தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?
பார்ப்பனக் கொழுப்புடன் பேசி வரும் பா.ஜ.க. எச். ராஜா, தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் வழக்கமான திமிரோடு பேசினார். தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும், தேசியக் கொடியை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் அதை இந்த தேசத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் ‘ஹிட்லர்’ குரலில் மிரட்டினார்.
‘இவாள்’களின் தேச பக்தி, தேசியக் கொடி எனும் துணிக்குள்தான் பதுங்கிக் கிடக்கிறது. மற்றபடி தேசத்தின் ‘இறையாண்மை’யை சர்வதேச நிதி மூல தனத்திடமும், பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களிட மும் தாராளமாக அடகு வைப்பார்கள். ‘தேசியக் கொடி’யின் கீழே அமர்ந்து கொண்டு இதற்கான அடிமைப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பார்கள். அந்த அடிமைப் பத்திரத்துக்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். ‘அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கே’ என்று தேசபக்தியோடு கூறிக் கொள்வார்கள். ரவிசங்கர் என்ற ஆன்மீகப் பார்ப்பன வியாபாரி, யமுனை ஆற்றுப் படுகையில் சுற்றுச் சூழல் விதிகளுக்கு எதிராக ‘உலக கலாச்சார விழா’ என்று பல ஆயிரம் கோடி செலவில் கூத்தடிக்க அரசு அனுமதி கிடைக்கும். பசுமைத் தீர்ப்பாயம் அதற்காக ரூ.5 கோடி அபராதம் விதித்தாலும் பரவாயில்லை. அதையும் மீறி நாட்டின் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள மறுத்தாலும், பிரதமர் மோடி தாராளமாகக் கலந்து கொள்வார். பாகிஸ்தான் உள்ளிட்ட 35 நாடுகளிலிருந்து பல இலட்சம் பேர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு கும்மியடித்து கும்மாளம் போடலாம்.
இந்த கும்மாளத்துக்கு இந்திய இராணுவத்தையும் சேவைக்கு அனுப்புவார்கள். பாலம் போடுவதிலிருந்து கூடாரம் அடிப்பது வரையிலான உடல் உழைப்பு வேலைகளை இராணுவம் செய்யும். இவையெல்லாம் ‘அவாள்’ பார்வையில் தேசபக்தி சேவை!
“இராணுவத்தினரையே இழிவுபடுத்துகிறானா கன்யாகுமார்? அவன் ஒரு தேச துரோகி” என்று பாய்ந்து குதறும் பார்ப்பன பரிவாரக் கும்பலை கேட்கிறோம், ஒரு பார்ப்பன ‘ஆன்மிக’ வியாபாரி நடத்தும் ‘கலாச்சார’ கும்பமேளா கூத்துக்கு கூடாரம் அடிக்க ஒரு நாட்டின் இராணுவத்தை அனுப்ப லாமா? இராணுவத்திடம் மண்வெட்டியையும் கடப்பாரையையும் கொடுத்து குழி தோண்ட சொல்வதைவிட இராணுவத்தினருக்கு வேறு அவமதிப்பு இருக்க முடியுமா?
இந்தியாவின் தேசிய மய வங்கிகளில் மக்கள் சேமிப்பு நிதியில் ரூ.9000 கோடியை ‘ஆட்டையை’ போட்டுவிட்டு இலண்டனுக்கு பறந்துவிட்டார், விஜய் மல்லய்யா என்ற பார்ப்பன பெரு முதலாளி. இந்த மல்லய்யா எந்தத் தவறும் இழைக்காத ‘புத்தனின் பேரன்’ என்று தொலைக்காட்சி விவாதங் களில் வெட்கம் கெட்டுப்போய் நியாயப்படுத்து கிறார்கள், பார்ப்பன ‘மேதாவி’கள்! போபோர்ஸ் பீரங்கி ஊழலின் புரோக்கர் குத்ரோச்சியையும், ஒலிம்பிக் விளையாட்டு ஊழலில் சுருட்டிய லலித் மோடியையும், போபால் விஷவாயுக் கசிவில் குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரன் ஆண்டர்சனை யும் தப்பி ஓட வழி வகுத்தது காங்கிரஸ் ஆட்சி! இப்போது அருண் ஜெட்லி, விஜய் மல்லய்யாவை நாங்கள் தப்பி ஓடச் செய்தது மட்டும் தவறா என்று காங்கிரசிடம் எதிர் கேள்வி கேட்கிறார். ‘தேசபக்தி’ லாவணி நடக்கிறது. தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு தேசத்தின் சொத்துக்களை திருடலாம்; ‘வந்தே மாதம்’ என முழங்கிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங் களுக்கு ‘சலாம்’ போடலாம்! இந்த சுரண்டலை தட்டிக் கேட்டால், இத்தகைய போலி ‘தேச பக்தி’ எங்களுக்கு வேண்டாம் என்றால், உடனே ‘தேசத் துரோகி’ முத்திரை குத்தி விடுவார்கள்.
சரி; தேசியக் கொடி பிரச்சினைக்கே வருவோம். மூவர்ணக் கொடிக்காக மூச்சுத் திணற முக்கிக் கொண்டிருக்கும் ‘ராஜா’க்கள் பதில் சொல்லட்டும்.
இந்திய தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ். ஏற் கிறதா? பதில் சொல்! ஆர்.எஸ்.எஸ். நாக்பூர் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏன் பறக்க விடவில்லை? பதில் சொல்! ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் தேசியக் கொடி ஏன் ஏற்றப்படு வதில்லை? பதில் சொல்! தேசியக் கொடிப் பற்றி ஆர்.எஸ்.எஸ். கருத்தை ஏன் மறைக்கிறீர்கள்? நாங்கள் சொல்லட்டுமா? அசோக சக்கரம் பதித்த மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தபோது, ஆர்.எஸ்.எஸ். அதிகார பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ என்ன எழுதியது? “இந்தியா இந்துக்களின் நாடு; இது பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதை ஏற்க முடியாது. செங்கோட்டையில் பறக்க வேண்டியது காவிக் கொடிதான்” என்று எழுதியது. உண்டா? இல்லையா?
மேலும் அந்த ஏடு எழுதியது, “இந்திய மக்கள் மூவர்ணக் கொடியை கையில் ஏந்த வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்து மக்கள் இதற்கு ஒருபோதும் மரியாதை தர மாட்டார்கள். மூன்று வர்ணம் என்று கூறுவதே தீங்கானது. மூன்று வர்ணத்தை முன்னிறுத்துவது மோசமான மனநிலையை உருவாக்கும். நாட்டிற்கு கேடு பயக்கும்.” (‘ஆர்கனைசர்’ ஜூலை 17, 1947) இதற்கு ‘தேசபக்தி’ ராஜாவின் பதில் என்ன?
சரி; ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சுமார் 30 ஆண்டு காலம் தலைவராக இருந்து, அந்த அமைப்புக்கு ‘தத்து வங்களை’ நூலாக வடித்துத் தந்த சித்பவன் பார்ப்பனர் கோல்வால்கர் இது குறித்து என்ன எழுதினார்? அதையும் பார்ப்போமா?
“நம்முடைய தலைவர்கள் நாட்டிற்கு புதிய கொடியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் காப்பி அடிக்கிறார்கள். நமது நாட்டுக்கு சொந்தமான கொடி இல்லையா? கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டு களாக நமது நாடு தேசியச் சின்னம் இல்லாமலா இருந்தது? சந்தேகமின்றி நமக்கு தேசியச் சின்னம் நிச்சயம் உண்டு. இவர்கள் ஏன் இந்த முட்டாள்தனமான வேலையைச் செய்கிறார்கள்?” (ஆதாரம்: கோல்வால்கர் நூல் ‘சிந்தனைக் கொத்து’)
பெரியார் முழக்கம் 17032016 இதழ்