சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! சமஸ்கிருதத்தில் அறிவியலா?

சமஸ்கிருதத்தில் பல அறிவியல் கருத்துகள் இருக்கின்றன என்கிறார்கள். கண்டம் விட்டு கண்டம் பாயும் – விமானங்கள் குறித்து சமஸ்கிருதத்திலேயே நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர் என்று பேசினார் பிரதமர் மோடி! மனிதன் கற்பனையில் கண்ட கனவுகளும், அதில் உருவான எழுத்துகளுமே அறிவியலுக்கான ஆதாரங்கள் ஆகிட முடியாது. கோட்பாடு (தியரி), சோதனை (எக்ஸ்பெரிமென்ட்), கண்டறிதல் -இம் மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடுதான் அறிவியல்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் விமானங்கள் வேத காலத்தில் பறந்திருக்க முடியுமா? எரிபொருள் இல்லாமல் விமானம் பறக்க முடியாது. இரப்பர், அலுமினியம்  போன்ற பொருள்கள் இல்லாமல் விமானத்தையே வடிவமைத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘பெர்னூலி’ கொள்கை, நியூட்டனின் விதிகள் தெரியாமல் பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலே வந்திருக்க முடியாது.

“எல்லாம் நம்மிடத்திலே ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் தொலைந்து போய்விட்டன” என்று பதில் கூறலாம். அது அறிவியலுக்கு எதிரானது. தொலைந்து போவது அவ்வளவு எளிது அல்ல. மனிதன் தனக்குப் பயன்படக்கூடிய வகையில் இருந்த எந்தக் கண்டுபிடிப்பையும் தொலைத்துவிட்டதாக சரித்திரம் இல்லை.

தமிழர்கள் வியக்க வைக்கும் அணைகளை கோயில்களை கட்டி யிருக்கிறார்கள் என்பதும் உண்மை தான். இவற்றுக்கு அறிவியல் தேவை இல்லை. தொழில்நுட்பம்தான் தேவை. அறிவியல் வேறு; தொழில் நுட்பம் வேறு. இந்தத் தொழில் நுட்பம் பரம்பரைப் பரம்பரையாக வருவது.

கலிலீயோவுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளில் 17ஆம் நூற்றாண்டில்தான் நவீன அறிவியல் பிறந்தது. தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டுகளானாலும் அப்படியே நிற்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விடுகின்றன என்பது உண்மை. இதற்கு எளிமையான பதில் இருக்கிறது. பெரிய கோயிலைக் கட்டியவர்கள் இன்று இருந்தாலும் உலகமே பாராட்டும் கட்டிடங்களை தந்திருப்பார்கள். அவர்களுக்கு தாங்கள் செய்யும் தொழில் மீது அவ்வளவு மரியாதை. முழுமை அடையும் வரை மீண்டும் மீண்டும் முயன்று  அன்றைய தொழில் நுட்பத்தில் உச்சத்தைத் தொட் டார்கள். ஆனால் பரம்பரையாகப் பெற்ற அந்த தொழில் நுட்பத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லை. இன்றைக்கு அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பிரிக்க முடியாது. தொழில்நுட்பம் இல்லை என்றால் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் வந்திருக்காது. அறிவியல் இல்லை என்றால் தொழில்நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் மட்டுமே அறிந்திருந்த காலத்தை இப்போது கருத்தில் கொண்டு முன்னோர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று பேசுவதை கைவிட வேண்டும். சமஸ்கிருதத்தில் அறிவியலைத் தேடுவது வீண் முயற்சி. இன்று உலகில் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்கும் சமஸ்கிருதம் அடிப்படையாக இருந்தது இல்லை.

அப்படி எந்த ஒரு விஞ்ஞானியும் தனது கண்டுபிடிப்புக்கு சமஸ்கிருதமே அடிப் படை என்று அறிவிக்கவும் இல்லை.

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...