சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரிக்கும் வள்ளலாருக்கும் ‘சமஸ்கிருதம்’ தொடர்பாக நேரடி மோதல் நடந்த வரலாறும் உண்டு. ஒரு முறை வள்ளலார், காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்று சங்கராச்சாரி ஓங்கி அடித்துப் பேசியிருக்கிறார். அங்கேயே இதை ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு வள்ளலார் அவரிடம் மறுத்து வாதாடியிருக்கிறார். வள்ளலார் வரலாற்றை எழுதியுள்ள ‘சன்மார்க்க தேசிகன் என்ற ஊரன் அடிகள்’ நூலில் இந்த நிகழ்வை பதிவு செய்திருக்கிறார். ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று நீங்கள் கூறினால் தந்தை மொழி தமிழ் தான் என்று நான் கூறுவேன். தமிழ் இல்லாவிட்டால் பிறமொழிகள் வந்திருக்காது’ என்று பதிலடி தந்திருக்கிறார் வள்ளலார்.  ஊரன் அடிகள் அந்த சம்பவத்தை இவ்வாறு எழுதுகிறார்.

“ஆரிய அரசன் பிரகத்தனுக்கு – தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக், கபிலன் குறிஞ்சிப் பாட்டினைப் பாடியதைப் போல் ஆரியமொழி மட்டுமே நன்கு உணர்ந்த சங்கராச்சாரிக்கு தென்மொழி, வட மொழி என்ற இரண்டு மொழிகளிலும் கடல்போல் அதன் நிலை கண்டுணர்ந்த முழுமை யான அறிவு படைத்த வள்ளலார், தமிழ் குறித்து அப்போதே ஒரு உரையை செய்து தமிழின் செவ்வியை (சிறப்பை) செவியறி வுறுத்தி (உரைக்கும்படி) அருளினார்” – என்று ஊரன் அடிகள் பதிவு செய்துள்ளார்.

சமஸ்கிருதத்தை எதிர்த்து தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள் வடமொழியிலும் ஆழமான புலமை மிக்கவர். சொல்லப் போனால் சங்கராச்சாரியை விட சமஸ்கிருதத்தில் கரை கண்டவர். தமிழ்நாட்டில் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மறைமலை அடிகள் எழுதிய கட்டுரை ஒன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் (அன்றைய 11ஆம் வகுப்பு) பாடமாக வைக்கப்பட்டது.

அந்தக் கட்டுரையில், “உடல்நலம் கருதி யாரும் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக பிள்ளைகளுக்கு அது கூடவே கூடாது. வயிற்றில் வலியைத்தான் அது உண்டாக்கும்” என்று கூறி இருந்தார்.

பார்ப்பனர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடுகளில் கண்டனக் கடிதங்களை பார்ப்பனர்கள் எழுதிக் குவித்தார்கள். அதற்காக அண்ணா அஞ்சிடவில்லை. இத்தகைய புகார்களை ஆராய டாக்டர் மு.வரதராசனார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். பாட நூல்களை ஆய்வு நடத்திய அந்த குழு,

“மறைமலை அடிகளாருடைய கருத்து மொழியியல் அடிப்படையில் கூறப்பட்டதாகும். இதிலே எதிர்ப்பதற்கு ஏதும் இல்லை” – என்று தனது அறிக்கையில் அறிவித்துவிட்டது

பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

You may also like...