கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

சேலம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் சாக்குகளில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை நனைத்து கொளுத்தி வீசிய குற்றச்சாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், அருண்குமார், அம்பிகாபதி ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

இதே வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவல்துறை இணைத்து கைது செய்தது.

4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ), 120(பி), 307, 285 உடன் தமிழ்நாடு பொதுச் சொத்து பாதிப்புச் சட்டப் பிரிவு 3(1), 1908 ஆம்ஆண்டின் எரிபொருளால் ஆபத்து களை உண்டாக்கக்கூடிய சட்டத்தின் பிரிவு 3, ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் அயராது செயலாற்றுகின்றனர்.

சென்னையில் மயிலை, மந்தைவெளி அஞ்சலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்டுள்ள நான்கு தோழர்களும் புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

விடுதலை இராசேந்திரன் சந்தித்தார்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணியை பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், நவம்பர் 7 ஆம் தேதி அன்று சிறையில் சந்தித்தார். மண்டல செயலாளர் மேட்டூர் சக்தி, மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேலு உடனிருந்தனர்.

‘குடிஅரசு’ தொகுப்புகளையும், பெரியாரியல் தொடர்பான நூல்களையும் கழகத் தலைவர் சிறையில் படிக்கிறார். மாவட்டந்தோறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி முகாம்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கழகம் தொடங்கியுள்ள மக்களை சந்திக்கும் திட்டத்தில் தோழர்கள் முனைப் போடு பங்காற்றி, நிதி திரட்டிடவும், இயக்க உறுப்பினர்களை அதிகரித்திடவும் செய லாற்றுமாறு கேட்டுக் கொண்டார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிடும் மலர் குறித்தும் கேட்டறிந்தார். சிறைபட்டுள்ள கழகத் தோழர்களின் விடுதலையை வலி யுறுத்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங் களை கழக சார்பில் நடத்தத் தேவையில்லை. காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் கோரிக்கையையே முன்னிறுத்தலாம் என்று கூறினார். மாலை 5 மணிக்கு வழக்கறிஞர்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் சந்தித்துப் பேசி வரு கிறார்கள்.

நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மாவட்டக் கழக விடுதலை சிறுத்தை பொறுப்பாளர் களுடன் சிறையில் சந்திக்கச் சென்றபோது அது சந்திப்பு நாள்  அல்ல என்று கூறி அனுமதிக்க மறுக்கப்பட்டது. அதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிறைவாசல் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...