பொருள் தெரியாத உளறல்!
மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அர்த்தம் புரியாமல் வேதம் படித்த தனது அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்:
ஒன்பதாவது வயது முதல் ஆறாண்டு காலம் ரிக் வேதம் முழுவதையும் மனப் பாடமாகப் பயிலுவதற்காக நான் செல வழித்தேன். குடும்பப் பாரம்பரியத்தோடு ஒட்டிய ஒரு ஏற்பாடு இது. அறுபது ஆண்டு களுக்கு முன்னால் அது நடை பெற்றது.
நம்பூதிரிகள் ரிக்வேதிகள், யஜுர் வேதிகள், சாமவேதிகள் என்று பிரிக்கப்பட் டுள்ளனர். அந்தந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண் பிள்ளைகள் இளமையில் ஒரு முறையாவது அவர்களுக்குரிய வேதங்களை குருவிடமிருந்து நேரடியாகக் கேட்பதும் சுயமாகப் பாராயணம் செய்வதும் கட்டாய மாகும். அவர்களில் ஒரு பிரிவினராவது அவரவர் வேதங்கள் முழுவதையும் பாகம் பாகமாக திரும்பத் திரும்ப பாராயணம் செய்து மனப்பாடம் செய்து கொண்டனர். அவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் மனப்பாடமாகப் பயிலுவதைத் தவிர நாங்கள் உச்சரிப்பதன் பொருள் என்ன என்று இந்தச் சிறுவர்களோ அவர்களின் குருமார்களோ அறிந்திருக்க வில்லை. எனக்கும் புரியவில்லை. வெறும் உச்சரிப்பைக் கொண்டே சொந்த ஆன்மாவும் உலகம் முழுவதும் நலம் பெற தங்களுக்கு உதவக்கூடிய ஏதோ ஒரு சக்தி அந்த வேத சுலோகங்களில் அடங்கியுள்ளது என்பதே நம்பிக்கை.
இதுபோன்ற வேதங்கள் போதிப்பதும் பயிலுவதும் சரிவர நடத்துவதற்கான மடங்கள், கோவில்கள் முதலிய அமைப்புகள் உள்ளன. அவைகளுக்குச் சொந்தமாக சொத்துக்களும் உண்டு. அங்கெல்லாம் தங்குவதற்கும் உணவருந்துவதற்குமான ஏற்பாடுகள் ஆசிரியர்களையும் மாணவர் களையும் அங்கு ஈர்த்தது. இவ்வாறு நம்பூதிரி களின் சமூக கலாச்சார வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியை அர்த்தம் புரியாத வேத உச்சரிப்புகளுக்கும் பயிற்சிக்கும் செல வழிக்கப்படுகிற காலம் இது. நம்பூதிரி சிறுவர்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கத் தொடங்கிய பின்னரும் இது ஓரளவுக்கு நீடித்தது; இன்றும் நீடிக்கிறது.
இதற்கு மாறுபட்ட இன்னொரு அம்ச முள்ளது; நம்பூதிரிமார்களைத் தவிர வேறு யாருக்கும் வேதங்கள் பயிலுவதற்கோ உச்சரிப்பதற்கோ தகுதியில்லை. தகுதியற்ற ‘கீழ் ஜாதிக்காரர்கள்’ தகுதியுள்ளவர்கள் செய்கின்ற வேத உச்சரிப்புகளைக் கேட்பதுகூட ‘பாவமானது!’ தகுதியுள்ள நம்பூதிரிகளிலேயே பெண்கள் ஆண்கள் வேதம் உச்சரிப்பதைக் கேட்கலாமே தவிர சுயமாகக் கற்பதற்கோ உச்சரிப்பதற்கோ தகுதியற்றவர்களாவர்! சில பிரிவுகளைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள்கூட ஒருமுறை குருவிடமிருந்து நேரில் கேட்டு பாராயணம் செய்யலாமே தவிர சுயமாக வேதங்களைக் கற்றறியக் கூடாது!
அதாவது, சமூகத்தில் மிகச் சிறுபான்மை யோரைத் தவிர மிகப் பெரும்பாலோருக்கு வேதங்கள் உச்சரிப்பதும் கற்பதும் கற்பிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
– ஈ.எம்.எஸ். எழுதிய ‘வேதங்களின் நாடு’ நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)