பனகல் அரசர் தந்த பதிலடி

மருத்துக் கல்லூரியில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனர்கள் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அமுல்படுத்தி வந்தார்கள். ‘மருத்துவம் படிக்க ஒரு மாணவர் விண்ணப்பித்திருந்தால் அவருக்கு கட்டாயம் ‘சமஸ்கிருதம்’ தெரிந்திருக்க வேண்டும்’ என்று விதி உருவாக்கினார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்தவர், சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த பனகல் அரசர் இராமராயர். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி உத்தரவிட்டார்.

1923 முதல் 1926 வரை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். கோயில்களை பார்ப்பனர் பிடியிலிருந்து மீட்க அற நிலையப் பாதுகாப்பு சட்டம் கொண்டு  வந்தது உள்ளிட்ட பல சீர்திருத்த சட்டங்களைக் கொண்டு வந்ததால் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானார்.

ஒரு கல்லூரி வரவேற்பில் அவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பார்ப்பனர்கள் ‘சமஸ்கிருத’த்திலே வரவேற்பு பத்திரம் வாசித்தனர். பனகல் அரசருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்ற மமதையிலும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு சமஸ்கிருதம் அறிந்திருக்க தேவையில்லை என்று உத்தரவிட்ட எரிச்சலிலும் பார்ப்பனர்கள் செய்த ஏற்பாடே இது.

பனகல் அரசரோ இதற்கு சரியான பதிலடி தந்தார். தனது பதில் உரையை சமஸ்கிருதத்திலேயே பேசினார். பார்ப்பனர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் பனகல் அரசர் சமஸ்கிருதப் புலமைப் பெற்றவர் என்ற உண்மை பார்ப்பனர்களுக்கு தெரியாது.

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...