மய்யத்துக்கு சோதனைக்கு அனுப்பினார், அந்த ஆய்வாளர். அதில் நோய் உண்டாக்கும் கிருமிகள் இருப்பதை தனது ஆய்வில் பதிவு செய்தார். இந்த ‘அபிஷேக நீரை’ தலையிலும் வாயிலும் போட்டுக் கொள்வதை உடல்நலம் பேணும் எவராவது ஏற்றுக் கொள்ள முடியுமா?
பெரியார் முழக்கம் 28072016 இதழ்