ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை
பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார்.
செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை:
மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார உறவைத் துல்லியமாக வகுத்தளித்த மனிதகுல பேராசான் காரல் மார்க்ஸையும் நினைவு கூர்ந்து.
மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று கொண் டிருக்கிற பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தின் தலைவர் தோழர் பூர்ணிமா உள்ளிட்ட அத்தனை பேருக்கும் ஆதித் தமிழர் பேரவையின் சார்பில் நெஞ்சார்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் மரியாதைக்கு உரிய சொந்தங்களே ! பொதுக்கூட்டத்தில் சில செய்திகளை சொல்வதற்கு முன்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பற்றி நான் பல்வேறு மேடைகளில் சொல்லும் செய்திகளை சொல்லி துவங்க ஆசைப்படுகிறேன். பொதுவாக இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது என்று சொன்னால், இரண்டு பேர் சந்தித்து கொண்டால் அவருடைய பெயரை – ஊரை தெரிந்து கொண்டதற்குப் பிறகு, அவரைப் பற்றி உடனடியாக தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியாக அவருடைய ஜாதி இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். நம்மோடு உறவாடுகிற – நம்மோடு பேருந்தில் பயணிக்கிற – நம்மோடு பேசுகிற -–பழகுகிற – தேநீர் குடிப்பவராக இருந்தால் கூட அவர் என்ன ஜாதியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள்.
முன்பெல்லாம் ஒருவருடைய ஜாதியை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரின் அப்பா பெயரைக் கேட்பார்கள்; தாத்தாப் பெயரைக் கேட்பார்கள்; வசிக்கும் தெருவின் பெயரைக் கேட்பார்கள், ஆக மொத்தத்தில் ஜாதியை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமை அவ்வளவு கடினமாக இல்லை; ஒருவரின் பெயரை தெரிந்து கொண்டவுடன், அவர் பணியாற்றும் இயக்கத்தின் பெயரை கேட்டாலே போதும்; அவருடைய ஜாதி தெரிந்துவிடும். ஆனால் கெடு வாய்ப்பு என்னவென்றால், திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றுகிறேன் என்று சொன்னால் மட்டும் அவர் எந்த ஜாதியை சார்ந்தவர் என்றே கண்டுபிடிக்க முடிவதில்லை. அவ்வாறான ஒரு ஜாதி அடையாளமில்லாத அமைப்பாக இன்றைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மகத்தான திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடையிலே புரட்சியாளர் பெரியாரின் பிறந்த நாளையொட்டி நாம் பேசுகிற போது, அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும், எழுத்தாளர் மதிவாணன் அவர்களும் பல மேடை களில் இந்த செய்தியை சொல்லியிருக்கிறார்கள். அண்ணன் தலித் சுப்பையா அவர்கள் கூட தன்னுடைய இசை நிகழ்ச்சியின் நடுவிலே மூதறிஞர் இராஜாஜி பற்றி குறிப்பிட்டார்; இராஜாஜி போலவே இன்னொரு தலைவர் இருந்தார், அவர் காந்தி. காந்திக்கும், இராஜாஜிக்குமெல்லாம் கருத்தில் பெரிய வேறுபாடு இருக்காது; அவர்களிருவரும் ஒத்த கருத்துள்ள தலைவர்கள். காந்தியும், இராஜாஜியும் ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு நேர் எதிரான தலைவர்களாக பெரியாரும், அம்பேத்கரும் இருந்தார்கள். ஆனால் நீங்கள் நினைத்துப் பாருங்கள், பெரியாரின் பிறந்த நாளை மக்களாகிய நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புரட்சி யாளர் அம்பேத்கர் பிறந்த நாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் காந்தியின் பிறந்த நாளையும், இராஜாஜியின் பிறந்த நாளையும் மக்கள் என்றுமே கொண்டாடுவதில்லை; அரசாங்கங்கள் மட்டும் கொண்டாடிக் கொண் டிருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே போய் சொல்லவேண்டுமானால் காந்தியும் இராஜாஜியும் பெரும்பாலான மக்கள் நம்புகிற கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்தவர்கள் தான். அம்பேத்கரும் பெரியாரும் பெருவாரியான மக்கள் நம்புகிற கடவுளை இல்லை என்று மறுத்தவர்கள். காந்தியும் இராஜாஜியும் மக்களின் நம்பிக்கைக்கு வேண்டுமானால் ஆதரவாக இருந்திருக்கலாம், மக்களின் நலனுக்கு எதிராக இருந்தவர்கள். பெரியாரும் அம்பேத்கரும் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக இருந்திருக்கலாம், ஆனால் மக்களின் நலனுக்காக இருந்தவர்கள் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் பெரியாரும் அம்பேத்கரும் இன்று கொண்டாடப் படுகிறார்கள்.
பெரியாரையும் அம்பேத்கரையும் கொண் டாடுவது என்பதிலே நமக்குள் சில வேறுபாடுகள் இருக்கின்றது. அண்ணன் தலித் சுப்பையா அவர்கள் சொன்னதைப் போல நெற்றியிலே பட்டையடித்துக் கொண்டுபோய் பெரியார் சிலைக்கு மாலைப் போடுவது – முளைப்பாரி எடுத்துக்கொண்டு போய் அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற நிகழ்வுகளை விட மோசமாக யாராலும் பெரியாரையும் அம்பேத்கரையும் இழிவுபடுத்திவிட முடியாது. அம்பேத்கரை பொருத்தவரையில் மூன்று விதங்களில் இன்றளவும் அவமதிக்கப்படுகிறார். ஒன்று, தன் காலம் முழுவதும் எந்த இந்துத்துவ கருத்தை எதிர்த்துப் போராடினாரோ புரட்சியாளர் அம்பேத்கர், அந்த இந்துத்துவக் கருத்தைத் தாங்கிப் பிடிக்கிற சங்பரிவார கும்பல் போடுகின்ற மலர் மாலைகளாலே புரட்சியாளர் அம்பேத்கர் அவமதிக் கப்படுகிறார். அதைப் போலவே இந்தியாவின் முதல் சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அம்பேத்கர்; தனது அமைச்சர் பதவியை தூக்கியெறிகிற போது, இங்குள்ள அத்துனை ஜாதிப் பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் -–கல்யாணம் செய்து கொள்வதிலே உரிமை வேண்டும் – கல்யாணம் செய்ததை இரத்து செய்துகொள்கின்ற உரிமை வேண்டும் – பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யக்கூடிய ஒரு ஆணையம் வேண்டும் என்பதற்காக தனது அமைச்சர் பொறுப்பைத் தூக்கியெறிந்த அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டவர் களின் செருப்பு மாலைகளால் அவமதிக்கப்படுகிறார். இந்துத்துவக் கருத்தியல் தான் இந்த மக்களை ஒடுக்கப்பட்டவனாக – தலித்தாக – பள்ளனாக -– பறையனாக – சக்கிலியனாக வைத்திருக்கிறது என்று காலம் முழுவதும் தான் தேர்ந்தெடுத்தக் கருத்துகளால் சொன்ன அம்பேத்கரை, தலித் மக்கள் முளைப்பாரி எடுத்து – பாலாபிஷேகம் செய்து கொண்டாடு கிறார்கள் என்று சொன்னால், அதுவும் அம்பேத்கரை அவமதிக்கும் செயல்தான். ஆக இன்றைக்கு பெரியாரை,–அம்பேத்கரை ஆகச் சரியாக புரிந்து கொண்டு அவர்களுடைய கனவுகளை நனவாக்க வேண்டும் என்று நாம் சிறிதேனும் ஆசைப்படு வோமேயானால், அந்தப் போராட்டங்கள் அனைத்தும் ஜாதிய அமைப்பைத் தகர்க்கின்ற போராட்டமாக, ஜாதிய வாழ்வியலை பின்பற்றுவதைத் தடுக்கின்ற போராட்டமாக இருக்கவேண்டும். எனவே தான் திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த ஆண்டிலே ஜாதிய வாழ்வியல் எதிர்ப்பு பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டார்கள்.
இன்றைக்கும் உணவிலே ஜாதி இருக்கின்றது; உடையிலே ஜாதி இருக்கின்றது; இசையிலே ஜாதி இருக்கின்றது; நடனத்திலே ஜாதி இருக்கின்றது; சுடுகாட்டிலும் கூட ஜாதி இருக்கின்றது. ஜாதிய வாழ்வியலை கடைபிடிப்பதை வெட்கப்படுகிற ஒன்றாக மாற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை செய்தது. இன்னும் சொல்லப் போனால், ஜாதியை கடைபிடிப்பது என்பது ஒரு தலைமுறை தான். இன்றைக்கு பிறந்து ஒரு வயதான ஒரு தலித் குழந்தையை விட்டால் பிற்படுத்தப்பட்ட தெருவுக்குள் ஓடுகிறது. ஒரு பிற்படுத்தப்பட்ட குழந்தை தலித் வீட்டில் சமைக்கும் உணவை சாப்பிடுகிறது. ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெரியவனாக ஆனவுடன் கல்யாணம் செய்து கொண்டவுடன் ஒரு தலித் வீட்டு திருமணத்திற்குப் போனாலும் அங்கு சமைக்கும் உணவை சாப்பிடாமல், கடையில் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துவிட்டு வருகிற போக்கு நீடிக்கிறது. ஆக ஒரு ஒன்றரை வயது குழந்தையின் மூளையில் இல்லாத ஜாதி, முப்பது வயது இளைஞனுக்குள் வருகிறது என்று சொன்னால், ஒரு முப்பது ஆண்டுகள் ஜாதியை மறைத்தாலே ஜாதி ஒழிந்துவிடும். ஆனால் முப்பது நூற்றாண்டுகளாக இந்த ஜாதி அமைப்பு நீடித்து வந்து, இன்றைக்கு வரை இருந்து கொண்டிருக்கிறது.
இங்கு இருக்கும் தமிழ்த் திரைப்படங்களெல்லாம் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது? எல்லா பாசத்தையும் விட, தங்கையின் மீதான பாசத்தைத் தான் பெரிய பாசமாக சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் அந்த பாசத்தையே இப்போது கேள்விக் குள்ளாக்கியுள்ளார்கள். நெல்லையில் அபிராமி என்கின்ற ஒரு பெண், முருகன் என்ற ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டதற்காக – அபிராமி பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் என்பதற்காக, முருகன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் என்பதற்காக – அபி ராமியை அழைத்து வந்து கொலை செய்திருக்கிறார்கள்; இரண்டு அண்ணன்கள் இன்று நெல்லை சிறையில் இருக்கிறார்கள் என்றால் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு வரை ஜாதி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. எனவே இப்படிபட்ட ஜாதி அமைப்பை தகர்க்கும் வேலைகளை செய்வதுதான் பெரியாருக்கும் –அம்பேத்கருக்கும் நாம் செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த மாதத்திலே சுயமரியாதை சமதர்மப் பரப்புரையை மேற் கொண்டார்கள்.
அம்பேத்கரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், தலித் விடுதலையைப் பற்றி பேசுகிற ஒருவர், தீண்டாமை ஒழிப்பைப் பற்றி பேசுகிற ஒருவர், பகுத்தறிவையோ, தனிஉடமைக் கொடுமைகளையோ பேச மறுக்கிறார். அதே போல பொதுவுடமைப் புரட்சியாளர்கள் கடவுள் மறுப்பையும், தலித் விடுதலையையும் பேச மறுக்கிறார்கள். ஆனால் திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி ஒழிப்பையும், தனிஉடமை கொடுமைகளையும் எதிர்த்து சுய மரியாதை சமதர்மப் பரப்புரை பயணம் மேற்கொள் கிறது என்று சொன்னால் கருப்பையும், நீலத்தையும், சிகப்பையும் இணைக்கிற வேலையாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடைகள் இருக்கிறது என்பதை நாம் பெருமையோடு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. ஆக இன்றைக்கு வரைக்கும் நாம் அறிந்தோ, அறியாமலோ – தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றி வருகின்ற ஜாதிய வாழ்வியல் சிந்தனைகளை நம்முடைய மூளையில் இருந்து அகற்றுகின்ற போராட்டங்களை – இந்த ஜாதி அமைப்பைக் காப்பாற்றுகின்ற அகமண முறைகளை ஒழித்து, ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்துவது தான் மிகச்சரியான ஜாதி ஒழிப்புப் போராட்டமாக இருக்கும் என்ற அடிப்படையிலே திராவிடர் விடுதலைக் கழகம் எடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் இரட்டைக்குழல் துப்பாக்கிப் போல ஆதித் தமிழர் பேரவை துணைநிற்கும் என்று கூறி விடைபெறுகிறேன்.
தோழர் நீலவேந்தன் எழுதிய கடிதம்
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தீவிரவாசகரான நீலவேந்தன் அவ்வப்போது கடிதம் எழுதி கருத்துகளைத் தெரிவிப்பவர் தோழர் நீலவந்தன். கடைசியாக செப்டம்பர் 10 ஆம் தேதி அனுப்பிய கடிதம்:
பெருமதிப்புக்குரிய ஆசிரியருக்கு,
அன்பான வணக்கங்கள். செப்.5, 2013-ம் நாளிட்ட முழக்கம் இதழ் கண்டேன். நாட்டின் பொருளாதார மீட்புக்கு முடங்கிக் கிடக்கும் கோயில் நகைகளைப் பயன்படுத்து என்ற முழக்கமும், மேற்கண்ட கோரிக்கைக்காக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த கழகம் எடுத்த முடிவும் அரசியல் துணிச்சலின் உச்சம். மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணிக்கு அனுமதி வழங்கியதன் வாயிலாக, அரசியல் சாசனத்தின் 19(1)(ஏ), 51(ஏ)(எச்) பிரிவுகளை உத்தரவாதப்படுத்தி, அனைத்து பகுத்தறிவு இயக்கங்களுக்கும் சேர்த்து உரிமை பெற்றுத் தந்த கழகத்துக்கும், கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோருக்கும் நன்றிகள் பல.
– நீலவேந்தன், ஆதித் தமிழர் பேரவை.
பெரியார் முழக்கம் 03102013 இதழ்