சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

20.9.1927 அன்று திருச்சியில் பார்ப்பனக் கல்வி நிறுவனமான தேசியக் கல்லூரியில் காந்தியார் பேச வந்தார். பார்ப்பனர்கள் அவருக்கு சமஸ்கிருதத்தில் எழுதி வரவேற்பு பத்திரம் வாசித்தார்கள். காந்தியார் பேச எழுந்தார். பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, ‘இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள்’ என்று கேட்டார். வெகுசிலரே கையை உயர்த்தினார்கள். “மிகப் பெரும்பாலாருக்கு சமஸ்கிருதம் தெரியாதபோது, அந்த மொழியில் ஏன் வரவேற்பு பத்திரத்தை தயாரிக்க வேண்டும்?” என்று  கேட்டார். பார்ப்பனர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ‘வரவேற்புரையை தமிழில் எழுதியிருக்கலாம். வேண்டுமானாhல் அதன் மய்யக் கருத்தை இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ கூறியிருக்கலாம்’ என்றார். கூட்டம் முடிந்து திரும்பும்போது உடன் வந்த காகா கலேல்கர்  (இவர்தான் முதன்முதலாக அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் தலைவராக இருந்தவர் – மராட்டிய பார்ப்பனர்),  காந்தியிடம் இது குறித்து கேட்டார். -“உங்களுக்குத்தான்  சமஸ்கிருதம் பிடிக்குமே; அப்படி இருந்தும் ஏன் எதிர்த்தீர்கள்?”  அதற்கு காந்தியார் சொன்ன பதில் இது: “எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களின் சார்பாக இந்த வரவேற்பு பத்திரத்தை வாசித்துக் கொடுத்தார்கள். எனவே அவர்களுக்குப் புரியக் கூடிய மொழியில் அதைத் தயாரித்திருக்க வேண்டும்” என்று கூறிய காந்தி, அடுத்து கூறியதுதான் மிகவும் முக்கியமானது. “இப்பகுதியில் ‘பிராமணர், பிராமணரல்லாதார் இயக்கம்’ நடந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் எதிரொலியாகத்தான் வரவேற்புரையை சமஸ்கிருத்தில் எழுதியிருக்கிறார்களோ என்று நான் அய்யப்படுகிறேன். அதனால்தான் என் வருத்தத்தை வெளிப்படுத்தினேன்.” பெரியாரின் சமஸ்கிருத பார்ப்பன எதிர்ப்பு இயக்கம், பார்ப்பனர்களை எந்த அளவுக்கு ஆத்திரமடைய செய்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

(ஆதாரம்: ‘ம.பொ.சி.யின் தமிழகத்தில் பிற மொழியினர்’ நூல்)

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...