சீமானின் அநாகரீகம்: பாண்டேயின் பார்ப்பனியத்துக்கு கழகம் கண்டனம்
‘தந்தி’ தொலைக்காட்சியில் மூத்த பொதுவுடைமைவாதி அருணனை ஒருமையில் இழிவாகப் பேசிய சீமானையும், இதை கண்டிக்காத ‘தந்தி’ தொலைக்காட்சி நெறியாளர் பாண்டேயையும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை.
‘தந்தி’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பேராசிரியர் அருணனை அருவருக்கத்தக்க வகையில் தடித்த வார்த்தைகளால் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் போது அதற்கு தக்க பதிலை, தன் நிலைப் பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துக்கு தக்க பதில் சொல்ல இயலாத நிலையில் ஒரு மூத்த பொதுவுடமைவாதியை நோக்கி, ‘உனக்கு தத்துவம் என்ன உள்ளது?’ என கேட்பதும், ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசுவதும், மோசமாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத் தக்கவையாகும். தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் என்றெல்லாம் பேசிக் கொண்டு இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வதுதான் பண்பாடா?
இந்த விவாதத்தின் நெறியாளராக இருந்த பார்ப்பனர் ரங்கராஜ் பாண்டே விவாதத்தில் தடித்த வார்த்தைகள் வரத் துவங்கும் போதே அதனை தடுத்து பங்கேற்பாளர்களை நெறிப்படுத்தும் தன் பணியைச் செய்யாமல் அதனை வேண்டுமென்றே வளரவிட்டு மோதவிடுவது என்பதும், அதை இரசித்துக் கொண்டு புன்னகையோடு இருப்பதும் இரண்டு ஆடுகள் மோதும்போது வழியும் இரத்தத்தைக் குடிக்கக் காத்திருக்கும் ஓநாயைத்தான் நினைவூட்டுகிறது. இதுதான் பார்ப்பன சூழ்ச்சியும் ஆகும்.
விவாதத்தில் வார்த்தைகள் கோபமாக வரத்துவங்கும்போதே நெறியாளர் ரங்கராஜ்பாண்டே அதனைத் தடுத்திருந்தால் பேராசிரியர் அருணன் கூட கோபமான சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்க்கச் செய்திருக்க முடியும். ஆழமான கருத்துக்களை நிதானமாக பொது விவாதங்களில் முன்வைக்கும் பேராசியர் அருணன் கூட கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவிற்கு பார்ப்பனர் ரங்கராஜ் பாண்டே அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமை, இதுபோன்ற சூழலைத் திட்டமிட்டே உருவாக்குகின்றாரோ என்கிற அய்யத்தைத் தான் எழுப்புகிறது. ரங்கராஜ் பாண்டேவின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தொடர்ச்சியாக விவாத நிகழ்ச்சிகளில் இவர் இவ்வாறு நடந்துகொள்வதும் தொடர் நிகழ்வாகும்.
ஊடகத்துறையை நிர்வகிப்பவர்கள் நெறியாளர்களை உள்நோக்கம் இல்லாமல் பணி செய்பவர்களாகவும், தங்கள் பணியை ஊடக அறம் சார்ந்து செயலாற்று பவர்களாகவும் பார்த்துக்கொள்வது அவசியமானதாகும். விவாதங்களில் கலந்து கொள்ளும் சீமான் போன்றோரும், இந்துத்துவ அமைப்புகளைச் சார்ந்தோரும் நாகரீகமாக விவாதிப்பதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழி வகுக்கும்.
பெரியார் முழக்கம் 10032016 இதழ்